உள் நுழையும் விழிகளுக்கு

படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்..அது படைப்பாளிக்கு தாய்பால் மாதிரி.

Followers

About Me

My photo
வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது. உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்..நம் உயிராம் தமிழோடு பிணைத்துக்கொள்ளுங்கள்.

Saturday, February 28, 2009

உச்சந்தலையில் ஒரு வரைபடம்


உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை கட்டுரையின் தொடர்ச்சியாய் இனிவரும் ஏழு கட்டுரைகளும் மலர்கிறது.
உயிர்வாழ்வின் ஆதாரமையங்களாய் செயல்படும் இந்த ஏழு யோகசக்கரங்களை பற்றி விரிவாக அலசுவதே இக்கட்டுரைகளின் நோக்கமாகும்.

இந்த முயறசியை- சகஸ்ராரம் தொடங்கி மூலாதாரம் வரையிலான இறங்கு பாதையிலும் அல்லது மூலாதாரம் தொடங்கி சகஸ்ராரம் வரையிலான ஏறுப்பாதையிலும் செய்யமுடியும். நான் இங்கு இறங்கு பாதையையே தெறிவு செய்கிறேன் அதற்கான காரணத்தை பின்னர் விளக்குவேன்.

சகஸ்ராரம்- சக்தி மையத்தின் உச்சிபுள்ளி. அதனால்தான் அதற்கு இடம் உச்சந்தலையில். அடிப்படையில் எனக்கொரு பார்வை உண்டு. இவ்வுலகில் மனிதத்திற்குதான் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். மதங்களும், மனித சக்திகளை ஏதோ ஒரு வகையில் துண்டாடும் எந்த ஒரு அம்சத்திற்குமே இரண்டாம் அல்லது மூன்றாம் இடமே. ஞானிகள் கண்ட ஒவ்வொரு தீர்க்கதரிசனங்களும் மனிதனுக்கானவையே தவிர மதங்களுக்கானவை அல்ல. அடுத்து, மதம் என்பது நம் தனி இருப்பை காட்டிக்கொள்ள விசாரத்தின் அடிப்படையில் நாம் எடுத்துக்கொண்ட அறிவின் முதலாளித்தனம் எனவும், விருப்புக்குட்பட்டு காரணமின்றியோ காரணத்தோடோ..சார்பு நிலையில் பிறக்கும் நேசம் எனவும் பார்க்கிறேன். மனித சக்திகளை ஒன்றிணைக்காத மதம் எனக்கு தேவை இல்லை.

பல்வேறு காரணங்களால் வேறுபட்டு திரியும் மனிதத்தை ஒரு குறிப்பிட்ட கட்டுக்குள் வைப்பதற்கான சான்றுகளை நிறுவுவதே என் பிறப்பின் பணியாய் தெரிகிறது. நான் இவ்வுலகை மூன்று அடிப்படைகளில் பார்க்கிறேன்.
1.உடல்+உயிர்+மனம் = மனிதன்
2.உடல்+உயிர்-மனம் = விலங்குகள், மரம் செடி கொடிகள்,புழு பூச்சியினங்கள்.(வரையரைக்குள்ளான மனம் கொண்டவை)
3.உடல்-உயிர்-மனம் = ஜடப்பொடருட்கள்.

மேற்சொன்ன மூன்று வாழ்வு குழுமங்களும்- அவை வாழ்வதற்குரிய ஏதுவை ஏற்படுத்தி தரும் பஞ்சபூத்ங்கள் தவிர்த்து வேறொன்றை இவ்வுலகில் புதிதாய் கொண்டுவர இயலுமா என்பது சாத்தியமற்றது. இன்னும் கொஞ்சம் வேடிக்கையாக சொன்னால், செல் போன் பயன்படுத்துகிறோம்.
அதை instrument என்கிறோம், அதாவது உடல். அது பயன்பாட்டுக்குள் இருக்க வேண்டுமானால் அதன் மின்கலம்(battery) மின்னூட்டம் தரப்பட்டிருக்க வேண்டும். அந்த பேட்டரிதான் உயிர்,உடல் உயிர் இருந்து விட்டால் போதாது. நமக்கான தனி பதிவை தரும் 'சிம்கார்ட்' என்பது நம் மனம்.
இந்த மூன்றும் இருந்துவிட்டால் செல்போனை பயன்படுத்த முடியுமா..? சேட்டிலைட் சிக்னல் வேண்டும்- அது இறைவ்னின் அருள். அருள் மட்டும் போதாது- நம் பதிவுக்கான நல்வினை இருப்பு என்கிற ரொக்க இருப்பு(balance)
இருந்தால் மட்டுமே செல்போன் பயன்பாடு சாத்தியம்.

இதில் எந்த ஒன்றில் குறை ஏற்படினும், செல்போன் ஜடப்பொருள் ஆகிவிடும். மனித வாழ்வும் இத்தகையதே. நாம் ஜடத்தன்மை ஏகிவிடக்கூடாது என்பது என் அவா. உலகில் பிறந்து வளர்ந்து, அறிவில் நிமிர்ந்து,மொழியாலும்,இனத்தாலும்,நிறத்தாலும்,கலாச்சாரத்தாலும், இன்னும் என்னென்ன பிரிவினைகளுக்குள் பிரிந்திருக்கும் மனிதர்களை இந்த உடல்+உயிர்+மனம் = மனிதன் என்கிற ஒருங்குறிக்குள் கொண்டுவந்துவிட முடியும் என நம்புகிறேன்.

சகஸ்ராரம் இந்தியாவில் பிறந்த இந்துக்களுக்கு மட்டுமா..? உலகில் உள்ள அத்தனை மனிதர்களூக்குமா எனும் கேள்வியை எழுப்புகையில் நம் ஆதி தமிழ் ஞானிகளின் தீர்க்கங்கள் அத்துனையும் உலகப்பொதுமை வாய்ந்தது என்பது நமக்கு புலப்படும்.

சகஸ்ராரத்தை இந்திய துணைக்கண்டத்தின் உச்சியில் இருக்கும் இமயத்தின் உச்சியில் இருக்கும் கயிலாய மலையாய் நமக்கு காட்டி வைத்தது - நம் சக்தியை உச்சிக்கு உயர்த்தவேண்டும் என்கிற குறியீடு என்பதாகவே நான் கருதுகிறேன்.

சரி சகஸ்ராரத்திற்கு வருவோம். எண் சாண் உடலுக்கு பிரதானமான சிரசில், தலையின் உச்சியில் இதற்கான இடம்.
குறிப்பாக எந்த இடம்..?தலை உச்சியில் கேசம் சுழித்துக்கொண்டு நிற்கிறதே அந்த இடம். 
ஒரு வரைபட தாளில் நான்கு அச்சுக்கோடுகளைப் போட்டால்., அவை ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளி உருவாகும் அல்லவா..? அப்படி ஒரு வரைகோட்டு புள்ளி நம் உச்சந்தலையில் இருக்கிறது. நாம் அதை பேசு வழக்கில் 'உச்சிக்குழி'என்று சொல்லி வருகிறோம். பிறந்த குழந்தைக்கு அது துடித்துக்கொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு அதன் துடிப்பு நின்று போய்விடும்.இதன் சூட்சுமம் என்ன..? கருவில் இருக்கும் குழந்தை நிபந்தனைக்கு உட்பட்ட கால உச்சவரம்பில் 300 நாட்கள் தாயின் வயிற்றில் இருக்கும். குழந்தைக்காக அம்மா சாப்பிடுவாள், குழந்தைக்கு தேவையான அத்தனையும் அம்மாவிடமிருந்து தரப்படும். இது சார்பு வாழ்கை. கால நிர்ணயத்திற்கு பிறகு, இயற்கையின் உந்துதலோடு குழந்தை மண்ணுக்கு வந்ததும்,சார்பு வாழ்விலிருந்து, சுதந்திர வாழ்வுக்கு தயாராகிறது.

சார்பின் முடிவும்- சுதந்திரத்தின் துவக்கமும் நடந்தேறுவது எப்போது தெரியுமா..? தொப்புள்கொடி வெட்டப்படுகிறதல்லவா..?அப்போதுதான். வெட்டப்பட்ட தொப்புள் துளையின் வழியேதான் ஜீவன் என்கிற உயிர்காற்று முதன்முதலாய் உடலுக்குள் எடுத்து செல்லப்பட்டு நெற்றியில் வைக்கப்படுவதாக நம் முன்னோர்கள் அறிந்துள்ளனர்.
" உச்சிக்கு கீழே உள் நாக்குக்குமேலே
வச்ச பொருளின் வகை அறிவாரில்லை.." என பாடப்பட்டது அந்த் ஜீவன் குறித்துதான். அந்த முதல் காற்று உள்னுழைந்த அதிர்வில் குழந்தை காட்டும் எதிர்வினைதான் அழுகை. அப்படி குழந்தை அழாவிட்டால், சுற்றி இருக்கும் நாம் அனைவரும் அழவேண்டியிருக்கும்.
இந்த ஜீவனை நீங்கள் 'சிம் கார்ட்' என வைத்துக்கொண்டாலும் சரி, அல்லது 'ஹார்ட் டிஸ்க்' என வைத்துக்கொண்டாலும் சரி. பயன்பாட்டிற்காக இனி அவற்றை programme செய்யவேண்டும். எவ்வகையான மென்பொருளையும் பயன்படுத்த operating system install செய்யப்பட வேண்டும். அந்த OS தான் நம் மனமாகும். அந்த மனதை வடிவமைக்க இயற்கை செயல்படும் பாதையே நம் தலை உச்சியின் உச்சிகுழி. programme download ஆனதும், வாழ்வை எதிர்கொள்ள மனம் வடிவமைக்கப்பட்டதும் உச்சிகுழி 'சீல்' ஆகிவிடும்.

அந்த இறை துலங்கும் மேடையைத்தான் நாம் சகஸ்ராரம் எனும் பெயரில் அழைத்து வருகிறோம். மேலே எரிந்த பொருள் கீழே விழும் என்பது ஈர்ப்பு விதி. இது இங்கு நம் சக்திக்கும் பொருந்தும். மேலே இருந்து நமக்கு வரும் உயிராற்றல் எனும் சக்தி வெகு இயல்பாய் கீழே அடுத்த மையங்களுக்கு ஈர்க்கப்படுவது விதி. கீழே விட்டுவிடாமல் தூக்கிப்பிடித்து மேலேயே வைத்திருப்பது முயற்சி.விதியை மதியால் வெல்லுதல் என்பது இதுதான்.
சகஸ்ரார தளம் என்பது இறைதளம். அவ்விடத்தில் மனதை கட்டிப்போட்டு வைத்தால் நாமும் இறைத்த்ன்மையை பெறுகிறோம். கடவுள் உருவங்களில் அவர்களின் தலைக்கு பின்னால் தெரியும் ஒளிவட்டம் குறிப்பிடுவது சகஸ்ரார புள்ளியின் ஆளுமையையே ஆகும்.நாமும் அங்கிருந்தால் நமக்கும் ஒளிவட்டம் வாய்த்துவிடும்.

தெரிந்தோ தெரியாமலோ இந்த மையத்திற்கு நாம் அனைவருமே அதீத மரியாதை தந்து வந்திருக்கிறோம். உங்களுக்கு வியப்பாக இருக்கும்..,தலையில் இருக்கும் உச்சிகுடுமி, பூச்சூடுதல்,தலையில் அணியும் தொப்பி,பெண்கள் இட்டுக்கொள்ளும் முக்காடு,கோவிலில் நாம் பெறும் சடாரியின் ஆசீர்வாதம், துளசி தீர்த்தத்தை உசியில் தடவிக்கொள்ளும் பழக்கம்..இதெல்லாமே வழி வழயாக மனிதர்கள் இந்த புள்ளியின் செயல்பாட்டை புனிதப்படுத்த செய்யும் வழக்கங்கள் ஆகும்.

இன்னும் சொலப்போனால் நம் மனமே சுருள்வில் அலையாக உடலுக்குள்ளும் அல்லாமல்,வெளியேயும் அல்லாமல் இங்குதான் துலங்குகிறது. அது வாங்கியாக (receiver) செயல்படுகிறது. கோவில் கர்ப்பகிரக கோபுரத்தின் உச்சியிலிருக்கும் கலசம் போன்றது அந்த இடம்.

நம் மனம் துலங்கும் சகஸ்ரார மையத்தை ஒருமுறை தொட்டுப் பாருங்கள். ஒருவேளை சூடாக இருக்கலாம். கணினி சூடாகிவிட்டால் hang ஆகிவிடுமல்லவா..?அதைபோல நம் உச்சி தலையின் ரிசீவர் சூடாகிவிடாமல் இருக்கவே..அம்மாவும் பாட்டியும் வாரத்துக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க சொல்கிறார்கள். நம்மை யாராவது புகழ்ந்தால் உச்சி குளிர்ந்து போகிறோம்.

சகஸ்ராரம் என்பது எண்ணங்களற்ற அமைதி பெருவெளியில் நம்மை இருக்க வைப்பது. இறையின் இயற்கை பெருநிலையில் நம்மை லயப்படுத்திக்கொள்வது. அப்படி செய்யத் தவறினால் மனம் ஒரு மையம் கீழிறங்கி 'ஆக்ஞாவுக்கு' வந்துவிடும். நம் வாழ்கை துவங்கிவிடும். போராட்ட களத்தில் நாம் குதிப்பது அடுத்த மையத்தில். அதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

Friday, February 27, 2009

உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை

தங்கநாற்கர திட்டமெல்லாம் நம் நாட்டில் மிக சமீபகாலமாக நடந்துகொண்டிருக்கும் சங்கதிகள். நம் உடலுக்குள்ளான திட்டமெல்லாம் ஏற்கனவே மிக அருமையாய் போடப்பட்டுவிட்டது.ஆனால் நாம்தான் இன்னும் அதில் முறையான பயணம் மேற்கொள்ளவில்லை என சொல்லலாம்.
நம் உடல் -சிவில்,மெகானிகல்,எலக்டிரிகல்,எலக்ட்ரானிக்ஸ், பயோ இன்னும் என்னென்ன பொறியியல் தத்துவங்கள் உண்டோ, அத்தனை பொறியாளர்களும் ஒன்றுகூடி உருவாக்கின மாதிரி அப்படியொரு டிசைன்.

நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே இருக்கிறது. அது நம்முள் இறங்கி-நாம் எண்ணவும்-எண்ணியதை பேசவும்-பேசியதை செய்யவும்-பேசியதால்,செய்ததால் உண்டான விளைவுகளை எதிர்கொள்ளவும், ஆற்றலை ஒவ்வொரு கணமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது. எது ஒன்று வெளியிலிருந்து வந்தாலும் அதற்கு முறையான பாதை தேவை.பாதையில்லா பயணம் துன்பத்தில் முடியும். இன்றைய நாட்களில் கூட நம் அன்றாட வாழ்வில்- உயிருக்கு துடிப்போரை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும்,அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கும் அவை தொய்வின்றி பயணிக்க எவ்வளவு நெரிசலான பாதையாக இருந்தாலும்..வழி ஏற்படுத்தி தரும் மனப்பாங்கை பெற்றிருக்கிறோம்.

உடலுக்குள்ளும் எந்த விதத்திலும் நெரிசல் ஏற்பட்டுவிடாத வண்ணம்..இயற்கை செய்து வைத்திருக்கும் அமைப்புகள் அனேகம். அது ஒரு அதிசயம் என்றால், அதை கண்டு சொன்ன முன்னோர்கள் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.ஆம் நம் உடலுக்குள்ளான நெடுஞ்சாலையை கண்டு சொன்னதோடு மட்டுமல்லாமல், அதை விரிவுபடுத்தி,நெறிபடுத்தி,பன்னெடும் நாட்கள் அக்கறையாய் தவமிருந்து,  அவற்றின் செயல்பாடுகளை உற்று நோக்கி, பிரமானங்களாய் நமக்கு உருவாக்கி தந்திருக்கிறார்கள்.


முதலில் சாலை எங்கிருந்து எதுவரை..?
உச்சந்தலையில் இருந்து - தொடையிரண்டும் சந்திக்கும் புள்ளிவரை.
கபாலத்தில் துவங்கி- முதுகு தண்டுவடத்தின் வழியாய் போட்ப்பட்டிருக்கிறது இந்த சாலை.
உயிரும் உடலும் இயங்க தேவையான அத்தனை சக்தியும் இதன் வழியேதான் உடலின் மற்ற பாகங்களுக்கு 
கிளை சாலைகளான நரம்பு,நாளம் வழியே பிரித்தனுப்படுகிறது.நாம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு வசதியான எல்லாமே நமக்கு இருக்குமாறு இயற்கை நம்மை வைத்திருக்கிறது. வெட்டாத நகம் நீண்டு வளர்ந்துகொண்டே இருக்கும். வெட்டாத முடியும் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் நம் புருவங்களுக்கு மீதான முடிக்கற்றை, ஒரு நிலைக்கு மேல் ஐ.ஆர்.8 உரம் பட்டாலும் வளராது. காரணம் அதுதான் நமக்கான இசைவாய் இயற்கை தந்தது. ஒருவேளை தலைமுடி போல் புருவ முடியும் வளர துவங்கினால், நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது கடினம்தான். ஒரு வணக்கம் சொல்லக்கூட ரொம்ப சிரமப்பட வேண்டும். நகம் வளர்கிற மாதிரி நம் பற்கள் வளர்ந்தால் என்ன ஆகும்..?
காலையில் பல் தேய்ப்பதன் கூடவே- ஒரு ராவு பட்டையை வைத்து தினமும் அது வளராமல் தேய்க்க வேண்டியிருக்கும்.
உண்மையில் இந்த மாதிரியான சோதனைகளை நாம் பெறவில்லை. அதுதான் இறைவன் நம்மேல் வைத்திருக்கும் கருணை.

சாலை சரி அதில் பயணிப்பது யார்..?- சாட்சாத் நம் மூச்சு காற்றுதான். நம் ஒவ்வொருவருக்கான வெளி உலகத்தொடர்பை ஏற்படுத்தி தருவது சுவாசம்தான். உடல் இயங்க உயிர் ஒரு காரணி- உடல் வழியே உயிர் முறையாய் இயங்க மனம் ஒரு காரணி. மனம் இயங்க மூச்சே முக்கிய காரணி. "மூச்சடங்கிய நிலையில் மனதுக்கு ஓட்டமில்லை" என்பது பகவான் ரமணரின் கூற்று. ஆக நாசியின் வழியே நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி காற்றானது உச்சந்தலையிலிருந்து ,அடிவயிற்றின் மூலாதாரம் வரை தொடவேண்டும். அப்படி தொட்டு பயணிக்கவே இப்படி ஒரு நெடுஞ்சாலை

பயணபாதை விவரம்.
1.சகஸ்ராரம்
2.ஆக்ஞா
3.விசுக்தி
4.அனாகதம்
5.மணிபூரகம்
6.சுவாதிஷ்டானம்
7.மூலாதாரம்.

யோகவியல் வல்லுனர்கள் இதை ஆதார சக்கரம் என்கிறார்கள். சக்தி மையங்கள் என்கிறார்கள். இந்த ஒவ்வொரு புள்ளியும் ஒவொரு வகையான நாளமில்லா சுரப்பிகளை ஆதாரமாகக்கொண்டு இயங்கிவருகின்றன.

இம்மாதிரியான விஷயங்களை நான் கேள்விப்பட்டபோது உங்களைவிட மிகவும் சந்தேகப்பட்டேன்.தேடலும் அனுபவமும் குருவருளும், திருவருளும்தான் விடைகள் சொல்லின.
முதலில் இந்த மையங்களை உணர்ந்த நம் முன்னோர்கள் இதனை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதியது உண்மையா..? ஆம்..உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் அதை நாம் தொடர்ந்து நடைமுறைப்படுத்த எல்லா ஏற்பாடையும் செய்திருக்கிறார்கள் என்றால் மிகை இல்லை.எத்தனையோ திருமணங்களுக்கு நாம் சென்றுள்ளோம், நம் இல்லங்களிலியே நடத்தியும் இருகிறோம், இப்போது நாம் காட்டும் பார்வை உங்களுக்கு வியப்பாககூட இருக்கும். மணப்பெண் அலங்காரத்தில் நகை அணிவித்தல் என்பது இன்றியமையாத ஒன்று. அந்த மணப்பெண்ணின் நகை அணிகளை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இன்றைய கட்டுரையின் தேவை நிறைவேறிவிடும்.

1.உச்சந்தலையில் அணிவது "பில்லை"- சகஸ்ராரத்திற்கான அணிகலன்.
2.அங்கிருந்து அதை இணைத்து- நெற்றியில் தொங்கவிடும் "நெற்றி சுட்டி"ஆக்ஞாவிற்கான அணிகலன்.
3.கழுத்தில் நெக்லெஸ் என ஒன்று அணியப்படுகிறதே, அது விசுக்திக்கான அணி.
4.சங்கிலியோடு- ஒரு பதக்கத்தை இணைத்து (chain+dollar) மார்புவரை அணிகிறோமே அது "அனாகதத்திற்கான அணீ.
5.மார்புக்கும் இடுப்புக்கும் இடையில் - அழுத்தி பிடித்தமாதிரி அணியப்படும் "ஒட்டியாணம்"-மணிபூரகத்துக்கான அணி.
6.இடையில் தளர்வாய் தொங்கவிட்டமாதிரி அணியும் "மேகலை"- சுவாதிஸ்டானத்திற்கான அணி.
7.முலாதாரத்திற்கான அணியை பிள்ளை பருவத்திலேயே போட்டு பார்த்துவிடுகிறோம்.

மனமும் எண்ணமும்- புத்தியும்,சித்தியும்-விழிப்போடு தொட்டு செல்லவேண்டிய இந்த புள்ளிகளில்தான் இப்படி தங்கத்தை பூட்டி பார்க்கும் பழக்க்ம்.இப்போது அதன் முக்கியம் புரிந்திருக்கும் அல்லவா..?

அந்த ஏழு புள்ளிகளில் அப்படி என்ன நடக்கிறது..?
யோகவியலாளர்கள் எண்ணற்ற விளக்கங்களை த்ருகிறார்கள். ஆனால் பரிட்ச்சார்த்தமாக எனக்கு தோன்றுவதை பகிர்கிறேன் (எதனோடும் முரண்படாமல்) 
சகஸ்ராரம் -எண்ணங்களற்ற இறைப்பெரு நிலை- சுகமாக சும்மா இருக்கும் இடம்.
ஆக்ஞா -நான் எனும் சுயம் அடையாளப்படும் இடம்
விசுக்தி- நான் எனது அடையாளத்தை எண்ணிய எண்ணத்தின் மூலம்- பேச்சாய்-மொழியாய் வெளிப்படுத்தும் மையம்.
அனாகதம்-நான் பேசியதை அன்னிய காதுகள் கேட்டன - அவர்கள் என் பேச்சிற்கு உடன்பட்டோ,முரண்பர்ட்டோ காட்டும் பிரதிபலிப்பை உணரும் மையம்.
மணிபூரகம்-வெளி உலகி பிரதிபலிப்பை கிடைத்த பிரசாதமாய் ஏற்று செரிக்கும் சுய ஏற்பு மையம்.
சுவாதிஷ்டானம்-செரிமானத்திற்கு பின் சக்கைகளை, சத்துகளை தனிதனியே பிரிக்கும் மையம்
மூலாதாரம்- ஒரு அனுபவத்திலிருந்து சக்தி பெற்று- அடுத்த செயலுக்கு ஊக்கம் பெறும் மையம்.

இவ்வுல வாழ்க்கையில் -பொருளையும் கருத்தையும் நாம் இப்படித்தான் உள்வாங்குகிறோம்.உணர்கிறோம்,செரிக்கிறோம், தன்வயமாக்குகிறோம்.,சக்தி பெறுகிறோம்.இறைக்கு அர்ப்பணிக்கிறோம்

இந்த பின்வரும் சொற்களை கொஞ்சம் கவனித்து பாருங்கள்- 
"நான் நானாவே இல்ல" "நெனச்சிகூட பார்க்க முடியல"
"என்னால விழுங்க முடியல..""(i can't gulf it)  ,"என்னால ஏத்துக்க முடியல"  "என்னால செரிக்க முடியல" 

நான் நானா இல்லன்னா -பைத்தியம்
நெனச்சிக்கூட பார்க்க முடியாத நிலை -குழப்பம்
விழுங்க முடியலன்னா- வாந்தி.
ஏத்துக்க முடியலன்னா- மாரடைப்பு.
செரிக்க முடியலன்னா -டைரியா - இதெல்லாம் வெளியே இருந்து வரும் நம் உடலுக்குள் வரும் பொருளுக்கானது மட்டுமல்ல - கருத்துக்களுக்கும் ஆனது.

பயணம் சுகமானால்-எந்த மையத்திலும் குழப்பமில்லை. இது குறித்து இன்னும் பேசுவோம் எதிர்வரும் நாளில்.
 

அடங்குவோம் - அடக்குவோம்


இறைவா..,
என்னையொரு 
பானையாய் வனைந்து 
பொன் பொருள் என 
நீ இட்டு நிரப்பியும் 
போதாமல் 
இன்னும் உன்னிடம் 
குறையிரந்துகொண்டே இருக்கிறேன் 
நான்.

கீதாஞ்சலியில் ரவீந்திரனாத் தாகூர் எழுதிய கவிதையின் ஒரு பகுதியின் மொழிபெய்ர்ப்பு இது. நம்மை காலக்குயவன் வனைந்த பானையாய் பார்க்கும் பார்வை நிறைய பேரிடத்தில் வெளிப்பட்டிருகிறது.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டுவந்தான் ஒரு தோண்டி-அதை
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி.

இந்த வரிகளும் நமக்கு மிகவும் பரிச்சயமானதே.
பரம்பொருளிடம் குறையிரந்து நிற்றலும்- குயவன் தந்த பானையை வாழும் முறை தவறி போட்டுடைத்தலும் நம்மில் மிக இயல்பாகவே நிகழ்ந்து வருகிறது.
ஆங்கிலத்தில் ஒருவர் இறந்து போனதை நாசூக்காய் தெரிவிக்க- " kicked the bucket.."- என்றொரு பதத்தை பயன்படுத்துவார்கள்.
நாம் ஒருவர் மரணித்ததை எப்படி தெரியப்படுத்துகிறோம்..?
'இறந்துட்டார்' 'காலமாயிட்டார்' 'செத்துட்டார்' 'மறைஞ்சிட்டார்' 'சிவலோக பதவி அடைஞ்சிட்டார்' 'வைகுந்த பதவி அடைஞ்சிட்டார்' 'இயற்கை எய்திட்டார்' 'இறைவனடி சேர்ந்துட்டார்'
இப்படி நிறைய இருந்தாலும்- வழக்கத்தில் இருக்கும் இன்னொரு பதம் 'தவறிட்டார்'

இந்த சொல்தான் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. என்ன தவறிட்டார்..? எதுல தவறிட்டார்..? ஏன் தவறிட்டார்..? என பல கேள்விகளை எழுப்பி பார்த்தபோது- கிடைத்த விடை வியப்பாய் இருந்தது.
அவர் அடங்க தவறிட்டாராம்.

அடக்கம் அமரருள் உய்க்கும்-அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும்.

அமரருள் நம்மை சேர்க்கும் அடக்கம் வெறுமனே அவை அடக்கம் அன்று. புலனடக்கம், மன அடக்கம், ஆன்ம அடக்கம். ஆம் இவற்றை அடக்காவிட்டால் கிடைக்கும் வெகுமதி ஆரிருள். சாதாரண இருள் அல்ல ஆர் இருள்.
ஆரிருள் என்பது மீண்டும் பிறத்தலாய் இருக்கலாம் என்பது என் ஊகம்.

தன் உயிர் தான் அறப் பெற்றானை-ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.

தன் உயிர் தான் அறப்பெறுதல் என்பது தற்கொலையா..? இல்லை. நம் உயிரை எமன் வந்து எடுத்து செல்லகூடாது. நாம் அவனை அழைக்க வேண்டும். "வாப்பா வந்து எடுத்துக்கோ.."என நிறைவாய் அவனிடம் சேரவேண்டும். விளக்கொளி வேண்டும், வேண்டாம் என நினைக்கும்போது அணைத்துப்போட்டுக்கொள்வது மாதிரி நம் மரணம்..நம் தெளிவில் இருக்க வேண்டும். 

இந்த நிலை சாத்தியமா..? சாத்தியப்பட்டிருக்கிறது..! வாழ்வை தவமாய் எண்ணி வாழ்ந்தவருக்கு. வாழ்வை நிறைவாய்..பற்றற்று வாழ்ந்தவருக்கு.இறையின் முகவரி தேடுதலே வாழ்வின் பயனாய் எண்ணி வாழ்ந்து தேடிக் கண்டவர்களுக்கு.

நிறைவுறா வாழ்வின் முடிவு- நிறைவுறா வாழ்வின் துவக்கமேயன்றி வேறில்லை. புலனட்ங்கி. மெய்யுணர்ந்து, இறையிடம் ஐக்கியப்படாத வாழ்வுமுறை தவறானதே. அதை அறிவிக்கவே..,அப்படி இறந்தவரின் வீட்டு முன் தப்படித்தல்.

கோவில்களுக்கு சென்றால் உள் நுழைந்ததும்-துவஜஸ் கம்பம் என ஒன்றை நாம் பார்க்க முடியும். கருடகம்பம் என்றும் சொல்வதுண்டு. ஏழு அடுக்குகளாக உயர்ந்து- உச்சியில்- குறுக்கான மூன்று செவ்வக சட்டத்தில் வெண்கல மணியை தொங்கவிட்டிருப்பார்கள். அதே கம்பத்தின் கீழ்- இரு திருவடிகளை செதுக்கி வைத்து பலிபீடம் என ஒன்றை வைத்திருப்பார்கள். அங்கு ஆடு, மாடுகளையெல்லாம் பலியிட முடியாது. மனதையும் அதன் மும்மலங்களையும், அந்த பாதாரவிந்தங்களில் சரணாகதியோடு பலியிட்டால்-மனித வாழ்வின் ஆறு ஆதார சக்கரங்களை கடந்து-உச்சியில் பொன்னம்பலத்தில் ஞானமணியோசையை கேட்கலாம்.வாழும்போதே அந்த ஓங்காரத்தின் உட்பொருளை உணரவேண்டும்.உணராமல் மூச்சை நிறுத்தியவர்கள் தவறியவர் பட்டியலில் சேர்க்கப்பட்டு-" வாழும்போதுதான் ஓங்காரத்தை கேட்க தவறினாய்..இப்போதாவது கேள்.." என்பதற்காக, சங்கு,சேகண்டி இதெல்லாம்.
எல்லா சடங்கிற்கும் பின் இறுதி பயணத்திற்கு- வாகனம் நாங்கு பேர் தோளில் ஏறியதும் "கோவிந்தா" என்றோ
"ஒம் நமச்சிவாய" என்றோ விண் முட்ட முழக்கமிடுவது- ஐந்தெழுத்து மந்திரத்தையும், எட்டெழுத்து மந்திரத்தையும் ,அதன் செம்பொருளையும் வாழும் காலத்தில் உணர்ந்தாயா என தெரிய வில்லை. இப்போதாவது கேள் என்பதாக வழினெடுக கோஷமிடப்பட்டு..இறுதியில் அடங்க தவறியவருக்கு நடப்பதன் பெயரே"நல்லடக்கம்"

அடக்கி,அடங்கி, நம் இறுதி நாளை இதுவென அறிவிக்கும் கம்பீரமத்தை இறைவன் அருளால் பெறுவது ஒரு கலை. அதற்கும் அவன் அருள் வேண்டும். முயற்சிப்போமா..?
சொர்க்கமும்,வைகுந்தமும் வாழும்போதே பார்க்கவேண்டியவை என்பது என் கருத்து.

Wednesday, February 25, 2009

நினைவாற்றலின் அறிவியல்


--மனித வாழ்வின் எண்ணிறந்த அம்சங்களில் நினைவாற்றலுக்கு இன்றியமையாத ஓர்
இடம் உண்டு.
இல்லை எனில் கஜினி திரைப்பட கதானாயகன் நிலை நமக்கும் வாய்த்துவிடும்.
அதுவும் தேர்வு காலம் நெருங்கி வருவதால் நம் பெரும்பாலான
வீடுகளில்,"படி..படிச்சதை நல்லா ஞாபாகம் வச்சுகோ..ஏன் மறக்குது.."போன்ற
உரையாடல்களை கேட்கமுடியும்.

நினவாற்றல் என்கிற சக்தி நிரம்பப்பெற்ற மனிதர்கள் அடுத்தவர்களால் மிகவும்
கருத்தூன்றி பார்க்கப்படுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். பத்து இலக்க
தொலைபேசி எண்ணை சட்டென சொல்பவர்,எங்கோ ஒருமுறை பார்த்திருப்போம் அவர்
முகம்கூட நமக்கு நினைவு இருக்காது, அவர் மிக சரியாக நம் பெயரை சொல்லி
அழைப்பார். வியந்துபோய்..அவரது ஞாபக சக்தியை புகழ்ந்தும்,அடுத்தவர்களிடம்
சொல்லியும் பெருமைப்பட்டுக்கொள்வோம்.

தமிழகமுதல்வர் அவர்களின் வாழ்வில் நடந்ததாக ஒரு சம்பவத்தை
நினைவுகூருவார்கள். திமுக ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் பிரசாரத்திற்காக
அவர் சென்றாராம், மழைக்கொட்டியதில் அவரது கார் சேற்றில் சிக்கிக்கொள்ள,
வெளியே இறங்கவேண்டிய சூழல் ஏற்பட,காலை எடுத்து வெளியே வைத்தால் அங்கு
சகதி. உடனே அருகிலிருந்த ஒரு கிராமத்து ஆள் ஓடி வந்து அவரது செருப்பை
காலிலிருந்து கழற்றி, அருகில் தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து  திரும்ப
மாட்டிக்கொள்ள உதவுகிறான்.

கொஞ்சகாலம் கழித்து கலைஞர் அதே மாவட்டத்துக்கு ஒரு கூட்டத்துக்கு
சென்றபோது, கூட்டத்தில் சுற்றி நின்றிருந்த பலரில், யாரோ ஒருவரை அடையாளம்
கண்டு, அருகில் அழைத்து "அப்ப ஒருமுறை என் காலணியை சுத்தம் செய்து
தந்தவர்தானே நீங்கள் "என்றாராம் அந்த கிராமத்து அளைப் பார்த்து.
எப்படி இருந்திருக்கும் எண்ணீப் பாருங்கள்.

நேர்மறையாக ஒருவர் மனதில் நாம் தங்கும் நிகழ்வு என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம்.
நினைவாற்றல் என்பது மனித உடலில் கட்புலனாகா மனதோடு
சம்மந்தப்பட்டிருக்கிறது. அதேசமயம் மற்ற புலன்கள் மனதுக்கு ஒத்திசைய
வேண்டிய அவசியமும் இருக்கிறது.
நினைவுக்கிடங்கான மூளைக்கு பத்திரமாக ஒருவிஷயத்தை கொண்டுசெல்ல எந்த
கருவியும் கிடையாது.
செயலின் மூலம்தான் இதை நிறைவேற்றியாகவேண்டும்.

உடல் உணர்ந்ததை,கண் பார்த்ததை,காது கேட்டதை,நாசி முகர்ந்ததை மனமும்
உணர்ந்து தன்னுள் தக்க வைக்க வேண்டும்.
உடல் நிலத்தன்மை வாய்ந்ததால்- அது ஈர்ப்பு சக்தி உடையது. உடலுக்கு ஈர்ப்பாற்றல்.
கண்ணில் ஒளியாற்றல்- செவிகளில் ஒலியாற்றல்-
மனம் முழுக்க முழுக்க காந்த ஆற்றலின் தன்மையில் இயங்கக்கூடியது.
வேதாத்திரி மகரிஷி அவர்கள்தான் இதற்கு வான்காந்தம்,உயிர்
காந்தம்(bio-magentism) என முதன் முதலில் பெயரிட்டு அழைத்தார்.

ஒலிபதிவு நாடாவில் காந்தத்தின் உதவியோடு ஓசை பதியப்பட்டு மீண்டும்
காந்தத்தின் உதவியோடே வெளி எடுக்கப்படுவதை நாம் அறிவோம். மின்சாரம்
அதற்கு ஊடுபொருளாய் பயன்படுகிறது.
காந்தம் என்பது அதிர்வு அலைகளாய் இயங்கக்கூடியது.(frequency). அந்த அலை
நீளத்தை பொறுத்துதான் ஒன்றின் தன்மை அறியப்படும். உதாரணத்திற்கு, சாதாரண
FM மட்டுமே கேட்ககூடிய ஒரு சாதாரண சின்ன ரேடியோவில், லண்டண் பி.பி.சி.
த்மிழோசை நிகழ்ச்சியை கேட்க முடியாதல்லவா..?
ஆம் அலை நீளத்தைப்பொறுத்துதான்..காந்தம் தன் விளைவுகளை வழங்கும்.

இது நினைவாற்றலுக்கும் மிகப் பொருந்தும். நினைவாற்றலின் அறிவியலை நாம்
என்ன ஆய்வுக்கு உட்ப்படுத்தினாலும் நமக்கு கிடைப்பது ரொம்ப சில
விஷயங்கள்தான்.
இந்த விஷயங்களை அறிந்து மட்டும் வைத்துக்கொள்வதில் எந்த பிரயோசனமும்
இல்லை. உணர வேண்டும்.
நல்ல நினைவாற்றலுக்கு தேவைப்படும் அம்சமங்கள்.

1.கவனித்தல்.(Listening)
ஆம் கவனித்தல்தான் நினைவாற்ற்லுகான முதல் படி. கவனிக்காத ஒன்றை நினைவில்
கொள்ள முடியாது. கவனித்தல் தான் முதல்படி எனும்போதே நமக்கு ஒரு விஷயம்
புலனாகவேண்டும்.கவனித்தல் மட்டுமே நினைவாற்றலை மேம்படுத்திவிடாது. அது
அதன் அடுத்த படினிலைக்கு போகிறது.

2.பதிவு(Recording)
நாம் கவனிக்கிற விஷயங்கள் ஒவ்வொன்றும் பதிவாகிறது. எப்படி பதிவாகிறது
தெரியுமா..? நாம் எந்த அளவுக்கு கவனித்தோமோ அந்த அளவுக்கு. இதில் இன்னொரு
விந்தை பாருங்கள்..கவ்னிப்பு 100% எனில் பதிவும் 100%. ஆனால் கவனிப்பு
80%எனில் பதிவு 40%தான்.
அரைகுறையாக பதிவாகையில் அதற்கும் குறைவான நிலையிலேயே மனம் பதிவு
செய்கிறது. ஒன்றை நாம் அரைகுறையாக கவனிக்கும் போக்கிற்கு இயற்கை தரும்
தண்டனையா எனவும் தெரியவில்லை.

3.இருப்பு வைத்தல்(Retaining)
கவனித்த ஒன்றை- கவனித்த தன்மைக்கு ஏற்ப - மனம் உள்ளுக்குள் இருப்பாக
பொதிந்து வைக்கிறது.
பதிவு நிகழ்ந்த பிறகு அதை இருப்பு வைக்க வேண்டியதுதானே முறை..? இருப்பு
வைப்பது எதற்காக..?

4.திரும்ப கேட்டல்(Recalling)
ஆம் நாம்..திரும்ப கேட்கும்போது தர வேண்டும் அதற்காகத்தான் மனம்
இருப்புகட்டி வைக்கிறது.கவனித்தலும்,பதிவும்,
100 சதவீதம் எனில்
இருப்பும், திரும்ப கிடைப்பதும் சர்வநிச்சயமாக 100 சதவீதமாக இருக்கும்.
அதில் குறைவெனில் உதாரணத்துக்கு கவனித்தல் 80% எனில் பதிவு 40%- இருப்பு
20%- திரும்ப கேட்கும்போது நமக்கு கிடைப்பது 10%தான்.

நம் பிள்ளைகள் தேர்வில் மதிப்பெண்கள் குறைவதற்கு பூரண கவ்னிப்பின்மைதான்
காரணம் என்பதை புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

பூரண கவனித்தலுக்கு உதவக்கூடியவை எவை என ஆய்ந்தால்- கிடைக்கும் விடை
புலன் ஒருங்கிணைப்புதான். கண்கள் கரும்பலகையில் இருக்கும், செவிகள்
ஆசிரியரின் வார்த்தைகளிலும் இருக்கும் என்றாலும் அதே செவிகள் அதே
நேரத்தில் வகுப்பறை சன்னலுக்கு வெளியே வரும் ஓசையையும் கேட்கும்
தன்மைக்கு உட்பட்டது என நாம் அறிய வேண்டும். கண்கள் கரும்பலகையில்
இருந்தாலும், மனக்கண்கள் அதே நேரத்தில் வேறொரு உருவத்தை காணும் அபாயமும்
இயல்பே.
இவற்றை எல்லாம் மீறி ஒருமுகப்பட்ட மனமே ஒரு விஷயத்தை 100% கவனிக்கும்.

ஒருமுகப்படுதல் யார் யாருக்கு சாத்தியம்..?
ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே ஒருமுகப்படுதல் சாத்தியம்.
யார் யாருக்கு ஆர்வம் சாத்தியம்..?
தனக்கென படிப்பவர்களுக்கு மட்டுமே ஒருமுகப்படுதல் சாத்தியம்.
ஆசிரியருக்காக படிப்பவர்கள், பெற்றோர்களின் தொல்லைக்காக
படிப்பவர்கள்,இவர்களுக்கெல்லாம் ஒருமுகப்படுதல் குறைமுகம்தான்.

இது ஏதோ படிக்கும் பிள்ளைகளுக்கான செய்தி என்று நீங்களும் வாளாவிருந்துவிடாதீர்கள்.
ஒரு விழாவுக்குப் போகிறீர்கள்-அங்கொரு நண்பரை பார்க்கிறீர்கள்-அவர்
இன்னொரு நண்பரை அறிமுகப்படுத்திவிட்டு "பேசிக்கொண்டிருங்கள்..
வந்துவிடுகிறேன்" என செல்கிறார்.
அந்த புதியவர் தன்னை உங்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.பெ
யர் சொல்லி
கை குலுக்குகிறார்.
விழா முடிந்து திரும்பும் ஏதோ ஒரு தருணத்தில் அந்த புதியவரிடம்
பேசவேண்டிய சூழலில் அவர் பெயர் மறந்துபோன நீங்கள் அவரிட,
கேட்கிறீர்கள்.."உங்க பேர் என்ன சொன்னீங்க..?"
இப்படி நடந்திருக்கிறதா இல்லையா..? யோசித்துப் பாருங்கள்.
அவர் நம்மிடம் பேசிக்கொண்டிருந்தபோது நாம் முழுமையாக அங்கு இல்லை.
வேறெங்கோ போய் விட்டோம். அதனால்தான் மறதி.

பகவான் ஓஷோவின் உரையை கேட்டிருப்பீர்கள். அவர்து உச்சரிப்பு அப்படி
இருக்கும். ஒவ்வொரு அட்சரமும் தனி தனியே வந்து விழும்.
அவரிடம் ஒருவர் கேட்டார்"தங்களால் எப்படி இப்படி பேஸ் முடிகிறது "என்று.
"நான் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்பவருக்கு முழுமையாய் போய்
சேர வேண்டும் என நினைக்கிறேன். நீங்களும் அப்படி நினையுங்கள். உங்களாலும்
இப்படி பேச முடியும்"என்றாராம் ஓஷோ.

கவனியுங்கள்....கவனியுங்கள்....
.கவனியுங்கள்...!

Sunday, February 22, 2009

ஆடு பாம்பே..!

இந்திய ஆன்மீக தேற்றத்தில் எண்ணற்ற  கட்வுளர்கள். மனித உருவில், ஆண்- பெண் தெய்வங்களாக மட்டுமல்லாமல், அந்த ஒவ்வொரு கடவுளுக்கும் தனிதனியே வாகனங்கள் என்ற பெயரில் விலங்குகள் என ஒரு வித்தியாசமான காட்சியை பார்க்க முடிகிறது.
உலக மதங்களில் எந்த கண்டத்திலும் இல்லாத் அளவுக்கு நம் ஆன்மீகத்தில் விலங்குகளுக்கான முக்கியத்துவம் அளவிடற்கரியது.
பசு முதற்கொண்டு பல்லி, தவளைவரை அனைத்துக்குமே ஆன்மீக முக்கியத்துவம் தந்திருப்பது நாம் மட்டுமே என்றால் மிகை இல்லை.வாகனங்கள் என்ற அளவில் வித்தியாசம் இருந்தாலும், இன்று நம் கட்டுரைக்கு நாம் எடுத்திருக்கும் விஷம் மன்னிக்கவும் விஷயம் பாம்பு.
படையையே நடுங்கவைக்க கூடிய, கொடிய விஷமுள்ள பாம்பு, கடவுளர்களிடம் 'பச்சக்கென்று'ஒட்டிக்கொண்டது எப்படி..?ஆய்வு செய்ய வேண்டிய விஷயமாக எனக்குபட்டது.
சிவனின் கழுத்தை சுற்றி இருந்துகொண்டு அவரது தலையிலேயே சர்வகாலமும் இருக்கிற பாம்பு பற்றியும்,
கண்ணன் ஏறி நின்று நடம் புரிந்த ஐந்து தலை நாகமும், மகாவிஷ்ணுவுக்கு பார்கடலில் மெத்தையாய் விளங்கும் ஆதிஷேஷன் பற்றியும்,அம்மனின் கைகளில் இருப்பதும்,வினாயகனின் இடுப்பில் கட்டபட்டு இருப்பதும், கந்தவேலனின் அரும்பெரும் வாகனமான் மயிலின் காலில் மிதிபட்டிருப்பதுமான ஒரே பாம்பினத்தின் வெவ்வேறு மதிப்பீடுகளை உற்றுனோக்க வேண்டியிருக்கிறது.
மிக சாதாரணமாக ஒரு கருத்தை எல்லோரும் கூறுவதுண்டு.
இந்திய ஆன்மிக பண்பாடு என்பது "மரம்,செடி,கொடி.மண்,மலை,பறவை, விலங்கு,உயிருள்ள பொருள்,உயிரற்ற பொருள் என அனைத்தையுமே தெய்வாம்சம் பொருந்தியதாக பார்ககூடியது" என்று.

எல்லா உயிர்களையும் மதிக்க வேண்டும் என்கிற கருத்தியலுக்கு இது பொருந்தகூடியதுதான் என்றாலும், அதற்குரிய சரியான காரணத்தை காண வேண்டி உள்ளது.
உலக உயிர்கள் அத்தனைக்குமே-நேர்மறையான சக்தியும், எதிர்மறையான சக்தியும் உண்டு.மனிதன் உள்ளீடாக.
நம் முன்னோர்கள் ஒவ்வொன்றையுமே காரணகாரியத்தோடுதான் வைத்திருக்கிறார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.
ஒவ்வொரு விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்து,.மிக அக்கறையோடு குறியீடு ஆக்கி இருக்கிறார்கள்.

பாம்புகள் இன்னமும் பல சந்தேகங்களுக்கு விடை சொல்லமுடியாத ஒரு உயிரினம். பாம்பு மகுடி வாசித்தால் படம் எடுத்து ஆடுவதை நாம் கூட பார்த்திருக்கிறோம்.ஆனாம் பாம்புக்கு காதுக்ள் கிடையாது. பூமியின் மீது பதியப்படும் அதிர்சியை தன் உடல் வழியே உள்வாங்கி உணரக்கூடியது எனும் கருத்தும் உண்டு.

பாம்பு மனிதனுக்கு கட்டுப்படாத (சினிமா பாம்புகள் தவிர்த்து) ஒரு உயிரினம். அதை பழக்கப்படுத்த முடியாது என்பதில் ஆதி மனிதன் எப்படியோ முடிவெடுத்துவிட்டான்.அது இன்று வரை தொடர்கிறது. ஆயினும் ஆன்மீகத்தில் பாம்புக்கு அப்படியென்ன முக்கியத்துவம் தரவேண்டியிருக்கிறது என்பதே நம் கேள்வி.
நம் கலாச்சாரத்தில் பக்தி என்பது ஞானம் பெறுவதற்கான் பயிற்சி களம்.எல்லைஅற்ற அன்பை பெற பக்தி நிலையில் நாம் கவனம் செலுத்தி நாம் செய்யும் அன்பு பயிற்சிதான் ஞானம் அடைவதற்கான படி.

பெருவெடிப்புக்கான (big-bang) தொடர்ச்சியில் உருவான எண்ணற்ற கோள்களில் நாம் கணக்கில் வைத்திருப்பது ஒன்பது. அதில் முழு கிரகங்கள் ஏழு, சாயா எனும் நிழல் கிரகங்கள் இரண்டு. அந்த இரு நிழல் கிரங்கங்களுக்கும் நாம் தந்திருக்கும் வடிவம் பாம்பு.(ராகு,கேது). அவ்வப்போது வந்துபோகும் கிரகணங்கள் இரண்டு. அதில் சந்திரகிரகணம் என்பது நிலவை பாம்பு விழுங்குவதானது.
ஜோதிட உலகின் கூற்றுப்படி- சந்திரன் என்பது மனதின் அம்சம். இங்கிருந்து நம் ஆய்வை கொண்டுசெலுத்தினால் ஓரளவுக்கு இலக்கை அடைய முடியும் என தோணுகிறது. 
பாம்பானது நிலவை விழுங்கும் நிகழ்வை நாம் எப்படி பார்க்கிறோம்,,?
கிரகணம் முடிந்ததும் வீட்டை மெழுகி,அனைவரும் குளித்து,குளிக்கும் வரை சாப்பிடாமல் இருந்து-இப்படி பலபல கருத்தியல்கள்.ஆக நிலவை பாம்பு விழுங்குவது மங்களகரமான விஷயமில்லை.
பாம்பின் அம்சம்- மனதை குறிக்கும் நிலவை விழுங்குதல் கூடாது.
நம் மனதை எந்த பாம்பும் வந்து விழுகிவிடப் போவதில்லை..ஆனால் பாம்பின் அம்சம் விழுங்க வாய்ப்புள்ளது.
பாம்பின் அம்சமென்ன..?
எதிர்மறை அம்சம்- பாம்பு மிகவும் கோபப்படக்கூடியது. அதன் சீற்றமே இதற்கு சாட்சி. பாம்பு தன் எதிரியை வஞ்சம் வைத்து கொல்லகூடியது.அது படமெடுத்தாடும் வேகமானது "நான்"என நிமிர்ந்து நிற்கும் ஆணவத்தின்,தனிமனித ஆளுமையின் குறியீடு.தீண்டியதும் மரணம் தரும் விஷத்தை தன்வசம் கொண்டது.
நம் ஒவ்வொரு கோயில்களிலும் தென் திசைபார்த்து சின்முத்திரை காட்டி அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியை பார்க்கிறோம். அவரது சின் முத்திரை நமக்கு சொல்ல்க்கூடிய செய்தி என்ன..?
"நான் என்கிற ஆள்காட்டிவிரலை, சினம் என்கிற நடுவிரல்,செருக்கு என்கிற மோதிரவிரல்,சிற்றின்பம் எனும் சுண்டுவிரல் இவற்றிலிருந்து விலக்கி, பரம்பொருள் எனும் கட்டைவிரலோடு சேர்த்துகொள்வதே.
"நான்"எனும் சுயம் இருக்கவேண்டிய நிலைப்பாட்டைகுறித்து சிந்தித்த முன்னோர்கள் பாம்பை கையில் எடுத்துள்ளார்கள் எனும் முடிவுக்குவர ஏதுவாய் இருக்கிறது.

பாம்பின் நேர்மறை அம்சம்- தன்னிடம் உள்ள விஷத்தை பிரயோகிக்காமல் அப்படியே வைத்திருக்கும் பாம்பு அதை குறிப்பிட்ட நாளுக்கு பின் மாணிக்க கல்லாக மாற்றுகிறது. மாணிக்கம் ஒளி வீசிக்கூடியது.
மதி, மந்திரம்,மருந்து,மாணிக்கம் என்றொரு வரிசை சொல்லப்படுவதுண்டு.
ஒவ்வொரு மனிதனும் தம்மிடமுள்ள தீயதை பிரயோகிக்காமல் அதை தவமாக மாற்றி ஒளிரூபத்துக்கு மாறவேண்டும்.

இக்கருத்து எனக்கு மிகவும் உடன்பாடாய் உள்ளது.
பார்கடலில் துயிலும் விஷ்ணு வெறுமனே தூங்கவில்லை. அவர் அறிதுயிலில் இருக்கிறார்.அனைத்தையும் அறிந்துகொண்டே தூங்கியும் தூங்காத நிலையில் படுத்திருக்கிறார்.அவரை மீறி ஆதிஷேஷன் விளையாடுவானேயானால் அதை கருடன் பார்த்துகொள்வார்.
மூலாதார கடவுளான கணபதி நாகத்தை தன் இடுப்பில் கட்டி இருக்கிறார்.ஆணவத்தையும், சினத்தையும்,வஞ்சகத்தையும், தலை எடுக்கவிடாமல் இறுக்கி கட்டி வைத்திருக்கிறார்,
முருகனின் வாகனம் மயில் சாதாரண பறவை அல்ல. அது வருவதை முன்கூட்டியே அறியக்கூடிய ஞானப்பறவை.மயில் தன் இனப்பெருக்கத்தை எப்படி நிகழ்த்துகிறது என்பது இன்னும் யாரும் அறியாத சங்கதியாகவே உள்ளது. ஆறறிவு கடவுளுக்கு அதனால்தான் மயில் வாகனமானது. அந்த அறிவின் கால்களில் அடங்கி ஒடுங்கி சுருண்டுகிடக்கிறது பாம்பு.
அந்த பாம்பை இப்படியெல்லாம் பழக்கிவிட்டால் அப்புறம் சிவனை போல அதை கையில்,கழுத்தில்,தலையில்,எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.
அகந்தையையும்,ஆணவமும்,நான் என்கிற செருக்கும் நம் கட்டுக்குள் இருக்கும்.
யோகவியல் ரீதியில் பார்க்கும் பார்வைதான் பாம்பிற்கு நாம் தரும் உச்ச மரியாதை.
சுயமனித சக்தியை உசுப்பி எழுப்பும் குண்டலினி எனும் மாயசக்தி நம் மூலாதாரத்தில் ஒரு பாம்பு வடிவில் தூங்குவதாகத்தான் முன்னோர்கள் கணித்துள்ளார்கள்
அந்த பாம்பு நமக்குள் எப்படி வந்தது..?எப்போது வந்தது,..?
பாம்புகள் வசிக்கும் புற்றை உற்று நோக்குங்கள். அதன் உச்சி வழியாக-தலையை முதலில் உள் நுழைத்து- வால் இறுதியாய் மறைய உள்ளிறங்கும்.
வெளியே வரும்போது தலை முதலில் தெரிய வெளிப்படும்.
நமக்கும் அப்படித்தான் உச்சி தலை வழியேதான் உயிராற்றல் இறங்கி வருகிறது. அதை மீண்டும் உயர்த்த வேண்டும்.
குண்டலினி பாம்பு தன் விஷத்தை பிரயோகிக்காமல் -உச்சிக்கு வநது மாணிக்கத்தை கக்க வேண்டும்.
நாம் ஒளிரூப மனிதர்களாய் மாறவேண்டும்.
நமக்குள் இருக்கும் பாம்பை ஆட்டுவிக்க இன்றே மகுடியை எடுப்போமா..?Saturday, February 21, 2009

கொழுக்கட்டையும் - பகவத்கீதையும்


அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்மந்தம்..? வழக்கமான கேள்விதான். ஆனால் இந்தக் கட்டுரை வழக்கமான கட்டுரை அல்ல.
ஏதோ ஓர் நாளில் இந்த உலகம் இல்லாமல்தான் இருந்தது. அதுபோலவே ஓர் நாளில் இல்லாமலும் போகக்கூடும்.
 இடையில்  நடந்துகொண்டிருப்பது சிறு விளையாட்டே. விளயாட்டின் நிமித்தம்  நமக்கு கிடைத்திருப்பது..நாகரீகம்.,மொழி,சமயம்,மதம்,அறிவியல்,சித்தாந்தங்கள்.இதுவும் ஒரு நாள் இல்லாமல் போகக்கூடும் அல்லது தன் நிலையிலிருந்து வேறொரு நிலைக்கு மக்களின் இசைவோடு மாறக்கூடும்.
எந்த வேதத்திலும் புராணத்திலும் சொல்லப்படாத பல நூறுவகையான கடவுளர்கள் அனுதினமும் உருவாகிக்கொண்டே உள்ளனர்.

வீதியோரத்து "லக்கி பிள்ளையார் "முதல் "வழித்துணை அம்மன்" வரை நம் தனிப்பட்ட விருப்புகளை தெய்வத்தின்மேல் செலுத்தி வருவதாகத்தான் தோணுகிறது எனக்கு. கடவுள் நம்மை காப்பாற்றுவார் எனும் நம்பிக்கை மீறி நாம் கற்றுக்கொள்ள பாடம் செய்யப்பட்ட குறியீட்டு பாடங்களாய் அவர்கள் இருப்பதாக நம்புபவன் நான்.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்த கட்டுரையும் மலர்கிறது.

கொழுக்கட்டை- காலம் கால்மாக வினாயக சதுர்த்தி அன்று நாம் படையிலிட்டு வருகிற ஒரு தின் பண்டம். கீதை மகாபாரதத்தின் அங்கமாய் கிருஷ்ணர் அருளிய ஞானப்பொக்கிஷம்.

இவை இரண்டுக்கும் நிகழ்வின் அடிப்படையில் தொடர்பு தேடாமல் பொருளின் அடிபடையில் தொடர்பு தேடிய முயற்சியே இக்கட்டுரை.

மனிதனுக்கு இருக்கும் ஒரே வசதி- கண்களை மூடி நினைத்தால் நினைத்த பொருளை அகக் கண் காட்டும். அதுதான் நெற்றி இருக்கே பளிச்சுனு படம்போட்டு காடறதுக்கு.., இப்ப நீங்க என்ன செய்யணும்னா இன்னிக்கு வினாயக சதுர்த்தின்னி நெனச்சிக்கணும் சரியா..?

பிள்ளையார் சதுர்த்தியையும் கொழுக்கட்டையையும் யாராலும் பிரிக்க முடியாது.
அன்றைய சிறப்பே அதுதான். நம் வீடுகளில் வெகு இயல்பாய் அன்னிக்கு என்ன நடக்கும்..?


"ஏங்க..பிளையார் குடை, பிள்ளையார் வாங்கிட்டீங்களா."
"வாங்கியாச்சு.."
"பிள்ளையாருக்கு பட்டு துண்டு போடணும்.."
"போட்டுடலாம்.."
"கொழுக்கட்டைக்கு தேவையானதை வாங்கியாச்சா.."
"இதோ.."
"என்னென்ன வாங்கினீங்க..?"
"கொடுத்த லிஸ்ட்டை வாகியாச்சு.."
குடும்ப தலைவி சரிபார்க்கிறார்.
எள்ளு,வெல்லம்,தேங்காய்,ஏலக்காய்,பொட்டு கடலை, வேர்கடலை, பட்டியல் தொடர்கிறது.
அடுத்து என்ன..?
ஒரு உரல்- ஒரு உலக்கை
தனி தனி பெயரும்- குணமும்-சுவையும் கொண்ட எல்லா பொருளும் உரலின் வயிற்றுக்குள் கொட்டப்பட்டுவிட்டது.
அம்மா உலைக்கையை தூக்கிவிட்டார்கள். வலது கை மாற்றி இடது கை.
இடது கை மாற்றி வலது கை."ஆச்..ஆச்.." என அவள் எது வரை இடிப்பாள்..?
உரலுக்குள் இட்ட ஒவ்வொரு தனிப்பொருளும் தம் தனி தன்மையை இழந்து- தனியான் சுவைதன்மையை இழக்கும் வரை குத்தவேண்டும் உலக்கையால்.

உலக்கையால் இடிபடுவது தண்டனை அல்லவா..?
ஆம் தண்டனைதான்...?
"நான் எள்ளு.."
"நான் தேங்காய்.."
என்று தம் த்னி தன்மையில் இறுமாப்பு கொள்கிற ஆணவத்திற்கு கிடைக்கிற தண்டனை
பல தனி பொருட்களை இப்படி உரலில் கொட்டி இடித்து உருவாவதும் ஒரு பொருள்தானே. அம்மா அதை எப்படி அழைக்கிறாள் தெரியுமா..?
"பூரணம்" என்கிறாள்.(absoluteness )
தனிபொருட்கள் கூட்டு பொருள் ஆகி- அந்த கூட்டுப் பொருள்தான் இப்போது பூரணமாக மாறி இருக்கிறது.
காரணப்பெயருடன் (பொட்டுடன் இருப்பதால் பொட்டுகடலை) இருந்த ஒவ்வொரு பொருளும் காரணமும் அழிந்து,பெயரும் அழிந்து, பூரணம் என்கிற தன்மை பெயருக்கு மாறிவிட்டது.

நம்மிடமும் சில தனி பொருட்கள் உண்டு-அவற்றை கூட்டுபொருளாக்கி-பூரணமடைய செய்யவேண்டும்.
உடல்-ஒரு பொருள்-அதற்கென தனிதன்மை- தொடு உணர்தல்.
கண் - பார்த்தல்- காது கேட்டல்-நாக்கு சுவைத்தல்- மூக்கு வாசம் உணர்தல்.

இந்தனிதன் தனிதன்மையினாலால் வாழ்கிறோம் நம் வாழ்வை.

இந்த தனிதன்மை பூரணப்படவேண்டும்.என்ன செய்வது..?
உரலில் இட்டு நசித்த மாதிரி புலன்களை இடிக்கவா முடியும்..? வேண்டாம்..நசிக்க வேண்டாம்..உணர்ந்தாலே போதும்.
உடல்-நாக்கு-கண்-மூக்கு-காது-மனம் ஆகியவை தம் த்னி தன்மையை மட்டும் தூக்கி பிடித்துக்கொண்டு ஆணவம் கொள்ளாமல் மற்ற புலன்களோடு பூரணப்படவேண்டும்.

உதாரணத்துக்கு
கண்- பார்த்தல் அதன்தொழில் எனில்
மற்ற புலனறிவையும் தன்னோடு அது பிணைத்துக்கொள்லுதல் வேண்டும். ஆம் பார்த்தல் மட்டுமன்றி., 
கண்களால் -உணர்தல்-கேட்டல்-சுவைத்தல்-ஆகியவற்றை செய்து பழகுதல் வேண்டும்.
ஒவ்வொரு புலனும் மனதோடு கலக்கும்போதுதான் பூரணப்படும் இல்லை எனில் அது அதன் தனி தன்னையோடு இருக்கும்.
இருட்டில் கிடக்கும் ஒன்றை கயிறு என உணர்ந்து அறிவு சொல்லாத வரை கண் அதை பாம்பாகவே காட்டிக்கொண்டிருக்கும். அதன் விளைவாக காதுகள் இல்லாத பாம்பின் சீறலை கேட்பதும், மூக்கு இல்லாத பாம்பின் வாசனையை உணர்வதும், உடல் பாம்பு தன்னை சீண்டுவதாக அச்சம்கொள்வதும்- வெகு சாதாரணமாக நடந்துவிடும். பூரணப்படுவதே வாழ்கை.

அப்பாடா..பூரணத்தை அம்மா இடித்துவிட்டிருக்கிறாள். 
உரல் நிறைய நிறைந்திருப்பது பூரணம். இடித்த அம்மா அதை வேறொரு பாத்திரத்துக்கு மாற்றுகிறாள். இப்போது பாத்திரத்தில் இருப்பதும் பூரணமே. அவள் கைகளில் ஒட்டிக்கொண்டிருப்பதும் பூரணமே. எடுத்து போடுகையில் கொஞ்சமாய் கீழே சிந்திவிட்டது. அதுவும் பூரணமே. கீழே விழுந்ததில் சில துணுக்குகளை எறும்புகள் இழுத்து செல்கின்றன. அதுவும் பூரணமே.ஆக பூரணமடைந்த பின் பூரணத்தின் ஒவ்வொரு பகுதியும் பூரணமே. 
பார்த்தீர்களா கட்டுரை பிள்ளையாரின் கொழுகட்டையில் துவங்கி பகவத் கீதையின் பூரண தத்துவத்துக்கு வந்துவிட்டது.
இப்போது ஒப்புகொள்கிறீர்களா இரண்டுக்கும் உள்ள தொடர்பை..?

கவிழ்த்து வைத்த உரல்தான் நம் கபாலம். வலதும் இடதுமாய் சிந்தித்து நம் உணர்வுகள் பயணிக்கும் முதுகு எலும்புதான் (தண்டுவடம்) உலக்கை.
கொழுக்கட்டை பூரணத்துக்கு உலக்கையை கீழ்னோக்கி இடிக்க வேண்டும்.
நம் மனதின் பூரணத்துக்கு மூலாதாரத்திலிருந்து கபாலத்தை நோக்கி மேல்னோக்கி குண்டலியின் துணையோடு இடிக்க வேண்டும்.
பூரணம் என்பது பொருளல்ல தன்மை- அடையப்படவேண்டிய தன்மை.

அரியும் சிவனும் ஒன்னு இதை அறியாதவன் வாயில மண்ணு
இதை மாற்றுவோம் 
எல்லாருமே ஒன்னு.
பூரணப்படுவோம். பூரணப்படுத்துவோம்.
 


   

Friday, February 20, 2009

ஞான விருந்து


வாழை இலையால் 
தோரணம் 
சாப்பிடத்தான் சோறில்லையே..

இது ஒரு பிரபலமான ஹைகூ.
சாப்பிட சோறில்லாத போது வாழைமரத்தால் தோரணம் கட்டுவதை கவிதை சொல்கிறது.
இன்றைய நமது கட்டுரையில் நாம் மிக சுவையான சங்கதிகளை பர்ர்க்கவிருக்கிறோம்.

மேலுள்ள கவிதையிலிருந்து- வாழை இலையையும் சாப்பிடுதலையும் மட்டும் எடுத்துக்கொண்டு நம் கட்டுரையில் பயணிக்கலாம்.

ஒரு குழந்தைக்கு அன்னை ஒருநிலைவரை-மிக அக்கறையாய் அமுதூட்டுவாள். குழந்தை வளர வளர அக்கறை அறிவுரையாய் மாறிபோகும். அறிவுரை அதட்டலாகும்.

நாம் வாழும் வாழ்க்கை என்பதே பார்த்து கற்றுக்கொள்ளும் பழக்கம் போலாகிவிட்டது.

நம்மில் நாம் நம் பிள்ளைகள் எத்தனை பேருக்கு சாப்பிடும் அறிவியல் பற்றி சொல்லி தந்திருக்கிறோம்.
"ஹே..சிந்தாம சாப்பிடு.."
"அள்ளி சாப்பிடு"
"மென்னுசாப்பிடு"
பல வீடுகளில் வழக்கமாக ஒலிக்கும் வார்த்தைகள்.
உணவே மருந்தாய்-மருந்தே உணவாய் உண்ணும் முறைக்கு இலக்கணம் வகுத்தவர்கள்..நம் தமிழ்முன்னோர்கள்.
"உணவெனப் படுவது
நிலமும் நீரும்.."-என்ற இலக்கணத்தை வகுத்த சமூகம் நம் சமூகம்.
ஆம் நம் உடல் என்பது
கொஞ்சம் நிலம்-கொஞ்சம் கார்ப்பரேஷன் நீர்-
நிலத்தை மேலும் பகுத்தால் கொஞ்சம் கோயம்பேடு மார்கெட்-கொஞ்சம் நாடார் கடை மளிகை.
மண்ணால் விளைந்ததை தின்று மண்ணுக்கே திரும்புகிறோம்.
நம்மவர்கள் பலனூறு ஆனண்டுகளுகு கண்ட உண்மையை நவீன் மருத்துவ அறிவியல் ரொம்ப தாமதமாய் இப்போதுதான் ஒப்புக்கொண்டிருக்கிறது. எல்லா நோய்களுக்கும் காரணம் உணவுமுறையும் சாப்பிடும் முறையும் என்று.

உணவுமுரைக்கு அடுததாக வருவோம். முதலில் சாப்பிடும் முறை.
எப்படி சாபிடுவது..?
"இதென்ன கேள்வி..கையால அள்ளிதான்..?"
அல்ல.நம் சாப்பிடும் முறை அப்படிப்பட்டதல்ல.அடிப்படையாய் ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பசித்தால் சாபிடுகிறோம். பசியை உணரும் பகுதியாக வயிறு மட்டுமே குறிப்பிடப்படுவது மாபெரும் பிழை.
மனிதன்=உடல்+உயிர்+மனம்
காலம் கால்மாக உண்வை நாம உடலோடு மட்டுமே சம்மந்தப்படுத்திவிட்டோம். எல்லா கோளாறுகளுக்கும் இதுவே அடிப்படை காரணமாகிவிட்டது.
கண்ணுக்கு தெரிகிற உடலுக்குள் கண்ணுக்கு தெரியாத மனமும் உயிரும் உறைவதை நாம் மறந்துவிட்டோம்.
நம் புலன்கள்+உள்ளுறுப்புகள்+அங்கங்கள்+மனம் எல்லாவற்றுக்குமே பசிக்கிறது என்பதே உண்மை.

உடலுக்கு பசிக்கும்-வயிறு மட்டுமே உடல் அல்ல. நாம் சொல்வது மொத்த உடலுமே. வயிறு என்பது உணவை உள்வாங்கிக்கொண்டு அடுத்தகட்ட வேலைகளை பார்க்கிற ஒரு சின்ன தொழிற்சாலை.
சாப்பிடும் எதிலிருந்தும் அது கால கால்மாக "குளுக்கோஸ்"என்கிற ஒரே பொருளை மட்டுமே  உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது.
சைவம்-அசைவம்-சைனிஸ்-இண்டெர்காண்டினெண்டல் எதுவானாலும் நம் தொழிற்சாலை குளுக்கோஸாக மட்டுமே பார்க்கும்.
உப்பு காரம் புளி இதெல்லாம் நாக்கின் முதல் ஒன்றரரை அங்குலம் வரைதான். தொண்டை குழிக்குப்போனாலே இனிப்பு கசப்பு காரம் துவர்ப்பு என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது.
உடலுக்கு பசிக்கும்
அன்றாடம் சுவைக்கும் நாக்கிற்கு பசிக்கும்.
கண்ணுக்கு பசிக்கும்.
நாசிக்கு பசிக்கும்.
காதுக்கு பசிக்கும்.
காதுக்கு பசிக்கும்.
மனதுக்கு பசிக்கும்.
இந்த ஆறறிவு நிலைக்கும் உண்டாகும் பசியே உண்மையான பசி.
ஒவ்வொரு புலன்களுக்கும் உணவு பற்றிய அறிதல் இருக்கிறது. இட்லியை தோசை என்று சொல்லி தட்டில் வைத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதல்லவா..?

நாம் உண்கையில் இந்த ஆறறிவு புலன்களின் பசியும் தீர உண்ண வேண்டும்.
இது சாமான்யமான காரியம் இல்லை. ஆனால் சாத்த்யப்படுத்தினால் விளைவுகள் அற்புதம்.
சாப்பிடும்போது உண்மையில் என்ன நிகழ்கிறது. 
கவள உணவு வாய்க்குபோகிறது. வாயில் எச்சில் ஊறுகிறது. உணவு நாவில் பட்டதுமே உமிழ் நீர் சுரக்கிறது. மெல்லத் துவங்குகிறோம். உணவு அரைகிறது. விழுங்குகிறோம்.விழுங்கிய உணவோடு சுரந்த எச்சில் என்கிற சலைவா செரிமான தூதுவனாக வயிற்றுக்கு போகிறது. நன்கு புரிந்து கொள்ளுங்கள் உமிழ்நீரோடு விழுங்கப்ப்டாத உணவு பாஸ்போர்ட் இல்லாமல் ஒருவன் ஒரு நாட்டில் சுற்றுகிற மாதிரிதான் அது.
பாஸ்போர்ட் இல்லாதவனை ஒரு நாட்டு நிர்வாகம் என்ன செய்யம்..? சுதந்திரமாய் இயங்க விடாது.
பாஸ்போர்ட் இல்லாது உள் வரும் உணவை செரிமான மண்டலம் என்ன செய்யும்..? குளுக்கோஸாக மாற்றாமல் 
கொழுப்பாக மாற்றி..உடம்பில் எங்கு இடம் இருக்கிறதோ அங்கு அப்பிவிடும்.

சர்க்கரை நோய் என்கிற ஒரு எமனை இப்போது பத்து வயது பிள்ளைகளுக்கும் வருகிற சூழலை ஏற்படுத்திவிட்டோம். சர்க்கரை நோய் என்பதென்ன 'இன்சுலின்'குறைபாடு. இன்சுலின் என்பது நாம் மேலே சொன்ன நம் சொந்த வாயில் ஊறவேண்டிய உமிழ் நீர்.

தானாய் சுரக்க வேண்டியதை காசு கொடுத்து ஊசி மருந்தாக செலுத்த வேண்டிய அவலநிலைக்கு போய்விட்டோம்.
தமிழர்களின் சாப்பிடும் முறை எப்படிப்[பட்டது..?
வாருங்கள்..ஒரு த்மிழனின் வீட்டு விருந்துக்கு.
உட்காருங்கள்-கை அலம்பி ஆயிற்று- முதலில் பச்சை பசேலன வாழை இலைவரும்- த்ண்ணீர் தெளியுங்கள்.
பசிக்கும் கண்களால் அந்த பச்சை நிறத்தை கண்ணார பாருங்கள்.அடுத்து பச்சைனிற இலையின் மேல் contrast ஆக
வெள்ளை நிறத்தில் உப்பு வரும்-அடுத்து சிவந்த நிறத்தில் மாங்காயோ எதுவோ ஊறுகாய் வரும்-
அவியல்.துவையல்,பச்சடி,கூட்டு,பொரியல்,வருவல் இன்னும் எல்லாம் ஒவ்வொரு நிறத்தில்..
வைத்தவுடனே எடுத்து லபக்காமல்...ரசித்து பார்த்து "ஏ..கண்களே பாருங்கள் எத்தனை வகை உணவு."என சொல்லி கண்களின் பசியை தீர்க்க வேண்டும்.
அடுத்து..ஆவியடிக்கும் கிச்சடி சோறு-நெய்-பருப்பு-வாழை இலை அந்த சூட்டில் மிதமாய் வெந்து ஒருவகையான மருந்தை நமக்காக உற்பத்தி செய்யதுவங்கிவிட்டது.
இனி வேலை கைகளுக்க்தான்.மொத்த உடலுக்குமான பிரதினிதி இங்கு கைதான். சூடான சோற்றில் கைவைத்து அந்த சூட்டை உணர்ந்து உள்ளங்கைப்பட பிசையுங்கள். அந்த சூட்டை உணர்ந்தால்தான் வெளிஉடலின் பசி தீரும்.
இடையில் இன்னொருத்தர் தன் வேலையை துவங்கி இருப்பார்.திருவாளர் மூக்குதான். வாசம் பிடித்திருப்பார்.
இயன்றவரை ஒவ்வொரு கவள உணவை வாய்க்கு எடுத்து செல்லும்போதும் வாசத்தை உணருங்கள். அப்போதுதான் நாசியின் பசி தீரும்.
நாவில் வைத்ததும் நாக்கு சுவைக்கும்-பற்கள் மெல்லும்- மனம் அடுத்த கவளத்திற்கு ஆளாய் பறந்து மென்றும் மெல்லா நிலையில் உள்தள்ள பார்க்கும் அவசரம் வேண்டாம். நிதானமாக மெல்லுங்கள். அரைத்ததை முடிந்தவரை முன் வாய்க்கு கொண்டுவந்து மைய்ய அரையுங்கள், இது சலைவா இரண்டற கலக்க.
அரைக்கும்போதே அடுத்த ஆசாமி தன் வேலையை செய்து கொண்டிருப்பார். நாம்தான் இது நாள்வரை அதை உணரவில்லை. அரைக்கும் சப்தத்தை காதுகள் ரசித்துக்கொண்டிருக்கும்.
'லஜக்..லஜக்..'எனசாப்பிடுவர்களை நமக்கு பிடிப்பதில்லை.ஆனால் அந்த சத்தம் ரசிக்கப்பட்டல்தான் செவியின் பசி தீரும். நம்த்துப்போன அப்பளத்தை நாம் ஏன் விரும்புவதில்லை தெரியுமா..? அதை சாப்பிடும்போது எந்த ஓசையையும் உண்டாக்காதுதான். செவிக்கு ஒலி கேட்காததால் அப்பளம் சாப்பிட்ட நிறைவை அது மனதுக்கு தெரிவிக்காது.
எல்லா புலன்களும் திருப்தி அடைந்து-கடைசியில் தலைவர் மனம் சாப்பிட்ட திருப்திக்கு வருவார்.
இப்படி நாம் சாபிட முடியாமல் போனதற்கான புறத்தடைகள்-
டைனிங்க் டேபில்-டிவி-புத்தகம்-ஸ்பூன் கலாச்சாரம்-நேரமின்மை-தனி குடும்ப சூழல்
அகத் தடைகள்
அக்கறை இன்மை-நம் மீது நாமே காட்டவேண்டிய அன்பு பற்றிய விழிப்பின்மை.
வாழ்வை தவம் என்கிறோம். உண்பதால்தான் வாழ்கிறோம் எனில் உண்பதும் தவம்தானே.
தவமாய் உண்டு பழகினால் நோய் இல்லை.
வாரத்தில் ஒரு நாளாவது கூட்டாக தரையில் அமர்ந்து வாழை இலையில் சாப்பிடுவோம்.
நம் பிளளைகளுக்கு சாப்பிட கற்று தருவோம்.
.

Tuesday, February 17, 2009

கடவுளுக்கு இலக்கணம் சொன்னவன்-வள்ளுவன்

1330 குறட்பாக்களில் செந்நாபோதன் கடவுளுக்காக சொன்னது 10 குறட்பாக்கள்தான்.ஆனால் அத்தனையும் முத்துகள்.

கடவுள்வாழ்த்து என்பது வெறும் வாழ்த்தாக மட்டும் அமையாமல்- கடவுளின் தன்மைக்கே இலக்கணமாக விளங்குகிறது என்பதே உண்மை.
வள்ளுவன்-இந்து-கிறிஸ்துவன்-இசுலாமியன்-சமணன்-இன்னு்ம் என்னென்ன சொன்னாலும் சரி அவன் அனைவருக்கமான கடவுளுக்கு இலக்கணம் வகுத்தவன்.

1.முதல் குறளில் உலகின் தோற்ற முதலுக்கு அவன் சொல்லும் மூலம்- ஆதி பகவன். நம்மிடம் எப்போதும் ஒரு குறை உண்டு-அதாவது யாராவது சொன்னதை அப்படியே தலை மீது வைத்துக்கொண்டு ஆடுவது. ஆயிரம் கருத்துகள் அலைமோதினாலும் மெய்பொருள் நோக்கியே இருக்க வேண்டும் நம் பயணம்.
நானேகூட ஏதோ சொல்கின்றேன்- நீங்கள் திடமான யோசனைக்கு பின்னரே அதை ஆமோதிப்பதோ அல்லது எதிர்ப்பதோ.

இந்த ஆதி பகவனைத்தான் வள்ளுவனின் தாய் ந்தை ஆக்கிவிட்டார்கள் நம்மவர்கள்.

கணிதம் படித்தவர்களுக்கு ஆதியை பற்றி கொஞ்சம் அதிகமாய் தெரியக்கூடும்.
வரைபடதாளில் இரண்டு அச்சுக்கோடுகள் வெட்டிக்கொள்ள மையமாய் வளர்வு நிலைக்கும் தேய்வு நிலைக்கும் அப்பாற்பட்டு சுழிய நிலையில் இருக்கும் புள்ளிக்கு ஆதி என்றுபெயர்.
ஆதியில் தோற்றமும் இல்லை.மறைவும் இல்லை.
ஆதியில் வளர்வும் இல்லை தேய்வும் இல்லை.
ஆதியில் இருளும் இல்லை ஒளியும் இல்லை.ஆனால் தோன்றாததும் மறையாததும்,வளராததும் தேயாததும்,இருளாத்தும் ஒளிராததுமான அனைத்துமே ஆதிக்குள் அடக்கம்.
இருளின் முடிவில் ஒளியின் துவக்கம். ஒளியின் முடிவில் இருளின் துவக்கம்.

அந்த ஆதிதான் கடவுள்.ஆம் அந்தாதிதான் கடவுள்.முடிவில் தொடக்கத்தையும்,தொடக்கத்தில் முடிவையும் பதுக்கி வைத்தவன்.

ஆதி நிலை என்பது ஒருமை நிலை. அங்கு சிந்தனையும் இல்லை செயலும் இல்லை. அடுத்த நிலையில் கடவுள் ஆதியை பகுக்கிறான். பகுப்பதால் அவன் பகவன். ஒன்றை இரண்டாக-இரண்டை மூன்றாக-பகுக்கிறான்.
இவ்வாறு சகலத்தையும் உள்ளடக்கிய ஆதியை பகுப்பதன் மூலம்- உலகின் தோற்ற முதலுக்கு அடிகோலுபவன் கடவுள்.
எனவே "ஆதி பகவன் முதற்றே உலகு"- என இலக்கணம் வகுத்தான்.

2. இரண்டாம் குறளில் வள்ளுவன் கடவுளுக்கு தரும் இன்னொரு பட்டம்"வாலறிவன்"- கடவுள் சாதாரண அறிவன் கிடையாது. அவன் வாலறிவன்.
வாலறிவன் என்றால் தூய அறிவு நிறைந்தவன். இல்லாமையையும், அறியாமையையும் விரட்டுவதே அறிவு சமுகத்தின்  தலையாய பணி.
அறியாமை என்பது அறியாத ஒன்றை அறிந்து கொள்வதன்று. தவறாக அறிந்து கொண்டதை சரியாக அறிந்துகொள்ளுதல்.
தவறான் ஒன்றை கற்றுக்கொண்ட பின்னரே சரியான் ஒன்றை அறிந்து கொள்வது மனித இயல்பு. அதுவே கற்றல்.
இருந்துகொண்டே மறைதலையும், மறைந்த படியே காட்டுதலையும் செய்யத்தலைபட்டவன் கடவுள். உலக இயக்கத்திற்கு இம்மாயத் தன்மை இன்றியமையாத ஒன்று. 
மெய்யை மெய்யாகவும்- பொய்யை பொயாகவும்-அறிந்து கொள்ள அந்த வாலறிவனை தொழுதலே கற்றலின் ஆய பயன்.

3.மலர்மிசை ஏகியவனின் மானடி சேர்ந்தால் நிலைசை நீடு வாழலாம்- இது குறள்பாடம். பேதம் அந்த மலர்மிசையை மகாவிஷ்ணுவிடம் எடுத்து சென்றுவிட்டது.
காரணம் அவனே மலர்மிசையில் உள்ளவன் என்பதால்.
மலர்மிசை என்பது ஒவ்வொரு மனிதரின் மனம் ஆகும். ஆயிரம் இதழ் விரித்த தாமரை என்கிறோமே அங்குதான் திண்ணமான எண்ணமாகவும், உறுதியான உணர்வாகவும் கடவுளை வைத்திருக்க்க முடியும்.
கடவுளை சட்டை பையில் வைத்துகொள்வதும், money purse இல் வைத்துகொள்வதும் என்பது வேறு.
கடவுள் மனித மனங்களில் ஏகியவன். அவனுடைய அடியை சேர்தல் சிறப்பு.
இங்கு அடிமுடி தேடிய கதையை நினைவு படுத்தி கொள்க.

4.வள்ளுவன் கடவுளுக்கு சொன்ன அடுத்த் தன்மை- "வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்". ஆதியை பகுத்தவனுக்கு உலகின் மேல் வேண்டுதலும் வேண்டாமையும் எப்படி இருக்க கூடும்.
பகவான் ரமணர் வெப்ப படுத்தினாலும் 100 டிகிரியில் நீர் ஆவியாகும். சாமான்ய மனிதர் யார் வெப்ப படுத்தினாலும் 100 டிகிரியில் ஆவியாகும். கடவுள் வாலறிவன் இல்லையா? தூய அறிவுக்கு ஏது விரு்ப்பும் வெறுப்பும்.
காந்தத்தோடு சேர்ந்த இரும்பு காந்தமாகிவிடும். வேண்டுதல் வேண்டாமை அற்றவனின் தாள் சேர்ந்தால் துன்பம் கிடையாது. விருப்பு வெறுப்பற்ற நிலையில் நாமும் கட்வுள் தன்மை எய்திவிடுகிறோம்.

5.ஆதி தன்மை என்பது நடுனிலை தன்மை. வரைபடத்தாளில் நடுனாயகமாய் அமர்ந்திருக்கும் கடவுள்- எந்த கால் பகுதி பற்றியும் ஏக்கமோ-தாக்கமோ கொள்வதில்லை. நல்லவை கெட்டவை போன்ற இருவினைகள் பால் சேராதவன் கடவுள். அதனால்தான் கீதையில் கிருஷ்ணனால் அப்படியிருக்க முடிந்தது.

6. பொறி வாயில் ஐந்தவித்தல் அடுத்த தன்மை. அப்ப்டி அவித்தால் பொய் தீர் ஒழுக்க நெறி நின்று- நீடு வாழலாம்.
கண் தன் மெய் தன்மையை பெறும் வரைக்கும்- கயிற்றை பாம்பாகவே காட்டி கொண்டிருக்கும். காது இறந்தகால ஓசையையும் எதிர்கால ஓசையையும் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும். நிகழ்கால செவிட்டு காதுகள் எல்லாம் கேட்காதுகள் அதாவது கேட்கா காதுகள். செவிகள் மெய் தன்மை பெறுகையில் எங்கும் ஒலிக்கும் பரநாதத்தை, விசுநாதத்தை கேட்கும்.
பொய் தீர்க்கும் ஒழுக்கம் என்பதே பொறிகளை அவித்தல்தான்.கடவுள் ஐந்தவித்தவன். அப்படி அவித்தால் நீங்களும் யாரும் கடவுளே. இங்கு கடவுளுக்கு உருவமோ பெயரோ கிடையாது. தன்மை மட்டுமே.

7.பதிலீடுகள் இல்லாதவன் கடவுள். அவன் ஒருவன் மட்டுமே. அதனால்தான் அவனுக்கு உவமை இல்லை. இதை வள்ளுவர் சொல்லும் பாங்கு அலாதியானது.
"தனக்கு உவமை இல்லாதான்"-என்கிறார். தன்னிலையில் வைத்து சொல்கிறார்.
முன்னிலையிலோ படர்க்கையிலோ சொல்லவில்லை. தனக்கு உவமை இல்லா நிலையில் த்ன்னை உருவாக்கி கொள்ளும் ஒவ்வொருவரும் கடவுளே.
தனக்கு உவமை இல்லா நிலையில் மனக்கவலைகள் ஏது?

8.கடவுளை சுட்ட வள்ளுவன் பயன்படுத்தும் அடுத்த வார்த்தையை கவனியுங்கள்.
"அறவாழி அந்தணன்..." பின்னொரு இடத்திலே சொல்லுவான் "அந்தணர் என்பவர் அறவோர்.."என்று. ஆக, கடவுள் என்பவன் அறத்தின் வழி நின்று வாழ்பவன். அறவாழியை அடைந்தால் பிறவாழியை எளிதில் நீந்தி கடக்கலாம். பிறவாழி நீந்த நீங்களும் அறவாழியாகும் தன்மையை பெறுங்கள் என சொல்லாமல் சொல்கிறான் வள்ளுவன்.

9.எட்டு குணங்களால் நிறைந்த இறைவனை வணங்காவிடில், கோளும் பொறியும் குணமற்று போய்விடும்.(இந்த எட்டு குணங்கள் பற்றி விரிவாக அடுத்த பதிவில் இட இருப்பதால் இங்கு சுருக்கமாக முடிக்கிறேன்) எட்டு குணம் என்பது அனைவராலும் அடையப்பட் கூடியதே.

10.பிறவியை அறுப்பவன் கடவுள். மெய்யறிவு பெறுபவன் மீண்டும் பிறக்க மாட்டான். இறைவனின் பாதம் தொட்டவர்கள் பிறவி கடல் கடப்பார்கள். மற்றவர்கள் அதிலேயே கிடப்பார்கள்.

கடவுளுக்கு என்று மேற்சொன்ன அத்துனை தன்மைகளையும் நாமும் பெற முனைவோம். முடிந்தால் முடியாததில்லை.

மனிதனின் ஆதி வியாதி


புண்ணிய தேசமாம் நம் பாரதத்தின் பழம்பெரும் இதிகாசங்களும் புராணங்களும் கதைகள் அல்ல உண்மையில் நடந்தேறியவை என நிறுவதை விட அந்த இதிகாச புராணங்களுக்கு பின்னே ஒளிந்திருக்கும் தர்க்க வாழ்வுக்கு தேவைப்படும் தத்துவ முத்துக்களை அனைவரும் அறிய கொட்ட வேண்டும் என்பது என் பேரவா.

நம் முன்னோர்கள் ஒவ்வொரு யுகத்திற்கும் அதற்கேற்ற தத்துவங்களை இதிகாசமாக்கினார்கள்.
அரிச்சந்திர புராணம்(பொய் இல்லை-புரட்டில்லை)
மனிதர்கள் மனிதர்களாக வாழ்ந்த யுகம் அது.
மனிதன் அரக்கர்களோடு மோதியது (பெண்ணாசைக்கு எதிரான போர்-இராமாயணம்)
மனிதன் மனிதனோடே மோதியது-மகாபாரதம்(மண்ணாசைக்கு எதிரான போர்)

இவைகளை கதைகளாக பார்க்கும் பக்குவமும், தத்துவங்களாக பார்க்கும் விசாரமும்,புரட்டுகளாக நோக்கும் அனாயசமும் அவரவர் மனனிலைக்கு உட்பட்டது. 

அறிவு நிலையில் உயர்ந்த மனிதன் இன்னும் கண்டுபிடிக்க முடியாத ஒரே ரகசியம் மரணம் பற்றியதே. அவன் காண துடிப்பதும் அதையேதான்.
ஆதி மனிதர்களும் இதையே எண்ணியிருக்க கூடும்.

படைப்புலகின் மிகப்பெரும் விலங்கு மனிதனே. அவனது ஆறாம் அறிவுக்கு காலம் இன்னும் நிறைய பதில்களை சொல்லத்தான் போகிறது.
எந்த இதிகாசமும்,புராணமும்,தத்துவமும் மனிதனின் உடல்,உயிர், மனம், ஆன்மா இவற்றிற்காகத்தான் சொல்லப்பட்டன என்பது என் கருத்து.
நாளடைவில் அக்கதானாயகர்களுக்கு தனி மனிததுதி நடந்தேறியிருக்கலாம்.
ஆலயங்க்ளும் நிறுவப்பட்டிருக்கலாம்.

முதலில் இராமாயணத்தை எடுத்துகொள்வோம்
______________________________________________
பக்த மார்க்கண்டேயன் நந்தியம்பெருமானிடம் ஒரு வரம் யாசித்தானாம்." கண் இல்லாதவ்ர்,காது கேட்காதவர், வாய் பேச முடியாதவர்,சிந்திக்க முடியாதவர் இவர்களுக்கான கடவுளைப் பற்றி எனக்கு சொல்லுங்கள்" என்று.
விஷயம் இதுதான்.
பார்வை உள்ளவர்கள் தம் கடவுள் என்று ஒரு உருவத்தை காட்டி விட முடியும்.
பேசக்கூடியவர்கள் குறைந்தது ஒரு திருப்பெயரையாவது சொல்லிவிட கூடும்.
பார்ர்க்கவும் முடியாமல்,பேசவும் முடியாமல்,கேட்கவும் முடியாமல் வாழும் மனிதர்களுக்கும் கடவுள் இருக்கிறான் எனில் அவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்ற மார்க்கண்டேயனின் ஆர்வமும் அக்கறையும் பாராட்டதக்கது.
இராமாயண கதையை ஒரு ஐந்து வயது சிறுவனுக்கு நான் சொல்ல நேரிட்டால் இப்படித்தான் சொல்லுவேன்.
"ஒரு ஊர்ல மூனு பேர் இருந்தாங்க. அதுல ரெண்டு பேரு ஆண், ஒரு பெண்.
ஒரு ஆம்பிளையோட் பேரு அறிவு. இன்னொருத்தன் ரு உடம்பு. அந்த பெண்ணோட் பேரு மனசு."
"இந்த மூனு பேரு சேந்து ஒரு நாள் பயணம் கிளம்பினாங்க. பயணம்னா சாதாரண பயணம் இல்ல ரொம்ப தூர பயணம். நடந்தே போனாங்க."
"நாடு நகரம் கிராமம் எல்லாம் கடந்து நடந்து போயிகிட்டே இருக்காங்க. திடீர்னு பார்த்தா பாதையே தெரியாத மாதிரி ஒருபக்கம் கல்லும் முள்ளும் மண்டிகிடக்குது, இன்னொரு பக்கம் தண்ணியா ஓடுது. மூனு பேரும் எந்த பக்கம் போறதுன்னு தெரியாம் விழிக்கிறாங்க."
"அறிவு ஒரு பக்கம்  யாருக்கும் தொந்தரவு வராம போகணும்னு யோசிக்குது.
உடம்பு தனக்கு காயம் எதும் ஆயிடாம இருக்கணும்னு யோசிக்குது. மனசு தனக்கு எவ்வித துன்ப்பமும் வந்திடாம இருக்கணும்கிறதுல குறியா இருக்கு."
"அறிவு யோசிச்சி ஒரு முடிவு பண்னி இந்த பக்கமா போகலாம்னு சொல்லுச்சி. அதை கேட்ட உடம்பு நான் மாட்டேம்பா. அந்த வழி போனா எனக்கு கீறல் காயம் 
உண்டாகும்னு சொல்லுச்சி. மன்சுகேக்கவே வேணாம் அந்த வழியில வரவே மாட்டேன்னு ஒரே அடம்."
"கடைசியில் மனசு பிடிவாதமா ஒரு பாதயை காட்டி இந்த வழிதான் எனக்கு சரின்னு தோணுது அதுல போகல்லம்னு சொல்ல,அறிவும்,உடம்பும் வேற வழி இல்லாம பயணப்பட்டங்க."
"அந்த பயணத்துல சோதனை மேல் சோதனை. மன்சு ஒரு பக்கம் போயிடுசி. உடம்பு ஒரு பக்கம் போயிடுச்சி.அறிவு படாத் பாடு பட்டுச்சி"
"அந்த அறிவுதான் ராமன்- உட்ம்புதான் லட்சுமணன்-மனசுதான் சீதை"
"மனசு சொல்வதை அறிவு கேட்டு நடந்த கதைதான் ராமாயணம்.அறிவு சொல்வதை மனசு கேட்கணும்."
ராமன் பேரறிவு கடவுள். தம்பி லட்சுமணன் அவனை உடம்பு மாதிரி பிரியாதவன்.
சீதை ஆசை எனும் மாயையில் சிக்கி அறிவை திண்டாட வைத்த மனம்.
இந்த ராம காவியத்தை உடலோடு தொடர்பு படுத்தி என்னால் அக்குவேரு ஆணிவேராக படையிலிட முடியும்.

மகாபாரதம்
________________
ஐந்து பேரு ஒரு பெண்ணொடு குடும்பம் நடத்தினாங்க.
அந்த ஐந்து பேரு யாரு..?- நம்மோட ஐந்து புலன்கள். ஐந்து புலன்கள் மனசோட சேர்ந்து வாழும்போது என்ன செய்யணும் என்ன செய்யகூடாது அப்படிங்கறதுதான் மகாபாரதம்.

உதாரணுத்துக்கு ராமாயணத்துல இருந்து ஒரு காட்சி.
ராவணன் சீதயை தூக்கிட்டு போயிட்டான். ராமன் அல்லாட்றாரு.ஜடாயு ஒரு திசையை காட்டிட்டு செத்துடறாரு. அந்த திசையில ராமன் அனுமனை அனுப்பி வைக்கிறாரு. அனுமன் இலங்கைக்கு போனான். சீதையை பார்த்தான். கணையாழியை குடுத்தான். தன் நெஞ்சை தொறந்து காட்டினான். பத்தாத்துக்கு அந்த் இலங்கைக்கே தீ வச்சிட்டான்.

இதிலிருந்து ஒரு உண்மையை நாம் உனர வேண்டியிருக்கு.
ராவணன் வில்லன். சீதை கதானாயகி. ராமன் கதானாயகன்.அனுமன் வெறும் குணசித்திரம்தான். 
இலங்கா தீவுக்கு நெருப்பு வைக்கும் உரிமை பாதிக்கபட்ட first party அப்படிங்கற முறையில சீதைதான் கொளுத்தணும். ரெண்டாவது வாய்ப்பு affectd party யின் கணவர் அப்படிங்கற முறையில் சீதையின் கணவன் ராமன் கொளுத்தி இருக்கணும். கடைசி சீதையும் இல்லாம ராமனும் இல்லாம போனா லட்சுமணன் எரிக்கலாம். ஏன்னா ரெண்டு பேருக்குமே அவன் ரத்த சம்மந்தம் உள்ளவன். ஆனா ஆஞ்சனேயன் ஏன் இலங்கையை தகனம் செய்யணும். இது என் கேள்வி..?

என் முடிவுப்படி ராமாயணத்தில் வரும் அத்தனை பாத்திரங்களும் நம் உடலில் உள்ளார்கள் என்பதே உண்மை.
அறிவு நிலையில் நாம் ராமனாகவும், கடமை நிலையில் லட்சுமணனாகவும், காமவசப்படுகையில் ராவணனாகவும்,பிரம்மசர்யம் அனுஷ்ட்டிக்கையில் அனுமனாகவும் ஆகிறோம். மாயை வசப்படுகையில் சீதையாகவும் ஆகிறோம்.
ஆக நம் உடம்பின் காமத்தை அழிக்க வல்லது பிரம்மச்சர்யம் மட்டுமே. அதனால்தான் லங்கா தகனம் அனுமனால் நடந்தது. லங்கா தகனம் என்பது சிவன் மன்மதனை எரித்ததற்கு ஒப்பானது.

சென்னையில் உள்ளவர்கள் யாராய் இருந்தாலும் நங்கனல்லூர் ஆஞ்சனேயரை கண்டிப்பாக தரிசித்து இருப்பார்கள். அந்த ஆஞ்சனேயரின் பெயர் என்ன தெரியுமா?
"ஆதி வியாதி ஹர ஆஞ்சனேயர்"
ஆதி வியாதி எது? மனிதனுக்கு ஏற்பட்ட ஆதி வியாதி-'காமம்'
ஆதி வியாதியை அறுப்பவன் அனுமன். காமத்தை தீயிட்டு எரிப்பவன் அனுமன்.
அனுமன் நாம் பின்பற்றவேண்டிய பிரம்மச்சரியத்தின் ஒப்பில்லாத குறியீடு
இதிகாச பாத்த்ரங்களுக்கு கோவில் கட்டுவதை விட்டுவிட்டு மனதில் பிபற்ற துவங்கினால் நம் நாடும் வீடும் நலம் பெறும் என்பது அடியேனின் நம்பிக்கை.
காமமும் ஆசையும் வாசத்தின் மூலம் வரகூடியது. அதனால்தான் அனுமன் வாயுவின் மகனாக்கப்பட்டு- காமத்தை உருவாக்கும் வாசத்தை சுவாஸ்த்தை ஒழுங்குபடுத்துவத்ன் மூலம் அகற்றுகிறான்.
நம் உள்ளத்தில் ராமனுக்கும், அனுமனுக்கும் கோவில் க்ட்டுவோம்.

 
Monday, February 16, 2009

நெற்றி மேல் வெற்றி


எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்பது முன்னோர் வாக்கு. அந்த சிரசில்தான் நுட்பமான எல்லா புலன்களும் அமைந்துள்ளன. அதுவும் நெற்றிக்கு இருக்கும் முக்கியத்துவம் சொல்லி மாளாது.

உச்சிக்கு கீழே உள் நாக்குக்கு மேலே
வச்ச பொருளின் வகை அறிவாரில்லை

மூலன் வாக்குப்படி அந்த பொருள் வைக்கப்பட்ட இடம் நெற்றிதான்.
அதனால்தான் மனித வாழ்வில் நெற்றிக்கு அப்படியொரு ராஜமரியாதை.
அப்படியென்ன பெரிய ராஜமரியாதைன்னு உங்களுக்கு கேக்கத்தோணும்.
மனித மனம் அங்குதான் ஒளிர்கிறது. ஒவ்வொருவரின் சுயமும் அங்குதான் தன்னை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
மனித சிரசை கணினி என கொண்டால் நெற்றி அதன் திரை ஆகும்.
U-MATIC studio வில் தினமும் கனவை நாம் பார்ப்பது இந்த திரை வழிதான்.
நெற்றி ஒவ்வொரு மனிதனின் முகவரி சொல்லும் visiting card.
அங்கே திருனீரு பூசப்பட்டிருக்கலாம், வடகலையோ தென்கலையோ நாமமிடப்பட்டிருக்கலாம், தொழுகையின் நிமித்தம் கருப்பாய் தழும்பேறியிருக்கலாம் அல்லது சிலுவை குறியை தாங்கியிருக்கலாம், சந்தனம் குழைக்கப்பட்டிருக்கலாம்.
ஆக மனித வாழ்வின் ஒவ்வொரு செயலும் இங்கிருந்தபடிதான் அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை.

வணங்கும் முறைகள்
___________________
மனிதர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் வணங்கும் முறைகளை சற்று ஆய்வுக்கு உட்படுத்துவோம்.
மேற்கத்திய வணங்கும் முறை என்பது வலது கையை நெற்றிக்கு கொண்டுபோய்
"good morning" "goodevening"-சொல்வார்கள்.
வணக்கம் சொல்வதே நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை மறைமுகமாக் காட்டுவதற்குதான்.
இசுலாமியர்களின் வணங்கும் முறை இதயம் இருக்கும் இடத்திற்கு கையை கொண்டு போய் அங்கிருந்து ஏதோ ஒன்றை எடுத்து செல்வது போல் சென்று 
நெற்றியில் கைவைத்து "வாலைக்கும் சலாம்"-என்பார்கள்.
நம் இந்தியாவில் வலது கையையும் இடது கையையும் ஒன்று சேர்த்து-இரண்டாக பிரிந்திருந்தேன் இப்போது ஒன்றாகிப்போனேன் என்பது போல் இரு கைகளையும் நெஞ்சுகு நேராய் இணைத்து அங்கிருந்து உயர்த்தி நெற்றிக்கு நேராய் வைத்து "வணக்கம்" "நமஸ்தே" "நமஸ்காரம்"-என்போம்.
தமிழர்களின் வணங்கும் முறை என்பது- இரு கைகளை ஒன்று சேர்த்துகுவித்து நெற்றிக்கும் மேல் உயர்த்தி தலை உச்சியில் வைத்து "உடலையும் தாண்டி தெய்வனிலையில் இருக்கிறேன்"என்பதாக "வணக்கம்" என்பார்கள்.
மனிதரை மனிதர் வணங்கும்போது நெற்றியின் உணர்வு பரிமாறிக்கொள்ளப்படுவது புரிந்திருக்கும்.

கடவுளை வணங்கும்போது
__________________________
மனிதன் கடவுளை வணங்கும்போதும் உடனடி மரியாதை பெறுவதும் சிரசும் நெற்றியும்தான்.
கோவில்லுக்கு போகிறீர்களா சாமி கும்பிட்டு முடித்ததும் சிரசுக்கு சடாரி,நெற்றிக்கு பிரசாதம். கோவில் குருக்களின் ஆசீர்வாதமும் நெற்றியைதொட்டே நிகழும்.
தேவாலயம் போகிறீர்களா..பிரார்த்தனை முடிந்ததும் போதகர் சிலுவையை வைத்து ஆசீர்திக்கும் இடம் நெற்றி.
மசூதிக்கு போகிறீர்களா அங்குள்ள இமாமும் நெற்றியில்தான் தம் உதடுகளை குவித்து ஊதுவார்.

வய்தில் பெரியவர்களிடம் ஆசி வாங்கும் போது கவனியுங்கள்- அவர்கள் காலில் விழுந்ததும் நம்மை ஆரத்தழுவி-தூக்கி நிறுத்தி-நெற்றியில் உச்சி முகர்ந்து-திருனீற்றை நெற்றியில் வைத்து "நல்லா இரு" என்பார்கள்.

நம் செயல்பாடுக்களுக்கு தேவையான மின்லம்(battery) நெற்றியில் இருப்பதை
நம் முன்னோர்கள் எவ்வளவு நாசூக்காக கண்டுபிடித்திருக்கிறார்கள் பாருங்கள்.
அந்த மின்கலம் எப்போதும் சார்ஜிலேயே இருக்க வேண்டும்.
அதனால்தான் அதன் மீது விபூதி,குங்கும,சந்தன பூச்சு. சிலுவை குறியீடு, தொழுகை நிமித்தம் பூமியில் நெற்றியை வைத்து தூண்டலை ஏற்படுத்துதல் எல்லாமே. 
மூலாதாரத்து மூண்டெழு கனலை
காலாலெழுப்பி கருத்தறிவித்தே- என்று ஔவை கருத்தறிவிக்க சொன்ன இடம்தான் நெற்றி.
ஒருவகையில் பிங்கலை இடகலை சுழுமுனை புள்ளிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்றுகூட நாம் நெற்றியை குறிப்பிடலாம்.

மதங்களால் வேறுபட்டவர்கள் ஆனாலும் நாம் ஒவ்வொருவரும் உயிர்-உடல்-மன அளவீட்டில்-நெற்றியை அடிப்படையாக கொண்டு ஒரே மாதிரி செயல்படும் ஒருமைப்பாட்டு அமைப்பு புரிகிறதா.

மேலே நான் தந்திருக்கும் படமும் அதற்காகத்தான்.
அந்த மூன்று சின்னங்களுமே நான் குறிப்பிட்டதை போல நெற்றி மைய திரிவேணி சங்கமத்தை குறிப்பதாக உங்களால் பார்க்க முடிகிறதா..?

எனக்கு மிகவும்சுலபமாக இருக்கிறது.
சிலுவையை வளைத்தால் சூலமும்
சூலத்தை மடித்து நேராக்குகையில் சிலுவையும்.,அந்த பிறை நட்சத்திரமும் எனக்கு மனித நெற்றிகளின் சூட்சுமத்தை சொல்வதாகவே படுகிறது.

Sunday, February 15, 2009

ஆலயங்கள் அறிவியல் கூடங்களே..!

கலிகாலத்தில் நமக்கெல்லாம் ஆலயப்பிரவேசமென்பது புத்தாண்டுக்கு,பொங்கலுக்கு,இன்னும் பிற விஷேச வைபவ நாளில் என்று மட்டுமே சுருங்கிப்போய்விட்டது.
அதுவும் இன்றைய வளரும் தலைமுறையினருக்கு கோவில்கள் என்றாலே எதுவோ போகக்கூடாத இடத்துக்கு போகிற மாதிரி அப்படி ஒரு வேதனை. மனித அறிவுக்கு அப்பாற்பட்டு பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒன்றை செய்வதுபோல் ஒரு பாவனை.
இவையெல்லாம் ஏன் என வினாவை எழுப்பி பார்த்தால் தவறு உண்மையில் நம்மிடம்தான் உள்ளது.ஆம்..விவரங்களை மிக சரியாக நாம் தர தவறியதுதான் இளைய தலைமுறையினருக்கு நம் கலாச்சாரத்தின் மேலும் பண்பாட்டின்மேலும் நம்பிக்கை வராமல் போனதற்கான் காரணம்.

கடந்த சில ஆண்டுகளாக பள்ளிமாணவர்களுக்கு நினைவாற்றல் பயிற்சியை தரும் பயிலரங்கை நடத்தி வருகிறேன். அந்த சமயங்களில் நான் மாணவார்களை பார்த்து கேட்பதுண்டு.."புத்தருக்கு ஞானத்தை தந்த மரம் எது..?"
உடனே மானவர்கள் சொல்லிவிடுவார்கள் "போதி மரம்"என்று.
அடுத்து நான் கேட்பேன்"இந்தியாவில் போதி மரங்கள் உள்ளனவா..தமிழ்னாட்டில்
 போதி மரங்கள் உள்ளனவா..? நீங்கள் போதி மரத்தை பார்த்ததுண்டா.." என்று
 யாரிடமிருந்தும் பதிலே வராது.
அவர்களைப் பொறுத்தவரை போதி மரம் என்பது ஏதோ சொர்கத்தில் மட்டுமே இருக்கும் ஒரு மரம் எனும் எண்ணம்.
உண்மையில் நாம் அன்றாடம் பார்க்கும் அரசமரம்தான் போதி மரம் என்பது பல ஆசிரியர்களுக்கே தெரியாத நிலையை நான் கண்டிருகிறேன்.
மரங்களில் அது அரசன் என்பதால் அரசமரம் ஆயிற்று. அந்த மரமே அரச நிலையிலிருந்து வந்த புத்தருக்கு ஞானம் போதிததால் போதி மரம் ஆயிற்று.
அது ஏன் மரங்களில் அரசன்?
photosynthesis என்கிற ஒளிசேர்க்கையை 24 மணி
நேரத்துக்கும் நிகழ்த்தக்கூடிய ஒரே மரம் அரசமரம். அதாவது மனிதனுக்கு தேவையான் பிராண வாயுவை தொடர்ந்து  உற்பத்தி செய்யும் மரம் அரசமரம்.
மற்றவையெல்லாம் சூரியன் மறைந்ததும் ஒளி சேர்க்கையை நிறுத்திவிடும்.
அதனால்தான் ஸ்தல விருட்சங்கள் என்கிற பெயரில் ஆலய்ங்களில் அரசமரத்தையும் அதன் குணம் ஒத்த மற்ற மரங்க்ளையும் நம் முன்னோர்கள் நட்டு வைத்தார்கள்.
அரசமரத்தின் கதையே தெரியாவிட்டால் அதன் கிழே வைக்கப்பட்டிருக்கும் நாகலின் கதை என்னவென்று தெரியும்.
அந்த கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் என்று வேறு சொல்லி வைத்தாயிற்று. இளம் சமூகம் எப்படி நம்பும்..?
மேலே அந்த நாகலின் படத்தை தந்திருக்கிறேன்,
இரண்டு பாம்புகள் ஒன்றை ஒன்று பின்னிய நிலையில் உச்சியில் ஒரு சிவலிங்கத்தை கவ்வி பிடித்திருக்கிறது.
இதை நாம் ஏன் வணங்கவேண்டும்? இதை வணங்கினால் மகப்ப்பேறு எப்படி உருவாகும்..?
முன்னுக்கு பின் முரணாக இருப்பது போல் தோன்றும். உண்மை அதுவல்ல.
நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல்ர்.
நவீன அறிவியல் மிக சமீபமாய் கண்டு சொன்ன (genetics) மரபியலை அன்றே சொல்லி வைத்ததற்கான சாட்சி இந்த நாகல்.
இந்த நாகல்லின் படத்தை வேறு மாதிரி சாய்த்து வைத்த நிலையில் நம் பிள்ளைகள் டி,என்.ஏ. என்று அறிவியல் பாடத்தில் படிக்கிறார்கள்.
நேர்மறை மற்றும் எதிர்மறையாக செயல்படும் மரபணுகூறின் வடிவத்தை இப்படி கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.
அந்த கல்லை வெளியில் சுற்றினால் பிள்ளை பிறக்கும் என்று தப்பிதமாக நாம் செய்து வருகிறோம். நாம் உணர வேண்டியது உள்ளுக்குள் டி.என்.ஏ. சுழலுவதில் மாற்றம் வேண்டும் என்பதே .
உடற்கூறியல் கோளாறுகளுக்கும் சுவாசத்துக்கும் மிகுந்த தொடர்பு உண்டு.
அதனால்தான் அந்த கல்லை அரசமரத்தடியில் பிரதிஷ்டை செய்து வலம் செய்ய வைதார்கள்.
தூய்மையான ஆக்ஸிஜன் உள்ள வெளியை கொஞ்ச நேரம் சுற்றி வந்தாலே
 மனமும் உடலும் தெளிவாகிவிடும்.
கோவிலுக்கு போனதும் மனம் தெளிகிற மாயை,பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிட்டதாய் தோணுதல் போன்றவை எல்லாம்..இந்த தூய காற்று டி.என்.ஏ. அணுக்களீல் செய்யும் அதிரடி மாற்றங்களே.
அணுத்தொகுதிகள்தான் நம் உயிர் வாழ்வுக்கான ஆதாரம். அவ்வுயிரணு தொகுதிகள் நம் உடலில் இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்த வடிவத்தில் வலது இடதாய் நம் உச்சி தலையை நோக்கி பயணப்படுகிறது. அங்கேதான் நம் ஜீவன் என்கிற சிவ லிங்கம் உள்ளது.
பாம்புகள் பின்னியிருக்கும் சந்திப்பு புள்ளிகளே நம் ஆதார சக்கரங்கள் செயல்படும் புள்ளி.
இடதும் வலதும் சமனிலைப்பட வேண்டும். மாறானால் இயல்பு நிலையில் மாற்றம்.
வெளியே இருக்கும் நாகலை பாருங்கள். அது நம் உள்ளேயும் இருக்கிறது. சுவாசத்தால் அந்த பாம்புகளை சுகமாய் வைத்திருக்க நம் ஜீவனுக்கும் சுகமே.
ஆயிரம் ஐன்ஸ்டின்கள் ஒன்று சேர்ந்தாலும் நம் கலாச்சாரத்தை பறைசாற்றும் 
அறிவியல் தன்மைகளோடு மனித சமூகத்தை வழிநடத்தும் நம் ஒரு கோவிலை உருவாக்க முடியாது.
முறையாக் சொல்லி தந்தால் நம் ஆன்மிகத்தின் மகத்துவத்தையோ..பெருமையையோ நம் இளையசமுகம் ஒருபோதும் மறுதலிக்காது.
இது என் கருதுகோல் மட்டுமல்ல திடமான முடிவும் கூட.
வாருங்கள் கூச்சப்படாமல் நம்முள் இருக்கும் நாகல்லை ஒரு சுற்று சுற்றி வருவோம்.

Saturday, February 14, 2009

பெரியாரை பிழையாமை பிழையே..!தந்தை பெரியார் அடிக்கடி ஒரு கதை சொல்லுவாராம்."ஏம்பா நீங்க வணங்கும் பிள்ளையார் அவ்ளோ பெரிய உருவமா இருக்காரே அவ்ருக்கு போயி அவ்ளோ சின்ன எலியை வாகனமா வச்சிருக்கிங்களே இது ஞாயமா" அப்படின்னு கேட்டுட்டு,
"ஒரு பிள்ளையார் சிலையை கொண்டு போயி ஆத்துல போடுவோம்..ஒரு தெரு நாயையும் அது கூடவே ஆத்துல போடுவோம் எது கரைக்கு திரும்பி வருதுன்னு பார்ப்போம்.கல்லு மூழ்கிடும் நாய் கரைக்கு திரும்பிடும்.ஆக கரைக்கு திரும்ப ஒரு நாய் அளவுக்கு கூட முயற்சி செய்ய முடியாத சிலையத்தான் நீங்க உங்களை காப்பாத்தும்னு நம்பி கும்பிட்றீங்க. இது பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயமா உங்களுக்கு தோணலியா"-கேப்பாராம். கேக்கறவங்க ஆகா எப்படிப்பட்ட ஒரு கேள்வின்னு உடனே கறுப்பு சட்டையை மாட்டிக்கிட்டு,சிலையை உடைக்க ஆரம்பிச்சிடுவாங்க.
இதுக்கு நம்மாளு ஒருத்தர் பதில் சொன்னாரு.
"சிலையையும் நாயையும் ஆத்துல போட்றது இருக்கட்டும். முதல்ல நாயை தூக்கி சிலை மேல போடுவோம் அதுக்கப்புறம் சிலையை தூகி நாய் மேல போடுவோம். என்ன ஆவுதுன்னு பாக்கலாம்" அப்ப்டின்னு.
எனக்கு ரெண்டுமே தப்புன்னு தோணுது. பெரியார் எதையோ எதிர்க்க வேண்டி சாமியை எதிர்க்க வேண்டிய கட்டாயம். இல்லன்னா அவரே பின்னாளில் புத்த மதத்துக்கு சிபாரிசு செஞ்சிருக்க மாட்டார்.
சிலைகள் வெறுமனே வணங்குவதற்கு உருவாக்கப்பட்ட உருவங்களா அல்லது
அதற்கும் மேல் மனிதன் இப்படித்தான் வாழ வாழவேண்டும் என்பதற்கான சூத்திரங்களை கருத்துக்களாக மறைத்து வைக்கப்பட்ட அடையாள பொதிவுகளா என யோசிக்க வேண்டியிருக்கிறது.
பெரியார் சொல்லிவிடார் என்பதற்காக எல்லாமே சரியாகிவிடுமா என்ன?
வள்ளுவனை துணைக்கு அழைப்போமே 
'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் 
அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு
என நடு நிலையோடு சொன்னவன் அவன் மட்டும்தானே.
வாருங்கள் தேடுவோம். தேடினால்தானே கிடைக்கும். அப்படி நான் தேடியதில் எனக்கு கிடைத்ததைத்தான் உங்களோடு பங்கிடுகிறேன்.

மேலே தந்திருக்கும் இரண்டு பிள்ளையார் படங்களில் எது சரி எது தவறு எனும் முடிவை நாம் எட்டக்கூடுமானால் ஓரளுவுக்கு அடுத்த கட்டத்திற்குள் போய்விடலாம்.
பக்தி நிலையில்மட்டுமே கடவுளர்களை வெளியே வைத்து பார்க்கவேண்டும்.ஞானனிலைக்கு ஏறிவிட்டால் அனைத்துமே உள்ளே. இது எனது பார்வை. நம் இயங்கு நிலைக்கு ஆதாரமான ஆறு சக்கரங்களுக்கும் அவற்றிற்கு தொடர்புடைய பகுதிகளுக்கும் கடவுளர்களை ஆதாரமாக கொண்டால் தீர்வு மிக எளிமை.
பிள்ளையார் மூலாதாரக்கடவுள். முழுமுதல் கடவுள்.
மூலாதாரம்தான் மனித சக்திக்கான ஆதாரம்.நம் எண்ணங்கள் எழுச்சியோடு செயல்களாய் பரிணமிக்கும் வேதி வினை இந்த மையத்தில்தான் நிகழ்கிறது.
மூலாதாரத்தின் இயல்பு எந்த எண்ணத்தையுமே இன்பத்தை நோக்கிய ஆசைகளாகத்தான் பார்க்கும்.
காந்தி அடிகள் தம் தந்தை நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் உள்ளறையில் உறங்கிக்கொண்டிருக்க வெளியே தம் மனைவியோடு உறவுகொள்ள நினைத்ததும், அடிமை இந்தியாவை சுதந்திரத்தின் திசையில் இட்டு செல்ல வேண்டும் என நினைத்ததும் அவரது மூலாதாரத்தில் இருந்துதான்.
ஆக ஆசைக்கும் மேல் இலட்சியம் எனும் உறுபொருள் உள்ளதை மறுப்பதற்கில்லை என்பது தெளிவு.
அந்த காந்தியையே சுட்டுக்கொல்ல ஒருவரின் மனதில் எழுந்த எண்ணமும் மூலாதாரத்தின் செயல்பாடேயன்றி வேறில்லை.
மூலாதாரம் ஆசை அற்று இருக்க வேண்டும். அதாவது மனிதன் ஆசை அற்று இருக்க வேண்டும். இது சாத்தியமாவெனில் இல்லை.
ஆனால் மனிதன் தன் ஆசையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதற்கு தேவை பயிற்சி. பயிற்சியை யார் தருவார்கள்?
பள்ளிகூடமா..? பல்கலைகழகமா..?
கடவுளர் திரு உருவங்கள்தான் இப்பயிற்சியை தரும். அந்த வகையில்தான் இந்த திரு உருவங்கள் வார்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
மூலாதார வினாயகனுக்க வாகனம் எலி. ஏன் எலி ஒரு புலியை வைத்திருக்க கூடாதா.? காரணத்தோடுதான் எலி.
உலக விலங்குகளிலேயே பேராசைப்பிடித்த ஒரே உயிரினம் எலிதான்.
தனக்கு தேவையான உணவை தேவைக்கும் மேல் அதிகமாய் வலைக்குள் கொண்டு போய் சேர்த்து விட்டு சேர்த்ததையே மறந்துபோகும் ஒரு ஜீவன்.
 
மனிதா உனக்குள் எலியை போல் ஒளிந்திருக்கும் எலித்தனத்தை உன்னிடமிருந்து எட்ட வை.
பிள்ளையாரிடமிருந்து எலி எவ்வளவு எட்டத்தில் இருக்கிறது பாருங்கள்.
ஆசைகளற்றும் வாழ முடியாது.ஆகவே எலியின் கையில் ஏதாவதொன்றை தரவேண்டும். படத்தின் படி சிறு கொழுக்கட்டை.
அதை எலி தின்றுவிடலாமா..? கூடாது . நம் மனம் நமக்கு தெரியாமல் எதையும் ஆசைப்பட்டுவிடக்கூடாது.
எலி தன் எஜமானனின் ஆணைக்கு ஏங்கி அல்லது எதிர்பார்த்து அவரின் முகத்தை பார்க்கவேண்டும்.
முதலாளியின் அனுமதிக்கு பிறகே ஆசைப்படுவதும் அனுபவிப்பதும்.
முதலாளியோ ஆசையின் திசையில் பார்க்கவே மாட்டார்.
இப்போது சொல்லுங்கள் மேற்கண்ட இரண்டு படங்களில் எது சரி..?எது தவ்று..?

மூலாதார சக்கரத்தை த்ம்முள் வைத்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் அங்கு சுமந்துகொண்டிருப்பது கணபதியை. அம்மூலாதாரம் ஒவ்வொரு ம்னிதனின் ஆசைகளையும் மேலாண்மை செய்யவேண்டுமென்பதே எலி தத்துவம்.

நாமும் நம் பேராசை எனும் எலியை நம் கட்டுக்குள் வைக்கலாமா..?
ஆன்மிக உருவங்களுக்கு பின்புலனாய் பொதிந்திருக்கும் உண்மைகளை அறிவியலாக்குவோம்.
பிள்ளையார் நம் கடவுளல்ல..நம் பாடத்திட்டம். பயின்றால் தேர்ச்சி இல்லயேல் வீழ்ச்சி.


 

Thursday, February 12, 2009

சிவ பெருமானே உன் சூலத்தை கொஞ்சம் கொடுப்பா


எந்த புராணங்களும்..இதிகாசங்களும் கடவுள் உருவங்களும் அவற்றிற்கு தொடர்புடைய சின்னங்களும் மனித உடல் மனம் உயிர் இவற்றோடு தொடர்புடையவையே என்பார் சிவானந்த பரமஹம்சர்.
வெறுமனே தெய்வங்களை தொழுவதோடு நின்றுவிடாமல் அனைத்தையும் ஒரு மறுஆய்வுக்கு உட்படுத்தி மெய்பொருள் காண வேண்டி இருக்கிறது.
"அன்பே சிவம்"
அன்பு என்பது ஓர் உணர்வு.உயிர்கள் மட்டுமே உணர்வை அனுபவிக்ககூடியவை.
அன்பெனும் உணர்வு அகத்தில் பொங்க உடல் அதை செயல்படுத்துகிறது. வெளிப்படுத்தப்பட்ட அன்பின் விளைவை ஆன்மா அனுபவிக்கிறது.
ஆக அன்போ அல்லது அதற்கு மாறான கோபமோ எதுவாகினும் அது உணர்வாக மனதில் தோன்றி உடல் வழியாக செயல்பட் வேண்டிய்கட்டாயம் . இவை அனைத்துக்கும் சாட்சியாக உயிர் தேமே என்று இருக்கிறது.
அறிவியல் பூர்வமாக ஒரு உயிருக்குள் உணர்வு பயணிக்கும் தொனியை நிறுவமுடியுமா..?
சிவனையும் பார்வதியையும் விட்டு விட்டு சிவன் சதா சர்வ காலமும் தூக்கி பிடித்த திரிசூலத்தை கொஞ்சம் உற்றுப்பார்த்தால் உண்மை விளங்கும்.
சூலத்தை ஆயுதமாக பயன்படுத்தி தன்னை எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ளவேண்டும் என்கிற அவசியம் சிவபெருமானுக்கு இல்லை. அதே போல் தன் சூலத்தால் சிவன் யாரையும் கொன்றதாக எந்த கதைகளும் இருப்பதாக தெரியவில்லை.
அப்படி என்றால் சூலத்தை பற்றிய மெய்பொருளை நாம் காணவேண்டி உள்ளது.
மனிதனின் ஆற்றறிவும் உடலில் ஒவ்வொரு புலனை ஊடகமாக கொண்டு செயல்படுகிறது.
நிலம்-தொடு உணர்வு-உடல்(நிலத்தில் செடி உடலில் முடி)
நீர் _சுவைத்தல்-நாக்கு( நீர் ஊறும் புலன்)
நெருப்பு-ஒளி-கண்(உள்ளொளி கொண்டு அகவொளி காணல்)
காற்று-வாசம்-மூக்கு (சுவாசித்தல்)
ஆகாயம்-ஒலி-செவி (ஆகாசவாணியாய் ஓசையை கேட்டல்)
ஐம்புலன்களுக்கு ஐந்து பூதங்களென ஐந்து அறிவு வரை சூத்திரம் சரியே.
ஆறாவது அறிவு எது- பகுத்தறிவு என நம் பிள்ளைகளுக்கு சொல்லி தந்தோமே தவிர அதற்கு மேல் இம்மி அளவு கூட நாம் ஆறாவது அறிவு பற்றிய அறிதலில் செயல்படவில்லை.
இத்தனைக்கும் பலாயிரம் ஆண்டுக்கு முன்பே ஆறாவது அறிவுக்கு ஒரு பெருந்தகையாளன் பெயர் வைத்தும் இன்னும் நாம் அதை பயன்படுத்துவதில்லை.

ஒன்றறிவதுவே   உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அவற்றொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆற்றறிவதுவே அவற்றொடு மனனே..
நேரிதை உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.

இது தொல்காப்பிய சூத்திரம். ஆறாம் அறிவுக்கு பெயர் மனம்.
மற்ற ஐந்து அறிவுக்கும் உள்ளது போலவே மனதுக்கும் தான் செயல்பட ஒரு ஊடகம் தேவை. 
மனதின் ஊடகம் மூளை. மனதின் செயல் ஆணைகளை மூளை மூன்று வெவேறான மேடைகளிலிருந்து செயல்படுத்துகிறது.
வலது மூளை-இடது மூளை-நடு மூளை(முகுளம்)
இப்படிகூட சொல்லாம்
வடகலை-பிங்கலை-சுழுமுனை
இந்த மூன்று முனைகளை குறிக்கும் அடையாளமே திரிசூலத்தின் தலைப்பகுதி.
இரண்டு முனைகள் வலதிடதாய் நடுமுனை வானம் பார்த்து இருக்கும்.
தெருவிளக்கு கம்பத்தில் உள்ள மின்சாரத்தை வீட்டிற்குள் கொண்டுவரும்போது என்ன செய்கிறோம்..?
phase -nutral- என பிரித்து முறையாக wiring செய்கிறோம் அல்லவா..?
இதே அமைப்புதான் சமச்சீராய் பிரிந்திருக்கும் மனித உடலிலும். இடது பக்கத்திற்கும் வலது பக்கத்திற்கும் உயிராற்றல் என்கிற மின்சாரத்தை எடுத்து செல்ல wiring செய்யப்பட்டிருக்கும் பாதையே முதுகு தண்டுவடம்.
திரிசூலத்தின் தலை பகுதியோடு இப்பொழுது தண்டுவடத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்
எண்ணங்க்ள்தாம் செயல்கள். செயல்களால் விளைவு. அதற்கு பின் அனுபவம் இன்பம் அல்லது துன்பம். இப்படி நிகழ்வது ஒரு சக்கரம்.
எண்ணங்கள் செயலாய் பரிணமிக்க மனம் நினைத்து-மூளை அதை வாங்கி-உடல் உறுப்புகளுக்கு ஆணையாய் சொல்ல- அங்கங்கள் அதை செய்ய்யும்.
இந்த நிகழ்விற்கு ஆதாரமாய் இருப்பது மூன்று மூளையையும் உடலின் அனைத்து உறுப்புகளோடும் இணைத்து வைத்திருக்கும் நரம்பு மண்டலம்.
அந்த நரம்பு மண்டலம்தான் முறையாக நம் தண்டுவடத்தில் wiring செய்யப்பட்டிருக்கிறது.
தண்டுவடத்தை எந்த அளவிற்கு நிமிர்த்தி வைக்கிறோமோ..அந்த அளவுக்கு மினசார பகிர்மாணம் தடை இல்லாமல் இருக்கும்.
அன்பை காட்டுவதால் சிவனாகிப்போன நம் ஒவ்வொருவரும் நம் சூலத்தை எப்படி நிமிர்த்தி வைத்திருக்க வேண்டுமென இப்போது புரியும்.

சூலம் சரி அது என்ன நடுவில் ஒரு உடுக்கை..?
இதுவும் உடல் தத்துவமே.
உடுக்கையை பிரித்து பாருங்கள். ஓசை எழுப்புக்கூடிய இரண்டு பக்கங்கள்.
தோலை வைத்து இறுக்க கட்டப்பட்டிருக்கும்விதம், இவையெலாம் சாதாரண சங்கதிகள் அல்ல.
வலது புறம் இறுக வேண்டுமெனில் அதற்க்கான இறுக்கத்தை இடது பக்கத்திலும், இடது பக்கத்தை வலது புறமாய் இறுக்க வேண்டும். அதாவது நம் உடலில் வலது பக்கம் முழுவதையும் இடது மூளை கட்டுப்படுத்துகிறது.
இடது பக்கம் முழுதையும் வலது மூளை கட்டுப்படுத்துகிறது.

உடுக்கையின் மையத்தில் உள்ள ஓசை எழுப்பும் மணியானது உடுக்கையை வலதிடதாய் அசைக்கும்போது வலது பறையில் இடது மணியும்..இடது பறையில் வலது மணியும் ஓசை எழுப்ப்ம் வண்ணம் ஏற்பாடு.
அதனால்தான் வலது கையோ காலோ இயங்காமல் போனால் சிகிச்சை இடது மூளைக்கு நடக்கும். இயக்கம் இடதில் தடைப் பட்டால் சிகிச்சை வலதுமூளைக்கு நடக்கும்.
நம் ஒவொருவரின் உணர்வுகளும் உடலுக்குள் செயல்வடிவம் பெறுவதற்கான blueprint இதுதான்.
நமக்குள் இருக்கும் நம்க்கு சொந்தமான திரிசூலத்தை இன்று முதல் நாம் பூஜிக்கலாமா..?
உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்.
தேடுவோம்..அனைத்தையும் உள்முகமாய் தேடுவோம்
அறிவியல் ஆன்மீகம் அனைவர்க்கும் நலம் தரும்.. 
.
.
 


Tuesday, February 10, 2009

கந்தனுக்கு...அரோகரா...!

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்.. 
பெங்களூரு ரமணியம்மாள் பாடியதை பலரும் கேட்டிருக்கிறோம். 
முருகனுக்கு பால்.பன்னிீர்.,புஷ்பம்.,என பலவித காவடிதூக்கி 
ஆடுபவர்களையும் பார்த்திருக்கிறோம்..ஆட்டம் சரி..ஆனால் உணார்ந்து 
ஆடுகிறொமா என்பதே கேள்வி. 
"சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் 
செல்லுவர்..சிவபுரத்தின்...."-என்பது மாணிக்கவாசகர் வாக்கு. 
பொருள் புரியாமல் செய்யும் எதற்குமே பலன் இருக்குமா என்பது ஐயமே. 
நம் இந்திய வழக்காற்றில்..மதங்கள் என ஒன்றில்லை.சமய்ங்கள் மட்டுமே 
இருந்தன என ஒரு கருத்துண்டு. 
அவ்வகையில்..நம் மண்ணில் ஆறுவகை சமயங்கள் உண்டு. 
1.சிவனை வழிபடு தெய்வமாக கொண்ட.சைவம்(saivam)-இறைத்தன்மை ஒருமை நிலையில் 
இருக்கும் நிலை. 
2.சக்தியை வழிபடு தெய்வமாக் கொண்ட சாக்தம்(saaktham)-இருமை நிலை 
3.விஷ்ணுவை வழிபடு தெய்வமாக கொண்ட..வைணவம்(vainavam)-மும்மை நிலை. 
4.பிரம்மாவை வழிபடு தெவமாக கொண்ட சௌரம்(sauram)-நான்கு நிலை தன்மை. 
5.விநாயகனை வழிபடு தெய்வமாக கொண்ட காணபத்தியம்(ganapaththiyam) -ஐந்தாம் நிலை. 
6.முருகனை வழிபடு தெய்வமாக் கொண்ட (kaumaaram)-இறை தன்மையின் ஆறாம் நிலை. 
ஆக ஒருமைக்கு உட்பட்ட முதல் நிலையான சிவனிலையில் துவங்கி..ஆறாம் நிலைக்கு 
உயர்வதே மனித வாழ்வு.. 
சிவநிலை என்பது அடக்கமும்..ஒடுக்கமும். 
முருக நிலை என்பது அறிவும்,,விரிவும். 
முன்னது அனைத்தையுமாண்டு அனுபவித்து..முற்றும் உணர்ந்து..அடங்கி ஒடுங்கும் நிலை. 
பின்னது..கையில் ஒரு பெரிய ஆயுதத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என அறியாத நிலை. 
சிவனிலை என்பது உடலையும் சகலத்தையும் கடத்தல். 
முருகநிலை என்பது..உடலுக்குள்ளும்..உள்ளத்துக்குள்ளும் நிலைத்தல். 
முருகன் அவதரித்தது சிவனின் நெற்றி எனக்கொண்டால்..நெற்றி நம் 
ஒவ்வொருவரின்..சிரசாய் விளங்கும் குன்று. 
நெற்றி எனும் குன்றில் இளங்கும்..அறிவுகடவுளே முருகன். 
அறிவுக்கான ஆட்ட மைதானம் நெற்றியெனில்..அறிவை ஆட்டுவிப்பது மூளை. ஆம் 
மனித மூளை..நம் கபாலத்தில் காரணத்தோடு..மூன்று இடங்களில் 
பிரித்துவைக்கப்பட்டிருக்கிறது. 
வலது மூளை..இடது முளை..மையத்தில்..முகுளம். 
ஒருவன் சாராயம் அருந்தினால்..சாக்கடையில் விழுவான்.. 
அவனுக்கு சாக்கடையில் இருக்கிறோம் எனவும் தெரியும்..நாற்றமடிக்கும் 
அதிலிருந்து விடு பட வேண்டுமெனவும் தெரியும்..ஆனால் எழுந்து செயல்பட 
முடியாது.கார்ணம்..முகுளம் பாதிக்கப்படுவதே. 
நம் அன்றாட வாழ்வின் கேள்விகளும் 
விடைகளும்..மகிழ்ச்சியும்.சோகமும்..ஏற்றமும் இறக்கமும்..வலது இடதாய் 
இருக்கிறது. 
கண்கொண்டு பார்த்தால்..ஒரு பக்கம் ஏழ்மை..மறுபக்கம் வளமை. 
இரண்டுக்கும் இடைப்பட நிலை என்பதுதான் நிரந்தரம். அதுதான் அறிவு நிலை. 
சதா நம் கபாலத்தில்..வலது மூளையும்..இடது மூளையும்..செய்யலாமா 
வேண்டாமா..எனப் போராடியே..ஒரு முடிவை எடுக்கிறது. 
நம் எண்ண அலைகள்..கபாலத்தில்..வலதுக்கும் இடதுக்கும் ஆடும் ஆட்டம்.. 
கொஞ்சம் கண் மூடி பார்த்தால்..ஒரு அரைவட்ட நாண் போல 
தெரியும்..அதாவது..காவடியின் மேற்பகுதி போல. 
காவடியாட்டத்தின் சிறப்பே அது விழாமல் இருப்பதுதான். 
in very simple words..kaavadi aattam is the balancing the thing in 
between left and right. 
வலதில் ஒரு கருத்து..இடதில் அதற்கு எதிரான கருத்து.. 
எதை எடுத்துகொள்வது.. 
எந்த பக்கமும் ஒருசார்பாய் சாய்ந்துவிடாமல்..நடுனிலையான 
அறிவுநிலையில்..நாம் வாழவேண்டும்..என்கிற உட்ப்புற மன பயிற்சிக்கான 
வெளியில் நாம் வைத்திருக்கும் அடையாள சின்னமே காவடி ஆட்டம். 
இதற்கு தேவை விழிப்புணர்வு. 
சம்காரம் செய்த கடவுளர்களில்..எதிரியை..மன்னித்து தன்னிடமே வைத்துக்கொண்ட 
ஒரே கடவுள் முருகன் மட்டுமே. 
அன்பும்..அறிவும்..விழிப்புணர்வும் இருந்தாலன்றி இது சாத்தியமில்லை. 
எனவே..வெளியே நாம் பார்க்கும் காவடி ஆட்டத்தை இன்றுமுதல்...நமக்குள் ஆடி பழகுவோம். 
வேண்டுதலிலும் விழாமல்..வேண்டாமையிலும் விழாமல்..நடு நிலையில்..நம் 
அறிவுக்காவடியை ஏந்தி பிடிப்போம். 
நமக்குள் உயிர் உள்ள ஒவ்வொரு நொடியும்..தைப்புபூசமே. 
அரோகரா. 

Sunday, February 8, 2009

ஒரு சிலையின் கதைஒரு சிலையின் கதை

ஒரு ஊரில் ஒருவர் இருந்தார். அவர ஆசிரியராக இருந்தார்.அதுவும் ஓவிய ஆசிரியராக இருந்தார். மனிதராக பிறந்த யாருக்குமே எதன் மீதாவது பற்று இருக்கும்.அதன் மீதே பித்தாக இருப்பார்கள். நம்முடைய ஆசிரியரும்..அப்படி ஒன்றின் மீது பித்தாக இருந்தார். ஆமாம்..அவருக்கு பாரதியார் பித்து.

ஆனந்தவிகடன் பத்திரிக்கை அவரை பற்றி கேள்விப்பட்டு..நிருபரை அனுப்பி அவரை பேட்டி எடுத்தது. அப்போது தன் பாரதி பித்துக்கு..அவர் சொன்ன விளக்க்ம்.."காரணம் தெரியல மகாக்கவி பாரதியை எனக்கு பிடிக்கும்.நான் எங்கும் எதிலும் பாரதியை பார்க்கிறேன்.."-என்று. அந்த பேட்டி வெளியான போதுதான்..இந்த உலகுக்கே தெரியும்..மாணவர்களை வைத்து..பாரதிக்காக அவர் பல நூறு ஓவிய கண்காட்சிகளை நடத்தியவர் என்று. அது மட்டுமல்ல..எண்ணற்ற ஓவிய ஆசிரியர்களையும்..உருவாக்கியவர் என்று..

இப்படியான அந்த ஓவிய ஆசிரியருக்கு திடீரென ஒரு ஆசை வந்தது. தனது ஊரில் பாரதிக்கு ஒரு சிலையை நிறுவி பார்க்கவேண்டுமென்று. அதற்கான தருணத்திற்காக காத்திருந்தார். அவர் நேரம் பாருங்கள்..அவரிடம் எப்போதோ படித்த ஒரு மாணவன் சிற்பியாகிய நிலையில் அவரை சந்திக்க..நெடு நாளுக்கு பிறகு குருவும் சிஷ்யனும் சந்தித்த அந்த நிகழ்வில்..சிலை பற்றிய பேச்சு பபிரதானமாகிவிட..தன் குருவுக்கு தன் வாழ்னாளில் ஏதாகிலும் செய்துவிட துடித்த அந்த மாணவன்...ஆசிரியரின் சிலைக்கான கனவை..சாத்தியமாக்குவதில் முனைந்தான்.

கண்ணகிக்கு..சிலலை எடுக்க ஒரு மன்னன்..எங்கிருந்தோ கல் கொண்டு வந்த்தாய் பாடத்தில் படித்தோமே..அதை போல பாரதியை வடிப்பதற்கான சிலைக்கு கல் கொண்டுவர..இருவரும் பயணப்பட்டார்கள். சித்திரம் பற்றி தெரிந்த ஆசிரியருக்கு சிலை பற்றி எதுவும் தெரியாததால்..எல்லா பொறுப்பையும் சிற்பியிடமே ஒப்புவித்தார்.கல் கிடைத்தது ஒரு கதை என்றால் அதை கொண்டடுவந்து சேர்க்க அவர்கள் பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல.

சிற்பி கல்லை தன் வீட்டிற்கே கொண்டுவந்து விட்டார். நல்ல நாள் பார்த்து வேலை துவங்கியது. ஒரு முரட்டு கல்லுக்குள்..சகாப்தம் படைத்த ஒரு மகா கவியின் திரு உருவை கொண்டுவருவதில்..சிற்பி தவமாய் ஈடுபட்டார். சிற்பியின் ரத்த துளிகள் தெறித்து..தெறித்து..பாரதி படிப்படியாக உருக்கொண்டான்.

சிலையை எங்கே வைப்பது..? அடுத்த கேள்வி ஆசிரியருக்கு..அதிலும் ஒரு கனவு..அவருக்கு..தன் ஊரின் புகை வண்டி நிலயத்தில் எப்படியாவது நிறுவவேண்டும் என்று. கேள்விப்பட்டவர்கள் எல்லோரும்.."ஆ..அப்படியா..வைத்துவிடலாம்..இது ஒரு பெரும்சாதனை.."என ஆசிரியரை புகழ்ந்தார்கள்.

ஒரு டிசம்பர் மாதத்து நன்னாளில்..ஐம்பது..கவிஞர்கள்...பாரதியை பற்றி..எழுதிய..கவிதை புத்தகத்தையும்..வெளியிட்டு..பல தமிழ் அறிஞர்களை வர வைத்து..சிலைக்கான திறப்புவிழாவை..நடத்தி முடித்தார்.

சிலை திறப்புவிழா ஒரு உணர்வுபூர்வமான விழாவானது. வந்த அறிஞர்கள்..சிலையின் செய்நேர்த்தியில் சொக்கித்தான்போனார்கள்..விழா முடிந்து..அவரவர் அவரவர் வீடு திரும்பினார்கள்.

பாரதியும்..தான் நிறுவப்படும் நாள்வரை..அந்த ஆசிரியரின்..வீட்டில் இருக்கவேண்டி..திரும்பினார்.

நாள் ஆயிற்று..நாட்கள்..மாதமாயிற்று..மாதம் வருடங்கள் ஆயிற்று. பாரதி ஆசிரியர் வீட்டிலேயே...இன்னமும்.

கலையும்..இலக்கியமும்..கவிதையும்..மனிதனேயமும்..சமூக அக்கறையும் கைவந்த

ஆசிரியருக்கு அரசியல் வரவில்லை. எத்தனை அமைப்புகளிடம் முறையிட்டும்..,M.L.A. M.P...,மந்திரி..என்று எழுதாத மனு இல்லை செய்யாத முயற்சி இல்லை.

மகாகவியின் சிலை நிறுவப்பட்டபாடில்லை.

அந்த ஆசிரியர்: ஓவியக்கவி.வீரமணி., ஆசிரியர்..,இராமகிருஷ்ணா மேனிலைப்பள்ளி.

அந்த சிற்பி :ஜே.வி.சுரேஷ்.

அந்த ஊர் :செங்கல்பட்டு

சிலை நிறுவப்பட்ட ஆண்டு:2005..,டிசம்பர்

நடப்பாண்டு :2009

ஆக..கடந்த நான்கு வருடங்களாய்..ஆசிரியரே தம் வீட்டில் சிலைவடிவில் பூஜிக்கும் நிலை. தமிழ் ஆர்வலர் அனைவரும் எடுத்த பெரும் முயற்சிகளுக்கு இன்னும் பலன் கிட்டவில்லை.

அரசியல் ஒரு தடை..அதிகாரம் ஒரு தடை..!

அரசியலை காட்டி..அதிகாரம்..ஒதுங்க..அதிகாரத்தை காட்டி அரசியல் பதுங்க..

பாரதியின் நிலை பரிதாபம்.

அந்த மகாகவி வாழ்ந்தபோதும் நாம் கண்டுககொள்ளவில்லை.

உங்களில் யாரேனும்..உணர்வாளர்கள் இருந்தால்..

1. பாரதியை சென்று தரிசித்து வரலாம்..

2.இந்த செய்தியயை...மற்றவர்களுக்கு தெரியப்படுத்தலாம்.

3.பலத்தை பிரயோகிக்க இயலுமெனில்..அரசியல்..அதிகாரரம்..ஏதாவது ஒரு மட்டத்தில் மோதி..சிலை நிறுவப்பட..உதவலாம்.

4.சகாப்தம் படைத்தவர்களுக்கும்..வணங்கப்படவேண்டியவர்களுக்கும்..சிலை எடுப்பது..தமிழர் நாகரிகம்.., அது தொடர வவேண்டுமனில்...செங்கை புகைவண்டி நிலையத்தில்..பாரதி சிலை சீக்கிரம் நிறுவப்பட வேண்டும்.

5.இது பல நூறு செங்கை மக்களின் உள்ளக்கிடக்கை.

6.மீண்டும் ஒரு முறை மேலே இருக்கும் அந்த சிலையில்..பாரதியின் ஆளுமையை பாருங்க்ள்.