உள் நுழையும் விழிகளுக்கு

படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்..அது படைப்பாளிக்கு தாய்பால் மாதிரி.

Followers

About Me

My photo
வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது. உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்..நம் உயிராம் தமிழோடு பிணைத்துக்கொள்ளுங்கள்.

Thursday, March 19, 2009

பல்லாங்குழி ஆடலையோ..பல்லாங்குழி.


இந்த கட்டுரை எழுதப்படுவதற்கு முழுமுதல் காரணாமாய் பின்புலத்தில் இருந்து என்னை இயக்கியது இணையக் குழும எழுத்தாளர்களில் மகாப்பெரியவர் ஐயா நடராசன் கல்பட்டு நரசிம்மன் அவர்களும், அவர்களுடைய "பல்லாங்குழியும் பல்போன பாட்டியும்" என்கிற நாடகமும்தான். அதை நீங்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டுமென்பது எனது பேரவா. இதோ இணைப்பையும் தந்திருக்கிறேன்.http://groups.google.com/group/palsuvai/browse_frm/thread/3e7015198b6e4d15?hl=en கொஞ்சம் பெரிதாக இருக்கிறதே என்று நீங்கள் உங்கள் அவசர உலகை காரணம் காட்டி நழுவிச்சென்றால் ஒரு பெரிய நல் இலக்கியத்தை இழந்த நட்டத்தை அடைவீர்கள்.

சரி நாம் ஏற்கனவே பல விளையாட்டுகளுக்கு பின்னால் இருக்கும் தாத்பர்யங்களையும், தத்துவங்களையும் பற்றி மிக விரிவாக பேசிவருகிறோம். அதில் இன்றைய சுற்று ஆட்டம். பல்லாங்குழி.பொதுவாக ஆங்கில வழக்கப்படி ஆட்டங்களை..உள்ளரங்க ஆட்டம், வெளியரங்க ஆட்டம் என பிரிப்பதுண்டு. அவ்வகையில் இந்த ஆட்டம் உள்ளரங்க ஆட்டம் . இருவராக ஆடக்கூடிய ஆட்டங்கள் நிறைய உண்டு. நம் விஸ்வனாதன் ஆடும் சதுரங்கம் முதல், நம்ம ஊரு பொண்ணு உலகையே கலக்குதே அந்த கேரம் வரைக்கும் நிறைய ஆட்டம் இருந்தாலும்.. அவற்றிற்கெல்லாம் இல்லாத தனிபெரும் பழமையும், தத்துவ தன்மையும் பல்லாங்குழிக்கு உண்டு.

இருவராக ஆடும் எல்லா ஆட்டங்களுமே எதிரில் விளயாடுபவர்களை வீழ்த்தும் ஆட்டம். பல்லாங்குழி மட்டுமே வெற்றிக்கும் தோல்விக்கும் பின்னால் ஒரு சத்தியத்தையே சொல்லக்கூடிய ஆட்டமாகும்.பல்லாங்குழி மனையின் அமைப்பை கவனித்தால் பெரும் வியப்பு தோணும் எனக்கு. ஆம்..ஒரு மீனின் வயிற்றை ஒரு பகுதியில் மட்டும் கிழித்து அப்படியே திறந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு அமைப்பு. ஒரே மனையாய் மூடியிருந்தது இப்போது பாதி பாதியாய் பிரிந்து, இந்த பக்க ஆட்டக்காரரக்கு பாதி அந்த பக்க ஆட்டக்காரருக்கு பாதி. அவர்களுக்கான பாதியில் இருப்பது ஏழு குழிகள். ஒன்று கூடாது..ஒன்று குறையாது. ஏழு குழிகள். மூடிய போது ஏழு முழுக்குழிகளாய் இருந்தவை ஆட்டம் துவங்கியதும்..ஏழு அரைக்குழிகளாக பிரிந்துவிட்டது.
இந்த ஏழு என்றதும் பலருக்கும் பல உண்மைகள் தோணலாம்..அதென்ன மிக சரியாய் ஏழு என்று..?ஆம் நம் கலாச்சரத்தில் ஏழுக்கு இருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை யாராலும் மாற்றமுடியாது. நாம்தான் இன்னும் உணராமல் இருக்கிறோம்.

இந்த பல்லாங்குழிமனையே ஒரு மனித உடல்தான். மனித உடல்தான் என்ற பிறகு அதைபோய் பிரிப்பானேன்..? பிரிக்கத்தான் வேண்டும். காரணம்..ஒவ்வொரு மனிதனும் இரண்டாகத்தான் இருக்கிறோம். ஆம்..இவ்வுலகின் ஒவ்வொரு ஆணும் பெண்ணுமே அர்த்தனாரிகள்தான்.நம் உடலில் உச்சந்தலை சகஸ்ரம் உட்பட இருக்கும் ஆறு ஆதாரசக்கரங்களே இந்த ஏழு குழிகள்.சிவபெருமான் தன் உடலில் பாதியை சக்திக்கு கொடுத்துவிட்ட கதை நமக்கு தெரியும். இதை நம் ஒவ்வொருவரின் வாழ்கையோடு பொருத்திபார்க்க முடியுமா..? 
நிச்சயமாக முடியும். இந்த உலகமே ஈர்ப்பு தத்துவத்தின் அடிப்படையில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்மைக்குள்ளும் சரிபாதி பெண்மை இருக்கிறது. அதுபோலவே ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சரி பாதி ஆண்மை இருக்கிறது. அது மறைத்துவைக்கப்பட்டிருக்கிறது. இதை காலம் உணர்த்தும்போது ஒரு ஆண் தனக்குள் இல்லாததான பெண்மையை ஒரு பெண்ணிடம் தேடுவதும், ஒரு பெண் தன்னிடம் இல்லையென கருதும் ஆண்மையை ஒரு ஆணிடம் தேடும் தன்மைதான் உடல் ஈர்ப்புக்கான அடிப்படை.

அந்த ஈர்ப்பு ஒரு முடிவுக்கு வந்து பந்தத்தில் நிறைவுறும்போது - இணைகளாய் மாறிய அவர்கள் அர்த்தநாரிகள் ஆகிறார்கள்.தம் நேசங்களை நிறைவு செய்துகொள்ளும் பொருட்டு அன்பு காட்டுபவர்களாகவும், விட்டுதருபவர்களாகவும் மாறுகிறார்கள்.தனி தனி உடல் ஆனாலும் வாழ்வின் வெவ்வேறு தளங்களில் மனதால் இணைந்தே அவர்கள் முடிவெடுத்து வாழவேண்டியிருக்கிறது.

சரி பல்லாங்குழி ஆட்டத்திற்கும் இந்த தன்மைகளுக்கு என்ன தொடர்பு...? 
நம் வாழ்வின் ஆதாரமாய் விளங்கும் நம் ஆதாரசக்கரங்கள் ஆண் - பெண்ணாய் பிரிந்து அதே நேரத்தில் ஒத்த முடிவில் இணைந்து செயல்படும் தன்மையதாய் உள்ளதன் குறியீடே பல்லாங்குழியாட்டம்.
இன்னொரு விதத்தில் சொல்வதானால் - கோவில் அரசமரத்தடியில் இருக்கும் 'நாகல்'பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, நம் உடலின் ஆறு ஆதார மையங்களை உச்சி சகஸ்ராரத்தில் இணைப்பதான குண்டலினி பாம்பின் மடித்துவைத்த தோற்றமே பல்லாங்குழி மனை. மிக பழமையான பல்லாங்குழி மனைகளில் பாம்புகள் செதுக்கப்பட்டிருப்பதை நீங்களே பார்க்கமுடியும்.

ஆணின் குண்டலியினில் பெண்ணின் ஆளுமை, பெண்ணின் குண்டலியினில் ஆணின் ஆளுமை , மற்றும் அத்தியாவசியமே.. பல்லாங்குழி ஆட்டத்துக்கான அடிப்படை. ஒரு ஆண் தனியாக முடிவெடுப்பதும், ஒரு பெண் தனியாக முடிவெடுப்பதும்..வாழ்வில் என்ன வகையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு பெரிய உதாரணங்கள் தேவை இல்லை . மகாபாரதத்தில் சூதாடியபோது ஆண்கள் முடிவெடுத்தார்கள். இராமயணத்தில் மானுக்கு ஆசைப்பட்டு கணவன் ராமனையும், இலக்குவனையும் இயக்கியபோது சீதை முடிவெடுத்தாள்.
அரிச்சந்திரபுரானத்தில்- தன் உண்மை பேசும் கொள்கையிலிருந்து தவறக்கூடாது என்பதற்காக மன்னன் அரிச்சந்திரனும் - அவனது மனைவியும் சேர்ந்து முடிவெடுத்தார்கள்.

இருவர் ஒத்திசைந்து முடிவெடுத்து காலவோட்டத்தில் துன்பம் வந்தாலும் நிலையான இறுதி இன்பத்தை அடைய இப்படி எடுக்கப்படும் முடிவுக்கு பல்லாங்குழியாட்டத்தில் நிருபணம் உள்ளதா..?
உள்ளது. அந்த ஏழு குழிகள் சொன்னோமல்லவா..? அவை வேறெதுவுமில்லை..
1.சகஸ்ராரம்
2.ஆக்ஞா
3.விசுக்தி
4.அனாகதம்
5.மணிபூரகம்
6.சுவாதிஷ்டானம்
7.மூலாதாரம்.

இந்த ஏழின் முழுமையும் இந்த ஆட்டத்தில் சரி பங்காய் பிரிக்கப் பட்டிருக்கிறது.
நம் ஞானியரின் பார்வையில் இந்த ஏழு சக்கரங்களும் இன்னொரு பார்வையில் சுட்டிக்காட்டபட்டுள்ளன.
சகஸ்ராரம் துவங்கி விசுக்திவரை - ஆகாயம் அல்லது மேலோகம் அல்லது சொர்க்கம் எனவும், அனாகதம் துவங்கி சுவாதிஷ்டானம்வரை பூலோகம் எனவும், கடைசி மூலாதாரம் அதற்கு கீழ் நரகம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இப்போது பல்லாங்குழி மனையை விரித்துவைத்துக்கொள்ளுங்கள். சோழிகளை எடுங்கள். எவ்வளவு சோழிகள் தெரியுமா ஒவ்வொரு குழிக்கும் எட்டு எட்டு. இது எண்குணத்தின் குறியீடு. இந்த எட்டு குணங்களைக்கொண்டுதான் நாம் நம் ஒவ்வொரு உணர்வுகளையும் இந்த உலகை நோக்கி பிரதிபலிக்கிறோம்.
விளையாட இருவர் அமர்ந்தாயிற்று. அவர்தம் முறையே இடது பக்கம் ஒருவருக்கும் வலது பக்கம் ஒருவருக்குமாக இருக்கும் முதல் குழியே சகஸ்ராரம். ஆட்டத்தை துவங்குபவர் எந்த குழியில் இருந்தானாலும் விளயாட்டை துவங்கலாம்.

permutation and combination தத்துவப்படி- முடிவுகள் வெவ்வேறாக இருந்தாலும் - மேலோகம் என்று சொல்லக்கூடிய 
முதல் மூன்று குழிகளிலிருந்து துவங்கப்படும் ஆட்டம் மிகுந்த லாபம் தரக்கூடியதாகவும், பூமி, நரகம் என்று சொல்லக்கூடிய பகுதியில் துவங்கும் ஆட்டத்தின் போக்குகள் வேறு மாதிரி இருப்பதையும் நீங்கள் விளையாடி பார்த்தால் கண்கூடாக அனுபவிக்கலாம்.

இந்த வாழ்வு எதிர்மறைகளுக்கு இடையில் ஒத்திசைந்து நேர்மறையாய் வாழவேண்டியதன் தேவையை பல்லாங்குழி ஆட்டம் உணர்த்துவதை நீங்களே உணரமுடியும்.
சிறு வயதில் என் காது கேட்காத பாட்டி - என்னோடு விளையாடும்போது ஜெயித்துக்கொண்டே இருப்பாள். நான் அழுவேன். ஒரு முறை சொன்னாள்.."இந்த குழியிலேர்ந்து எடுத்து ஆடு..நீயும் ஜெயிப்பே.."என்று.
ரகசியம் அதுதான். நம் முன்னோர்களின் அத்தனை உருவாக்கங்களும் ஞானமேயன்றி வேறில்லை. 

Monday, March 16, 2009

ஞான விளையாட்டுகள்


மனித வாழ்வை வினையாட்டு என்பதா..?அல்லது விளையாட்டு என்பதா..? 
"...விளையாட்டுடை யாரவர் அன்னவர்க்கே சரண் நாங்களே .."- என ஒருபாட்டு வரும். வாழ்வு ஒரு விளையாட்டுதான். சிலர் நேர்த்தியாய் விளயாடி வெற்றி கோப்பையோடு வீடு திரும்புகிறார்கள். பலர் வெறுங்கையோடு கோப்பைக்காக அல்லாடத்தான் வேண்டியுள்ளது.

ஆம் நம் முன்னோர்கள் வாழும் கலையையும் விளயாட்டாகவே சொல்லி வைத்தார்கள்.ஏற்கனவே "வெறும் ஆட்டம் அல்ல கரகாட்டம்" கட்டுரை படித்திருப்பீர்கள், அந்த வரிசையில் இன்று நாம் முன்வைக்கும் விளையாட்டு "கும்மியாட்டம்" மற்றும் அதன் தன்மைகளை ஒத்திருக்கும் "தாண்டியா" ஆட்டம்.
இவை சாதாரண விளையாட்டுகள் அல்ல.தனிமனித வாழ்வியல் ஒழுங்கையும் ஒவ்வொரு தனி மனிதரும் தம் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய பங்களிப்பின் கடமையையும் உணர்த்த வேண்டி ஏற்படுத்தப்பட்ட விளையாட்டுகள் என்றால் மிகையில்லை.

இம்மாதிரியான விளையாட்டுகள் பொதுவாக திருவிழா காலங்களில் ஆடப்படுவது நாம் அறிந்ததே.நமகலாச்சாரத்தின் பார்வையில் திருவிழாக்களே பாட்ங்கள்தான்.கும்மி ஆட்டமும், தாண்டியா ஆட்டமும் திருவிழா காலங்களில் ஆடப்படும் ஆட்டங்களே. இவற்றில் ஆன்மீக சாரமும், உளவியல் கூறுகளும், அறிவியல் அற்புதங்களும் திரைமறைவில் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன.நாம் பல்லாயிரம் முறை கோயிலுக்கு போயிருக்கிறோம். அர்ச்சகர் சாமிக்கு தீபாராதணைக் காட்டும் முறையை உன்னிப்பாக கவனித்து உள்வாங்கியிருக்கிறோமா என்றால் இல்லை என்பதே விடை. திருமூர்த்தத்தின் உச்சந்தலை துவங்கி..திருப்பாதம் வரை - ஒரு பாம்பு வளைந்திருப்பது போன்ற பாவனையில் நமக்கு காட்டும் நோக்கில், அந்த பாம்பினை அடையாளம் காட்டி - அதை கீழிருந்து மேல் உயர்த்தி எடுத்து சென்று மூர்த்தியின் முகத்தைக் காட்டுவார் அர்ச்சகர். குண்டலினி என்கிற பெயரும் அதன் முக்கியத்துவமும் , உள்ளர்த்தமும் மதப்பார்வையில் பார்க்கப்படுவதால் அதன் இன்றியமையாத தன்மையை உணரமுடியாமல் ஆகிவிட்டது.

குண்டலினியை - யோகவியல் சாராது - உளவியல் ரீதியான பார்வையில் பகுப்போமேயானால் "தனிமனித எழுச்சி"-என பொருள்கொள்ள முடியும். அறிவியல் ரீதியாக பொருள்கொண்டால் "உடலியல் உட்கூறுகளை நெறிப்படுத்துதல்"என பார்க்க முடியும்.

உலகவாழ்வே இம்மூன்று அம்சங்களைத்தான் சார்ந்துள்ளது.நாம் ஒவ்வொருவரும் நம் தனி மனித எழுச்சிக்கு பொறுப்பேற்க வேண்டும். அதன் பின் நம் சமூக பங்களிப்பை உனர்ந்து அதிலும் எழுச்சிக் காண வேண்டும். காரணம் நாம் தனிமனிதர்கள் மட்டுமல்ல..சமூக கூட்டமும் கூட. இந்த பிரிக்க முடியாத பந்தத்தை நாம் மற்க்காதிருக்கவே முன்னோர்கள் இத்தத்துவங்களை விளையாட்டிற்குள் பதுக்கி வைத்தார்கள் என கொள்ளமுடியும்.

அரசமரத்தடியில் இருக்கும் "நாகல்" நம் ஆறு ஆதார சக்கரங்களை குறிக்கும் அடையாளம் என ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அங்கு அது வணங்கப்படுவதற்கு, இங்கு அது உணர்ந்து, விளையாடி ஏற்றம் பெறுவதற்கு.
கும்மியாட்டத்தில் வெறும் கைகளை தட்டி ஓசையெழுப்புவதையும்,குனிந்து நிமிர்ந்து விளையாடுவதையும், கூட்டமாக, குழுவாக ஆண், பெண் என ஆடுவதையும் மட்டும்தான் மிக சாதாரன பார்வையில் பார்த்திருக்கிறோம்.
இப்போது நாம் குறிப்பிடும் முறையில் இந்த விளையாட்டை அணுகிப் பாருங்கள் அதில் பொதிந்த ஞானம் புலப்படும்.

கீழே மூலாதாரத்தில் இருக்கும் சக்தியை குனிந்து - அங்கிருந்து எழுப்பி - ஒவ்வொரு ஆதாரமாக உயர்த்தி -இறுதியில் தலை உச்சிக்குக்கொண்டுபோய் தட்டி முடிப்பது ஒரு சுற்று.- அதன் பின் அப்படி தட்டி முடித்த நிலையில் - அப்ப்டி எழுச்சியின் நிலைக்குப் போன ஒவ்வொருவரும் தமக்குள் அதாவாது தம் எழுச்சியை பிறரோடு பங்கிட்டுக்கொள்வதான ஒரு சுற்று. கீழ் நிலையிலிருந்து மேலுக்கு உயரும்போதே அடுத்தவரோடு இணைந்து, பகிர்ந்து ஒத்திசைவகளோடு கூட்டமாய் மூன்னேறும் வகையிலான ஒரு சுற்று. 
தனியாக கற்றல் - குழுவாக கற்றல்- கற்றதை பகிர்தல் - என்கிற பார்வை எவ்வளவு உன்னதமாய் இருக்கிறது பார்த்தீர்களா..?இதையே இன்னும் கொஞ்சம் அழுத்தி சொல்வதனால் மனித சக்தியினை உயர்த்தியதன் விளைவை 
தனியாக பெறுதல்- குழுவாக பெறுதல் - ஒவ்வொருவரோடும் பகிர்தல் .
இந்த நிலை அறிவிலும், பொருளிலும் எட்டப்படுவதே உண்மையான சமதர்மம் ஆகிவிடுமல்லவா..?

கும்மியாட்டத்தில் மனிதனின் வலது - இடதான சக்திகள் பெருக்கல் குறியாய் அடையாளம் காட்டப்பட - கைகள் தட்டி ஓசை எழுப்பப்படுகிறது. தாண்டியா ஆட்டத்தில் வெறும் கைகளுக்கு பதிலாக இரண்டு குச்சிகள் - நம் மாயா குண்டலினி பெருக்கல் உறி வடிவத்தில் இயங்குவதை அடையாளமாக காட்ட பயன்படுத்தப்படுகிறது.

மனித வாழ்வில் ஆன்மிகமும்,உளவியலும்,அறிவியலும் பிரிக்க முடியாத அம்சங்கள். நமது நோக்கம் மனிதம் எழுச்சிப் பெற வேண்டும். அந்த எழுச்சி ஆன்மிகம் சார்ந்து நிகழ்ந்தாலும் சரி, உளவியல் சார்ந்து நிகழ்ந்தாலும் சரி, அறிவியல் சார்ந்து நிகழ்ந்தாலும் சரி.
இம்மூன்று தத்துவங்களுக்கும் பொருந்துகிற வண்ணத்தில்தான் நம் முன்னோர்கள் அனைத்து ஏற்பாட்டையும் செய்துவிட்டு போயிருக்கிறார்கள்.
புரிந்துகொண்டு விளையாடுவோம் வாருங்கள்..!

Monday, March 9, 2009

எது சரி..?எது தவறு...?- மணிபூரகம்


இதயத்திற்கும் நுரையீரலுக்கும் நடுனாயகமாய் விளங்கும் அனாகதம் உனர்வு மையம் என பார்த்தோம். நம் உடல் அமைப்பு என்பது வலது இடதாக சமச்சீராக அமைந்துள்ளது. வலதில் ஒரு கை,ஒருகால், செவி, கண் இதைப்போன்றே இடதிலும் ஒரு கை,ஒரு கால்,செவி, கண். உடலின் ஒட்டுமொத்த இடது பாகத்தையும் வலது மூளையும், ஒட்டுமொத்த வலதுபாகத்தை இடது மூளையும் கட்டுப்படுத்துகிறது.

ஐம்புலன்கள் என்று சொல்லக்கூடிய கண்,காது,செவி, வாய்,மூக்கு ஆகியவை நமது கட்டுப்பட்டில் இயங்கும் வண்ணம் புறத்தே அமைந்துள்ளது. இந்த புலன்கள் அனுபவங்களைத் தரக்கூடியவை என்பதால் வெளி உலகை பார்க்கும் வண்ணம் இயற்கை அமைத்துள்ளது. அதே சமயம் நம் உடல் இயங்க தேவையான உறுப்புகள் ஒவ்வொன்றும் உடலின் உட்புறமாய் வைக்கப்பட்டு பூட்டப்பட்டுள்ளது. நம் விருப்பத்திற்கேற்ப நாம் அதை இயக்க முடியாது.தானியங்கிகளாக அவை இயங்குகின்றன.

ஞானிகள் நம் உடலில் ஒன்பது துளைகள் இருப்பதாக கூறுவார்கள். இரண்டு கண்கள் + இரண்டு செவிகள் + இரண்டு நாசி துவாரங்கள் +வாய்+ ஜல + மல துவாரம் என மொத்தம் ஒன்பது. இதில் கழிவு வெளியேற்றத்திற்கு உதவும் கடைசி இரண்டை தவிர்த்து மற்றவை அனைத்துமே உள்நுழைவு வாயில்கள் ஆகும்.
கண்களின் வழியாக..காட்சியையும், செவிகளின் வழியாக ஓசைகளையும்,நாசியின் வழியாக நறுமணத்தையும்,உள்வாங்குகிறோம். வாய் வழியாக நாம் உயிர் வாழத்தேவையான உணவினை உட்க்கொள்கிறோம்

உணவானது வாய்வழியே சென்று நமக்கு சக்தியை தருவது குழந்தைகளுக்கும் தெரியும் சாதாரண விடயம். ஆனால்..கண்வழி நாம் பார்க்கும் காட்சிகளும் , செவி வழி கேட்கும் ஒலியும்.நாசிவழி நுகரும் மணமும் நமக்கு சக்தி தருவதை நாம் உணர்வதில்லை.உடலுக்குள் செல்லும் உணவு செய்யும் அத்தனை பணியையும் இந்த புலன்வழி நாம் கொள்ளும் அனுபவங்கள் நமக்குள் செய்கின்றன.

நீங்கள் விரும்பாத காட்சி ஒன்றை தொண்டைக்குழி ஏற்காது- அதனால்தான் " அவர் சொன்னதை என்னால் விழுங்கவே முடியல" என்கிறோம். விழுங்கி தொலைத்த ஒருவர் "என்னால அதை ஏற்க முடியல "என்கிறார். ஒரு விஷயத்தை ஏற்கவேண்டியது அனாகதம் என்கிற இதயத்தின் பணி. ஏற்றுக்கொண்ட ஒருவர் சொல்கிறார்" அதை என்னால் செரிக்க முடியல.."

வாய் வழியாக நாம் உட்கொள்ளும் உணவு நேரடியாக நமக்கு சக்தியாக சேராது.இட்லி,தோசை, பொங்கல், பூரி என வகை வகையாக நாம் உள்ளே தள்ளிய அனைத்தையும் இரைப்பை கார்போஹைரேட்டகவும்.புரதமாகவும்,உப்பாகவும்,சர்க்கரையாகவும்,இதர வைட்டமின்களாக மட்டுமே பார்க்கும். தன்னிடத்தில் வந்த அரைத்த உணவுக் கலவையை சாதக பாதகங்களோடு இனம் பிரிக்கும் வேலையை செய்யும். அதன் பின்னரே செரிமாணப்பணி.

இந்த பணி-உள்ளூர் தபால் நிலையத்தில் போட்ட ஒரு கடிதத்தை ஊர்வாரியாக பிரிப்பார்களே(sortout)அந்த பணிக்கு ஒத்தது.நம் வாழ்வில் நாம் சந்தித்த ஒரு நிகழ்வின் சாதக பாதகத்தை ஆய்ந்து - பிரிக்கும் மகத்தான பணியைத்தான் "மணிபூரக மையம்" செய்கிறது. இந்த மையத்தின் அதிமுக்கிய செயலதிகாரிகளாய் முன் நிற்பவர்கள் நமது சிறுனீரகங்கள் ஆகும்.

ஒவ்வாமையான உணவு வயிற்றில் இறங்கினால் -செரிமானத்தை,கழிவுவெளியேற்றத்தை பாதித்து உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி ஊரு விளைவிக்குமோ அதை போலவே நாம் அனுபவிக்கும் ஒவ்வாமையான விஷயங்கள் உடலை பாதிக்கும். அதனால்தான் உடல்னலம் கெட்டால் மனனலமும் சேர்ந்தே கெடுகிறது. உடலும் மனமும் ஒன்றி பிணைந்த அம்சங்களாகும். இதமான உணவினால் நம் ஆரோக்கியத்தை பேணுகிற மாதிரி, இதமான உணர்வுகளால் இந்த மையத்தை நாம் அணுக வேண்டும்.

கருத்தியல்களில் நாம் முரண்பட முரண்பட..இந்த மையத்திற்கு அழுத்தம் அதிகரிக்கும். உணர்வில்லாமல் உள்ளே தள்ளிய உணவை ஓரளவுக்கு பிரிக்க முயன்று, இறுதியில் பிரிக்க முடியாமல் கொழுப்பு கட்டிகளாக உடலில் கிடைக்கும் இடத்தில் எல்லாம் அப்பிவிடும். நாம் கண்டபடி திணிக்கும் கருத்துக்களுக்கும் இதே கதைதான்.
பகவான் புத்தர்தான் இந்த ஆய்வை கண்டறிந்தார். பகுக்க முடியாத நிலையில் ஆசைகளும், கனவுகளும், இந்த மையத்தால் ஓரங்கட்டப்பட்டு உடலில் அதிர்வுகளாக, கண்ணுக்கு புலனாகாத முடிச்சுகளாக இறுகுகின்றன என கண்டறிந்தார்.

கார் வாங்கவேண்டும் என தகுதிக்கு மீறி ஆசைப்பட்டவனுக்கு என்ன நிகழும்..? அந்த எண்ணம் நிறைவேறாத நிலையில் உள்ளே அதிர்வாக தங்கும். நாளொருமேனி பொழுதொரு வண்ணம் சாலையில் ஓடும் வண்ண வண்ன கார்களை பார்க்கும்போதெல்லாம் ஏங்கும். காரில் செல்பவர்களைப் பார்த்து பொறாமைப்படும். நாம் வாழவேண்டிய வாழ்க்கயை இன்னொருவர் வாழ்வதாய் பார்க்கும். "நம்மால் வாங்க முடியவில்லை பக்கத்து வீட்டுக்காரன் எப்படி வாங்கினான்" என ஆராய்ச்சி செய்யும்.

மூச்சை ஒழுங்குபடுத்தி உடலுக்குள் நிறைவேறாத ஆசைகளாய் குடிகொண்டிருக்கும்- இந்த முடிச்சுகளை அகற்றும் தியான முறைதான் புத்தர் கண்ட 'விபாசனா'தியான முறை.

சிறுநீரகம் கெட்டுப்போனால் டயாலிசீஸ் செய்வதைப்போல- நம் மனம் திரிபு நிலைக்கு வரும்போதெல்லாம் உடனுக்குடனே நம் மனதையும் நாம் டயாலிசீஸ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மனிபூரக மையம் நம்மை செவ்வனே வைத்திருக்கும்..இல்லையெனில்..அறைகுறையாய் தன் பணியை முடித்து - ஃபைலை அடுத்த மையத்திற்கு தள்ளிவிடும்..
அடுத்த மையம் என்ன செய்யும்....?
தொடர்வோம்.....

Thursday, March 5, 2009

இதயம் ஒரு கோவில் - அனாகதம்


இறைமயமும் ஒருமைனிலையும் ஒருங்கே அமைந்த முதல் மையம் சகஸ்ராரம். அங்கு பொறி புலன் ஒடுங்கி - சும்மா இருப்பதே சுகமெனு உயர் நிலையில் இருந்த நாம்- நம் இருப்பை உலகுக்கு அறிவிக்க ஒரு எண்ணம் பிறந்து நெற்றி எனும் ஆக்ஞாவில் சுயத்தை உணர்ந்தோம். எண்ணிய அந்த எண்ணத்தை மொழிக்கூறின் ஊடாக விசுக்தி எனும் தொண்டைகுழி வழியே பேசினோம். நாம் ஒன்றை பேசுவது அடுத்தவரை நோக்கியோ அல்ல்து சமுகத்தையாதாகவோ இருக்கும். பேசியவர் ஒருமை எனும் தன்னிலையிலும், கேட்பவர்கள் ஒருவராகவும், பலராகவும் இருக்ககூடும் என்பதால்,நம் கருத்துக்கு ஒப்புதலோ, எதிர்ப்போ எழுவது தவிர்க்க முடியாத கட்டாயம். இந்த மெய்மையை நாம் வாழ்வின் கணந்தோறும் அனுபவிக்கிறோம். அதற்கான எதிர்வினையை காட்டும் மையமாகத்தான் அனாகதம் என்கிற உணர்வு மையம் நமக்குள் இயங்கிக்கொண்டிருக்கிறது.

தன் நெற்றியில் பிறந்த ஒரு எண்ணத்தை ஒருவர் இப்படி அறிவித்தார்.
"நான் உங்கள் வீட்டுப் பிள்ளை..........."கையை நீட்டி உலகுக்கெல்லாம் காட்டி தன்னை - நல்லா கேட்டுக்கோங்க "நான் வேற யாருமில்ல...உங்க வீட்டு பிள்ளை....."-அப்படின்னாரு.
இதை ஒத்துக்கறவங்களும் இருப்பாங்க- மறுப்பவங்களும் இருப்பாங்க- எதிர்க்கறவங்க என்ன கேட்க முடியும்..?"அது எப்படி நீ எங்க வீட்டு பிள்ளை ஆக முடியும்,,?" அப்ப்டிங்கற கேள்வி வரற்துக்கு முன்னாலியே, அடுத்த வரி வரும்.."இது ஊரறிந்த உண்மை..." அடடா உங்களுக்கு இந்த உண்மை தெரியலன்னா நான் செய்யட்டுங்கிற மாதிரி எதிர்ப்பை எதிர்கொள்வதற்கு முன்னரே- தற்புரிதலுக்கான விடையையும் தந்திருப்பார்.
அவருக்கு சரி- நாம் ஒன்றைசொல்லி சமுகம் கேள்வி எழுப்பும்போது - விடையும் விளக்கமும் தரும்முன்னர் இந்த மையம் அதிரும், துடிக்கும்.."ஆ..நான் சொன்னதை யாரும் ஒப்புக்கலையே.."வெம்பும்.

அனாகதம் எங்கிருக்கிறது- நம் உடலில் கழுத்துக்கு கீழே - இதய்த்திற்கும், நுரையீரலுக்கும் நடுனாயகமாய் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. இதயத்தின் வேலை உதிரத்தை நொடிதொறும் சுத்தம் செய்து உடல்முழுவதற்கும் அனுப்புவது. நுரையீரலின் வேலை -உடலின் காற்று வரவு செலவை மேற்பார்வையிட்டு மேலாண்மை செய்தல்.
இதயம் இயல்பாகவே துடித்துக்கொண்டிருக்கும். ஒரு ஆரோக்கியமான உடல் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்க வேண்டும், சுவாசம் எத்தனை முறை ஏறி இறங்கவேண்டும் என்றெல்லாம் முறையான கணக்கு உண்டு. இதெல்லாம் நமக்கு தெரியாமல் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை எதிர்கொள்ள முடியாமல், ஒன்று இதய துடிப்பை கூட்டிக்கொண்டோ, அல்லது குறைத்துக்கொண்டோ துன்பப்படுகிறோம்.

நம் உடலின் ஆதார சக்கரங்களின் இயல்பு பற்றி இன்னொரு குறிப்பு தருகிறேன். எப்படி நெற்றி எண்ணியதை வாய் பேசியதோ - இந்த சங்கதியை இப்படி உணர் என இதய்த்துக்கு அறிவு சொல்லி இதயம் உணருமோ அதைப்போலவே, சமயங்களில் கீழிருக்கும் மையங்கள் நெற்றியை தங்களுக்கு ஏற்றமாதிரி நெற்றியை சிந்திக்க சொல்லும்.
கயிறு பாம்பாகி பயமுறுத்துவதும், பாம்பு கயிறாகி தூக்கி வீசப்படுவதும் இதனால்தான்.

இந்த மையத்தில் உதிர ஓட்டம் எப்படி தடையில்லாமல் நடக்கிறதோ இறந்துப்பட்ட செல்கள் ஒதுக்கப்பட்டு - நித்தமும் நவனவமாய் புது மூலக்கூறுகள் உருவாகிறதோ அதைப்போல நாம் பார்க்கும் நிகழ்வுகளின், கேட்கும் நிஜங்களின் வீர்யத்தையும், படிக்கும் விபரீதங்களையும், பார்த்து, கேட்டு, படித்து முடித்தவுடன் வெகு இயல்பாக அதை புது ஓட்டத்திற்குரிய சிந்தனை பாதையில் கொண்டு செலுத்த வேண்டும். இல்லையெனில் உணர்வு மையம் உங்களை அங்கிருந்து நகரவிடாது. நம் உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்துவிடும்.

ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பயணம் செய்கிறோம்- சாலையில் ஒரு கொடூர விபத்து பார்க்கிறோம். எது எங்கே இருக்கிறதென்றே தெரியாத நிலை.எனென்ன வகையான விளைவுகள் நிகழ்கிறது கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒருவரால் அடுத்த மூட்ரு நாளுக்கு சாப்பிட முடியவில்லை. அனாகதம் அந்த காட்சியை திரும்ப திரும்ப நெற்றியில் வைத்து பார்க்க வைத்து அதிலிருந்து மீல முடியாமல் ஆட்டுவிக்கிறது. இன்னொருவர் பார்த்ததுமே மயங்கிவிட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டுபோகவேண்டிய நிலை. இன்னொருவர் "ராங் சைடுல வந்திருக்காரு அதான் மாட்டிக்கிட்டாரு" தர்கரீதியாக சிந்திக்கிறார். ஒருவர் "சின்ன வயசு ஆளா "என்கிறார்.வயதை வைத்து மரணத்தை ஞாயப்படுத்திக்கொள்ளும் தனக்குதான் நீதிபதி இவர். இன்னொரு ஆசாமி இருக்காரு அவர் என்ன செய்வாரு தெரியுமா.."ஒரே தூக்கா தூக்கி இருக்கான்யா..ஒடம்பு சட்னி ஆயிருச்சி" என ரசிக்கிறார். இதைப்போல சொல்லிக்கொண்டே போகலாம்.

இதை நாம் பட்டியிலிட காரணம்- நாம் என்ன செய்வோம் என நினைத்து பார்ப்பதுதான். அனாகத மையத்திலேயே அதை சுமந்துகொண்டிருக்கப் போகிறோமா..? அல்லது "சரி. விதி வந்துச்சி நடந்துச்சி. பாவம் அந்த ஆன்மா சாந்தி அடையட்டும், அந்த குடும்பம் கஷ்டம் இல்லாம கரை ஏற வழி காட்டுடா ஆண்டவான்னு" அடுத்த நிகழ்வுக்கு தயாராகப்போகிறோமா..?

அனாகத மையத்தின் அடுத்த இயல்பு இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி பாவித்தல்.ஆம் லாட்டரியில் கோடி விழுந்தால் இன்ப அதிர்ச்சியில் மாரடைப்பு. விழவில்லை எனில் துன்ப அதிர்ச்சியில் மாரடைப்பு. 
கிரிக்கெட்டில் கடைசி பந்தில் ஆறு ரன் அடித்தால் ஒருவர் சாகிறார். அடிக்காவிடில் இன்னொருவர் சாகிறார்.
அனாகத மையத்தை மிக சரியாக கையாள வேண்டும். நம் மனதின் ஒட்டுமொத்த உணர்வுகளின் கிடங்கு இது.கோபம்,எரிச்சல்,வெறுப்பு,அன்பு,கருணை,இன்னும் என்னென்ன உண்டோ அத்தனைக்கும் குத்தகைதாரர் இவர்தான். மனிதருக்கு வரும் சகல நோய்க்குமான அடித்தளம் இந்த மையத்தில்தான் இடப்படுகிறது. மனதுக்கும் சசுவாசத்துக்கும் நேரடி தொடர்பு இருப்பது போல், மனதுக்கும் இதயத்துக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. அதனால்தான் விழிப்பில்லா மனம் சட்டென அதிர்ச்சியில் உறைய இதயம் படபடவென துடிக்க துவங்குகிறது.

இதயம் வேகமாக துடித்தால் -சுவாசம் எகிறும்- சுவாசம் எகிறினால் மந்துக்கு அளவற்ற ஆக்சிஜன் போய் - என்ன செய்வது எந்த மையத்திற்கு ஆணையிடுவது என தெரியாமல்- வாய் குளறல்- ஒரு அதிர்வை கண்டதும் ஒரு சிலருக்கு வாந்தி, மயக்கம். இன்னும் சிலருக்கு சிறு நீர் தானாய் கழிதல், பெரும்பாலானோருக்கு மாரடைப்பு.ரத்த குழாய் வெடிப்பு.

பயப்படவேண்டாம். பின் இந்த மையத்தை எப்படித்தான் மேலாண்மை செய்வது..?
கத்தரை பாருங்கள். தூய நெஞ்சில் பேரொளி பிரகாசிப்பது தெரிகிறதா..?சீதையிடம் அனுமன் நெஞ்சை பிளந்து காடினானே- அதைப்போல- நன்கு உணரப்பட்ட இறைனிலையை அல்லது இயற்கை ஒழுங்குனிலையை அங்கு பதியன் போடுவதுதான். உணர்ச்சிகளின் கட்டுக்குள் சிக்கி விடாமல்- அறிவாலும், விழிப்புணர்வினாலும் நாம் இந்த மையத்தை மேய்க்க வேண்டும்.
மிக சரியாக நிர்வகிக்கப்படும் அனாகதத்தால் துன்பமில்லை - நோயுமில்லை- உணர்ச்சிவசப்படுதல் இல்லை.
எல்லாமே நம் கட்டுக்குள். கட்டாவிட்டால் தொடர்விளைவுகளை சந்திக்க அடுத்த மையம் தூண்டப்படும். எப்படி,,,?
மீண்டும் தொடர்வோம்..... 

Wednesday, March 4, 2009

திருநீலகண்டர்தான்..எல்லோரும்.


இறை மையமான சகஸ்ராரம்-தொடர்ந்து நம் சுயம் துலங்கும் ஆக்ஞாவாகிய நெற்றிப்பொட்டு - இப்போது நாம் இறங்கி வந்திருக்கும் இடம் விசுக்தி.
பாம்பினைக்கொண்டு பார்கடலைக் கடைந்து கிடைத்த அமிர்தத்தை தேவர்கள் பருக,துணைப்பொருளாய் உருவான ஆலகால விஷத்தை சிவபெருமான் பருகினார். அந்த விஷம் உள்ளிறங்காமல் சக்தி தன் கைகளால் சிவனின் தொண்டையில் அழுத்த விஷத்தின் விஷத்தன்மைமுறிந்தது. அன்றிலிருந்து சிவன் திருனீலகண்டர் ஆனதாய் கதை ஒன்று உண்டு. கதையாக கேட்கும் வரைதான் இது கதை.

நம் உடலில் விசுக்தி என்று சொல்லப்படும் இந்த மையம் வெகு சிறப்புதன்மைகளைக்கொண்டது.நம் தொண்டை இங்குதான் உள்ளது.உந்தி கமலத்து காற்றை மேலுழுப்பி நாவை மேலன்னத்திலும்,கீழன்னத்திலும் தொட்டசைத்து 
மொழியாய் பேச அடுத்தவருக்கு கேட்கிறதே -அந்த ஓசையை எழுப்பும்- குரல்வளையும் இங்குதான் உள்ளது. நாக்கில் வைக்கப்பட்ட உணவானது சுவை அரும்புகளால் உணரப்பட்டு, பற்களால் அரைப்பட்டு விழுங்கியதும் உணவு பைக்கு போகிறது அல்லவா..?அந்த் கிடங்கிற்கு உணவை எடுத்து செல்லும் உணவு குழாயும் இந்த விசுக்தி மையத்தில்தான் உள்ளது. நாசியின் வழயாக சுவாசிக்கிறோமே, அந்த மூச்சுக்குழாயும் இந்த மையத்தில்தான் உள்ளது.ஆக விசுக்தியின் சங்கமத்தில் குரவளை,உணவுகுழாய்,மூச்சுகுழாய் என மூன்றும் அணிவகுத்து நிற்கிறது.

இந்த மையம் அடைப்பட்டால்- உணவு உள் போகாது-பேசமுடியாது- சுவாசிக்க முடியாது.வெளியே இருந்து வரும் உணவை உள்ளே அனுப்பவும், உள்ளேயிருந்து எச்சிலையோ ,சளியையோ வெளியே எடுக்கவுமென இந்த மையம் செய்யும் ஒவ்வொரு பணியும் விசித்திரமானவை. உணவும்,சுவாசமும்,பேசும் சொல்லும் இந்த மையத்தை கடக்க வேண்டும். அதனால்தான் நம் முன்னோர்கள் "கண்டம் கடத்தல்" என்றொரு பிரயோகத்தை கையாண்டார்கள். கண்டம் என்றால் ஆபத்து என ஒரு பொருள்கொண்டிருக்கிறோம். சாதாரண ஆபத்தல்ல. உயிருக்கு விளையும் ஆபத்தை கண்டம் என சொல்லி வருகிறோம். சிலர் எனக்கு தண்ணியில் கண்டம். எனக்கு பயணத்துல கண்டம் என சொல்வதுண்டு. 

உண்மையில் அதுவல்ல பொருள்- இறக்கும் தருவாயில் உள்ள ஒருவருக்கு அவர்தம் குடும்பத்தினர் வரிசையாய் தண்ணீர் ஊற்றுவார்கள். அப்படி ஊற்றுகையில் அது கண்டத்தை கடக்கவேண்டும்.அப்படி கடக்காமல் அது திரும்பிவிடுமானால் அவர் இறப்பை அடைகிறார். எத்தனை பேர் வாழ்வில் இதை பார்த்தாயிற்று.

சிவபெருமானுக்கு இருக்கும் அதே கண்டம்தான் நமக்கும் இருக்கிறது. இதில் ஒரு சந்தேகமும் வேண்டாம். சிவனுக்காவது விஷத்தை முறிக்க சக்தி தேவைப்பட்டாள். நமக்கு அதுவும் தேவை இல்லை.அனைத்தையும் நம் தொண்டையே பார்த்துக்கொள்கிறது. ஆம் நம் ஒவ்வொருவரின் தொண்டையும் விஷத்தை முறிக்கும் வல்லமையை இயற்கையிலேயே கொண்டுள்ளது. நாம் உண்ணும் அன்றாட உணவில் அமிர்த மயத்தோடே, விஷமும் இருக்கிறது. அதை தினமும் இந்த தொண்டைதான் முறித்துக்கொண்டிருக்கிறது. நாமும் திருனீல் கண்டர்கள்தான்.

இந்த மையம் மிக நடுனிலையானது. நீதி நேர்மை தவறாதது. விழுங்கும் கவள உணவில், முடியோ,கல்லோ,அல்லது ஒவ்வாத ஒன்றை - கிரிக்கெட் விளையாட்டை, சீரியல பார்த்தபடியே விழிப்பின்றி நாம் விழுங்கிவிடலாம். ஆனால் அய்யா 'தொண்டைமான் 'அவ்வளவு எளிதில் அதை உள்ளே விட்டுவிட மாட்டார். அந்த நொடிப்பொழுதில் ஆய்ந்துணர்வார், ஒவ்வாத ஏதேனும் இருக்குமெனில் அது உள்ளே போகாமல், உணர்த்தப்பட்டு "பாவி கல்லை விழுங்க பார்த்தியே"என்று மென்மையாய் கடிந்து அதை வெளியே துப்பும், குமட்டுகிற மாதிரி பாவிக்கும். தொலைக்காட்சியில் ஆழ்ந்த நாம் சுயத்துக்கு வந்து, கருத்தாய் அந்த் துணுக்கை எடுத்துப்போட்டுவிட்டு, மீண்டும் தொலைகாட்சியில் ஆள்வோம்.

தவிர்க்கமுடியாமல் பொய் சொல்ல வேண்டிய சூழ்னிலை வரும்போது இந்த மைய்த்துக்குரிய நம் 'தொண்டைமான்' அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. காரணம் எண்ணம் ஏதும் அற்ற சகஸ்ராரத்திலிருந்து வாழ்வின் நிமித்தம் நாம் நெற்றியிலிருந்து சிந்தித்த ஏதோ ஒரு எண்ணத்தை, மூலாதாரத்திலிருந்து பெற்ப்பட்ட சக்தியின் உதவியோடு வாய்வழியாய் பேசுவது இந்த விசுக்தியினால்தான். இயல்பாகவே நம் உடல் தூய்மையின் இருப்பிடமாய் திகழ்கிறது. இதை பெரும்பாலும் நாம் புரிந்து கொள்வதில்லை. அதனால்தான் தன் முதலாளிக்காக பொய் சொல்ல வேண்டிய சூழ்னிலையில், அதை செய்துவிட்டு, அதற்கான சுய பரிகாரமாய், தொண்டை எச்சில்கூட்டி விழுங்கி தன் பொய்மையை விழுங்கும். இதயம் ஒரு கணம் அதிரும்..'ஆ..நம்மாளு பொய் சொல்லிட்டாரா.." வயிற்றில் ஒரு பந்து உருளும். இப்படி எல்லா மையங்களுமே ஒரு அதிர்வுக்குள்ளாக, மனம் அதை ஞாயப்படுத்தும். பிறகே உடலில் சகஜ நிலை வரும். நம் உடலும்,மனமும்,உயிரும் சாதாரணமான விஷயங்கள் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

எண்ணமாக இருக்கும் வரை அது வேறு யாருக்கும் தெரியப்போவதில்லை. பேசிவிட்டாலோ..அதற்கு பின் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு எஜமானர்களாகிவிடுவார்கள். பேசிய பேச்சுக்கு நாம் பொறுப்பேற்கவேண்டிய கட்டாயம் உண்டாகிவிடும். அதனால்தான் விசுக்தி மையத்தை நாம் நடுனிலை மையம்,நீதி மையம். உடலின் சோதனை சாவடி என்றெல்லாம் அழைக்கிறோம்.

நம் முன்னோர்கள் தோளில் துண்டு அணிவதை பார்த்திருக்கிறீர்களா..? ஆமா பெரியமனுஷனாட்டம் கழுத்துல ஒரு துண்டு என கேலி பேசுவதை கேட்டிருப்பீர்கள். உண்மையில் இந்த துண்டு அணிதல் என்பது ஒவ்வொரு மனிதரிடமும் இருக்கும் நடுனிலை தன்மையை வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாகும். பெரியவர்கள் அந்த துண்டை வலது பக்கத்திற்கும், இடது பக்கத்திற்கும் சமமாக இருக்குமாறு அணிவார்கள். இதன் அர்த்தம் நான் எந்த பககமும் சாய மாட்டேன். உண்மையின் பக்கமே இருப்பேன் என்பதன் வெளிப்பாடே.இப்போது நம் அரசியல்வாதிகள் மட்டும்தான் துண்டு அணிகிறார்கள். கழுத்தில் சமனிலையாய் சுற்றாமல், ஒரே பக்கமாக அரையும் குறையுமாக தொங்கும். அப்புறம் அவர்களிடம் நாம் எப்படி நடுனிலை தன்மையை எதிர்பார்க்கமுடியும்..?

நம் விசுக்தியில் உணவிலிருக்கும் விஷம் மட்டுமல்ல- கருத்து பொருள் மூலம் நுழைய பார்க்கும் விஷமும் முறியவேண்டும். நடுனிலை உணரப்படவேண்டும்.
நாம் எண்ணிய எண்ணம் இறைனிலையிலிருந்து, அதன் சத்தியத்தின் பொருள் உணர்ந்த நிலையிலைருந்து எண்ணப்பட்டிருந்தால்.,நாம் பேசும் வார்த்தைகளால் யாருக்கும் எந்த தீங்கும் நேரப்போவதில்லை. மாறாக ஏதோ பேசினோம் என பேசினால், கேட்பவர்கள் எதிர்வினை காட்டுவார்கள். அதை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். நம் விழிப்பற்ற தன்மையால் ஏற்படும் முதல் விபத்து இங்கிருந்துதான் துவங்குகிறது. வாழ்கை போராட்டமாவது பேசுவதிலிருந்துதான். இதற்கு பிறகு நாம் அறிவு நிலையிலிருந்து விலகி, நடுனிலையிலிருந்து விலகி, அடுத்த உணர்வு மையமான அனாகத்திற்கு வந்து அனுபவிக்கும் வேதனைகள்....
அடுத்ததில் தொடருவோம்.....
 

Tuesday, March 3, 2009

ஆக்ஞா என்றோர் அதிசயம்


ஆக்ஞா என்றோர் அதிசயம்

காஞ்சிபுரம் நமக்கு தெரியும்- தென்னகத்தின் கோவில் நகரம். வரதராஜ பெருமாள் கோவிலைப்பற்றியும் அறிந்திருப்பீர்கள். அந்த கோவில் தொடர்பாக நடந்த ஒரு வழக்கு உங்களுக்கு நினைவிருக்கிறதா..? ஆம்..நம் கோவில்களில் பொதுவாக யானையை வைத்திருப்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்..? அப்படி ஒரு யானைக்காகத்தான் வழக்கு நடந்தது.

எதிலும் பேதம் பார்க்க தெரியாத நம் முன்னோர்கள் அனைத்தையும் முறைப்படுத்தி செய்துவிட்டுப்போனார்கள். நம் தொடர்ச்சியில் அது தொய்ந்துவிட்டது.  யானையின் நெற்றியில் வடகலை நாமம் போடுவதா..? தென்கலை நாமம் போடுவதா..? இதுதான் வழக்கு. பார்த்தாரு நீதிபதி விவகாரமான பிரச்சினைதான்-ஆனாலும் தீர்ப்பு தந்தாகணும் "வருஷத்துல வடகலை நாமம் 6 மாதம், தென்கலை நாமம் 6 மாதம்" என்றார். இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது.சிவாலய யானைக்ளுக்கு எந்த பிரச்சினையுமில்லை, நிம்மதியாக பட்டை போட்டுவிடுகிறோம். யானைகளின் ஆக்ஞாவாகிய நெற்றிக்கே இந்த பாடென்றால் நம் நெற்றியின் பாட்டை புரிந்து கொள்ளுங்கள்.

நமது நெற்றி பெருவெளியைத்தான் ஆக்ஞா என்கிறோம். அந்த மேடையில் பெண்கள் திலகமிட்டுக்கொள்கிறார்கள்.ஆண்கள் திருமண்ணை குழைத்து சைவர்களாக இருந்தால் குறுக்காக மூன்று கோடுகளை பட்டையாகவும், வைணவர்கள் நாமமாகவும் இட்டுக்கொள்கிறார்கள். அதிலும் பிரிவுண்டு மேற்சொன்ன மாதிரி வடகலை,தென்கலை,ஆரஞ்சு நிற சூரணத்தில் ஒரே கோடாக போட்டுக்கொள்ளுதல் என பல.
கிறிஸ்துவர்கள் இம்மாதிரி எதையும் நெற்றியில் இட்டுக்கொள்வதில்லை என்றாலும், அவர்கள் வணங்கிமுடித்ததும் கைகளால் இட்டுக்கொள்ளும் மானசீக சிலுவை நெற்றியில்தான் முடிக்கப்படுகிறது. இசுலாமியர்களும் எந்த சின்னத்தையும் அணிவதில்லை என்று சொன்னாலும், அவர்களின் தொழுகை முறையே, குனிந்து நிமிர்ந்து தம் நெற்றியை மண்ணில் வைத்து தூண்டல் ஏற்படுத்துவதேயாகும். தினமும் ஆறுவேளை தொழுகை நிமித்தம் அவர்தம் நெற்றியில் உருவாகும் கறுப்பான அடையாளம் அவர்களுக்கான கௌரவம் என்பதை யாராவது இசுலாமிய நண்பர்களிடம் விசாரித்து பார்த்தால் விளங்கும். மேல் நெற்றியில் ஒருவித கறுப்பு மையை அணியும் இசுலாமிய அன்பர்களும் உண்டு.
பிரம்மனை வணங்கும் ஒரு பிரிவினர்- சந்தனத்தை குழைத்து நெற்றியின் வலது இடது முனைகளில் முத்திரையாக இட்டுக்கொள்வார்கள். புத்தமதத்தை சார்ந்த ஒரு பிரிவினர் இப்படி தினமும் போட்டு அழித்துக்கொண்டிருக்காமல் நிரந்தரமாக மூங்கில் குச்சியால் சூடே வைத்துக்கொள்கிறார்கள். இப்படி மனித நெற்றி உலக முழுமையும் ஏதோ ஒரு விதத்தில் முக்கியத்துவ்ம் தரப்பட்டு கொண்டாடிவந்திருக்கிறது.

நாம் இதுவரை வேற்றுமைகளில் நம்மை அடையாளப்படுத்திக்கொள்வதையே மனமுவந்து செய்துவந்திருக்கிறோம். மனித நெற்றி அனைவருக்கும் பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு உண்மையாகும்.
இன்றும் நம் பள்ளீசெல்லும் குழந்தைகளும் சரி. பெரும் நிறுவனத்தில் வேலை செய்யும் அதிகாரிகளும் சரி, யோசிக்கும்போது நெற்றியில்தான் கை வைக்கிறார்கள். முடிவெடுக்க முடியாமல் நாம் திணறும் பொழுதுகளில் எல்லாம் முதலில் பாதிப்புக்கு உள்ளாவது நெற்றிதான்.

நெற்றி நம் ஜீவன் துலங்குமிடம். இப்படிகூட சொல்லலாம். ஒரு சின்ன கற்பனை - வலதுகாதின் வழியாக ஒரு கம்பியை இடது காது வழியாக வெளியேவருமாறு செருகுவோம். இதேபோல உச்சியிலிருந்து ஒரு கம்பி, நாசிவையாக உச்சிக்கு ஒரு கம்பி, இரண்டு கண்கள் வழியாக பிந்தலைக்கு இரு கம்பிகள் என செருகி பார்த்தால் இவை அனைத்தும் ஒரு கூடு புள்ளியில் அதிர்வோடு சந்திக்கின்றன . அந்த அதிர்வுபுள்ளிதான் ஆக்ஞா என்கிற நம் புருவ மத்தி. தியானம் செய்யும்போது இந்த புருவமத்திதான் கவனிக்கபடுகிறது.படத்தில் காட்டியபடி..நமக்கான உயிராற்றலும், உணர்வாற்றலும்,மன ஆற்றலும் சகஸ்ராரம் என்கிற எண்ணமற்ற ஒருமை புள்ளியிலிருந்து, logic, மற்றும் sensitiveஆக இயங்கும் வலதுமூளை, மற்றும் இடது மூளை வழியாக பிரிந்து, பின்னர் ஒரு எண்ணமாக அடுத்த நெற்றி மையத்தில் குறுக்காக வெட்டி இணைகிறது. மற்ற புள்ளிகளிலும் இதைப்போலவே பெருக்கல் பெருக்கலாக வெட்டி இணைகிறது.

இது எதற்காகவென்றால் - நேர்மறை எதிர்மறைகளுக்கிடையில் நம் வாழ்வு நடக்க வேண்டும் என்பதற்காக..
பல பில்லியன் வருடங்களாய் இந்த் உலகின் தோற்றத்துக்கான காரணம் அறியமுடியவேயில்லை. இன்னும் நாமும் தேடிக்கொண்டே இருக்கிறோம். வலது மூளை எரிகிற ஒன்றை பார்த்து இது நெருப்பு என அடையாளப்படுத்தும். இடது மூளை உடனே "ஆம் அது சுடும் "என்று சொல்லும். நடுமூளை இப்போது நெற்றியில் தீர்க்கமாக முடிவெடுக்கும். "அதை தொடக்கூடாதென்று"- இந்த முறையில்தான் கணப்பொழுதுகளில் இவ்வளவு படிநிலைகளுக்குள் இயங்கி நம் உயிராற்றல் வேலை செய்கிறது.ஆக நம் வாழ்விற்கான எல்லா தீர்மானங்களையும் எடுக்குமிடம் நம் நெற்றி என புரிகிறதா..? அதுதான் நம் முகவரி அட்டை. அங்கிருந்தபடிதான் நம் சுயம் வேலை செய்கிறது.

மேலாண்மை தத்துவத்தின்படி- இரண்டுபேர் சொல்கிற கருத்தை வாங்கி ஒருவர் முடிவெடுப்பதென்பது சிரமமான வேலை. நம் நெற்றி கால்காலமாய் இதைத்தான் செய்கிறது. அது சுறுசுறுப்பாய் செயல்பட வைக்க அதன் மீது தூணட்ல் ஏற்படுத்தவே திருனீரு பூசுதலும், நாமம் இடுதலும்,குங்குமம் இடுதலும்,தரையில் கொண்டு வைத்து தேய்ப்பதும். 
"மூலாதாரத்து மூண்டெழு கனலை 
காலாலெழுப்பி கருத்தறிவித்தே.."-என்று ஔவை சொல்லும் காலால் கருத்தறிவ்க்குமிடம் இந்த நெற்றியே.இங்குதான் நாம் எதையும் காட்சியாககூட பார்க்கிறோம்.அங்கு பளிச்சென ஒன்று தோன்றிவிட்டால் நாம் முடிவை எட்டிவிட்டவர்களாகிறோம். "விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து.." என்ற இடமும் நம் நெற்றியே.

இடகலை-பிங்கலை-சுழுமுனை என்கிறோம் அல்லவா அவற்றிலிருந்து- புறப்படும் மூன்று மெல்லிய நரம்புகள் இந்த நெற்றி மையத்தில்தான் இணைகின்றன. இது ஒரு சிலருக்கு மெல்லிய பச்சை நிறத்தில் நெற்றியிலேயே தெரியும். நீங்களும் பார்த்திருப்பீர்கள். அதி முக்கியம் வாய்ந்த அந்த நரம்புகளில் நேர்மறையான் தூண்டல்களை ஏற்படுத்தவும், அந்த நரம்புகளை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவுமே நெற்றி பரப்பில் 'சில்லென்ற "உணர்வை தந்து பரபரவென முடிவெடுத்தலில் ஓயாமல் இயங்கும் நெற்றிக்கு சந்தனம்,திருனீரு,வெங்கலசிலுவை,ஈரபூமியோடு உரசல் எல்லாமே. 

முன்னோர்கள் வெவ்வேறு விதங்களில் ஓரே மாதிர்யான உண்மையை கண்டிருக்கிறார்கள் என உணர்வதில் எந்த தவறும் இல்லை.

காலையில் குளித்து முடித்து-நெற்றியில் திருமண்-குங்குமம் இட்டுக்கொள்வது -அனுதினமும் நாம் நமக்குள் எடுத்துக்கொள்ளும் சத்தியப்பிரமாணம் அன்றி வேறில்லை. அது என்ன சத்தியப்பிரமாணம்.."இறைவா நான் இங்குதான் இருக்கிறேன். என் சுயம் ஒளிர்வதாக. இங்கிருந்து நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உன் முடிவு.அது அன்பில் தோய்ந்து,ஒழுக்கத்தில் மிளிர்ந்து,விழிப்பில் நனைந்து - எனக்கும் இந்த உலகுக்கும் நன்மையை சேர்க்கட்டும்."என்பதுதான் அது. சர்வ நிச்சயமாக நெற்றியை தூண்டும்போது மட்டுமே இந்த் எண்ணம் தோன்றுவது அனுபவித்தவர்களுக்குமட்டுமே தெரியும். இனி நீங்கள் அன்புஅவித்தால் உங்களுக்கும் புரியும்.

அப்படி நெற்றி மையத்திலிருந்து முடிவெடுக்க தவறினால் என்ன நிகழ்ந்து விடும்..? முடிவெடுக்கும் பொறுப்பை அடுத்த மையம் ஏற்றுக்கொள்ளும். அது எம்மாதிரியான முடிவை எடுக்கும்..?
தொடர்ந்து சந்திப்போம்.....


 

வெறும் ஆட்டமல்ல கரகாட்டம்


சகஸ்ராரத்தைப் பற்றி பேசுகையில் கரகாட்டத்தைப் பற்றிப் பேசாமல்விட்டால் நம் ஆதி தமிழர்களுக்கும் அவர்தம் பொருண்மைகளுக்கும் அநீதி இழைத்தவர்களாகிவிடுவோம். தமிழரின் ஒவ்வொரு பழஙகலையும் சாதாரணமானதல்ல. வாழ்வியலின் நகரும் போக்கில் விளையாட்டாய் சொல்லிவைத்தது மட்டுமல்லாமல் அதை கண்முன்னேயும் நிகழ்த்தி காட்டியவர்கள்.

மனித வாழ்வின் தேடலில் உணவு,உறையுள்,உறவு போக மிஞ்சியதெல்லாம், அவனது உயிர்,உடல்,மனம் பற்றிய தேடல்களே என்றால் மிகையில்லை.அவ்வகையில் கரகம்,சிலம்பம்,கும்மி,கோலாட்டம் என அதன் வரிசையில் வருகிற எல்லாமே உடல்,உயிர்,மன தத்துவங்களை சொல்லவந்த பயிற்சி முறைகளே ஆகும்.

கரகாட்டத்தில் என்ன இருக்கிறது..?திருவிழாவின் போது, அதுவும் கிராமத்தில் மட்டும்தான் அதை பார்க்க முடிகிறது. அசிங்கமாக அறைகுறை ஆடையோடு, கொச்சையான இசையும் தாளமும் என முகம் சுழிப்பீர்கள். அதை நாம்தான் அப்படி ஆக்கிவிட்டோம். நம் பொழுதுபோக்குக்காக நாம் செய்த பாவம் அது.

நம் கலாச்சாரத்தில் கும்பம் எனும் சொல்லுக்கு அலாதியான இடம் உண்டு. பூரண்கும்ப மரியாதை என்பார்கள். கோவில் கும்பாபிஷேகம் என்பார்கள். கும்பிடுதல் எனும் வார்த்தையே ஏறக்குறைய கும்பத்தையே குறிப்பதாக கொண்டாலும் தவறில்லை. கும்பம் என்பதன் இன்னொரு அர்த்தம் முழுமை அல்லது நிறைவு என கொள்ளலாம். முழுமுதல் கடவுள் வினாயகரை பாருங்கள் கையில் அழகாக கும்பத்தை வைத்திருப்பார். வீட்டில் நடக்கும் எந்த விஷேத்திற்கும் கல்யாணம்.காதுகுத்து,புதுவீடு புகுதல்,எதுவானாலும் அப்பூஜையில் தவறாமல் இடம் பெறுவது இந்த கும்பம்தான்.

தமிழ்தொல்லுலகில் முழுமைக்கு அவ்வளவு முக்கியத்துவம்.எண்ணத்தில் முழுமை,செயலில் முழுமை,இன்னும் பார்வையில்,கேட்பதில், நடப்பதில்,படிப்பதில்,உறங்குவதில் என அனைத்திலுமே முழுமையான வெளிப்பாட்டை காணமுயல்வது தமிழ்தத்துவ உலகின் நோக்கம். அதன் இன்றியமையாமையை குறியீடாக எடுத்து சொல்லவே கரகாட்டம்.

கரகத்தின் அமைப்பு - ஒரு கும்பம் -அதனுள் அரிசி- அரிசி என்பது கிடைத்த உடலுக்கான வாழ்வாதாரம் - கொஞ்சம் நீர்- கொஞ்சம் மணல் - அதை மூடிவைத்த மாதிரி கவிழ்த்துவைக்கப்பட்ட தேங்காய்- தொங்கும் மாவிலைகள்- அதன் மீது பூ அலங்காரம்- உச்சியில் ஒரு கிளி பொம்மை. கரகம் தயாராகிவிட்டது. எடுத்துவைத்து ஆடும் முன் ..

இது நம்க்கு கிடைத்த உடலையும், உயிரையும், மனதையும் அதனை வைத்து நாம் வாழும் வாழ்கையையும் குறிக்கிறது. நம் வாழ்வை நம் தலையிலிருந்துதான் வாழ்கிறோம். நம் பிரதான தலைமை செயலகமே தலைதான்.”கொடுக்கிர தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்கும்” என நம் நாட்டுப்புரங்களில் சொல்லும் சொலவடையை கேட்டிருப்பீர்கள். அந்த கூரை உண்மையில் நம் வீட்டு கூரையல்ல. தலை உச்சி..நம் சகஸ்ராரம். நாம் பிறந்தபோதே அது பிய்க்கப்பட்டு கொடுக்க வேண்டியது கொடுக்கப்பட்டுவிட்டது. தரப்பட்டதை எப்படி வைத்துக்கொள்வது என்பதுதான் பிரச்சினை.

கிளிகளை நீங்கள் பார்த்திருக்ககூடும். தனியாக வரும். ஏதோ ஒரு மரத்தில் அமரும். கனிகளை கொத்தும். தனக்கு ஏதேனும் இடைஞ்சல் வருவதாய் தெரிந்தால் சிறகுகளை விரித்துவிடும். நம்க்கும் நம் தலையில் ஒரு கிளி இருக்கிறது. அதுதான் நம் உயிர் கிளி. அதுவாக பறந்துபோக நாம் விட்டுவிடக்கூடாது. “போ..போதும் பறந்துபோ “என சொல்லி வழியனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிட்டால்..”போனால் போகட்டும் போடா “என்றோ,”போகுதே..போகுதே என் பைங்கிளி வானிலே”-என சோக கீதம் இசைத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

நம் உடலுக்குள் வாழ்வந்த் அக்கிளியை ஆராதித்து, உரிய மரியாதை அளித்து வரவேண்டிய பயிற்சிக்குரியதே கரகாட்டம்.
“உள்ளம் பெருங்கோவில் 
ஊனுடம்பு ஆலயம்..”என்கிற வார்த்தையெல்லாம் ஏதோ மேம்போக்கிற்காக சொல்லப்பட்டவை அல்ல.

தாயின் கருவறையிலிருந்து என்று நாம் ஜனித்தோமோ அன்றே நம் தலையின் மீது நமக்கான கரகம் ஏற்றப்பட்டுவிட்டது. நாம் வாழ்கிற வாழ்கைதான் ஆட்டம்.
கரகத்தை  தவறவிடுவோமா..? அல்லது..எந்த சூழல் வந்தாலும் சரி ,எழுந்தாலும்.விழுந்தாலும்,குனிந்தாலும்,பணிந்தாலும், நிமிர்ந்தாலும்,தவழ்ந்தாலும்,படுத்தாலும்,சாய்ந்தாலும், தலையே போனாலும் கரகம் விழாமல், இறை நமக்கு அளித்த அந்த முழுமையை உணர்ந்து , அதன் மூலம்- எண்ணத்தில்,செயலில்,என சகலத்திலும் முழு விழிப்போடு விளையாடி நாமாகவே கரகத்தை இறக்கி வைக்கப் போகிறோமா..?

கரகாட்டத்தை இன்னொரு முறை மனக்கண்ணில் நிறுத்தி பாருங்கள். நாம் எவ்வளவு வைழிப்போடு வாழவேண்டும் என்பதை சொல்லித் தரும்.