உள் நுழையும் விழிகளுக்கு

படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்..அது படைப்பாளிக்கு தாய்பால் மாதிரி.

Followers

About Me

My photo
வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது. உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்..நம் உயிராம் தமிழோடு பிணைத்துக்கொள்ளுங்கள்.

Thursday, April 16, 2009

நினைப்பதெல்லாம் நடந்துவிடும் .-பகுதி.3. மனம் எனும் மந்திரதேச




"மனமே முருகனின் மயில் வாகனம்" மோட்டார் சுந்தரம்பிள்ளைத் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் இது.
முருகன், குமரன்,ஆறுமுகன் என்றெல்லாம் அழக்கப்பெறும் ஆறாவது சமயத்துக்குரிய வழிபடுக் கடவுள். அறிவுக் கடவுள். முருகனின் வாகனம் மயில். அதாவது அறிவின் வாகனம் மனம்.
"ஏறு மயில் ஏறி வினை தீர்க்கும் முகம் ஒன்று" எனப் பாடினார் அருணகிரி நாதர். வினை தீர்க்க மயிலேறி முருகனா வருவான்..? அறிவானது மனதில் ஏறி வினை தீர்க்க வேண்டும் என்பதே மறைபொருள்.

மயில் ஒரு அசாதாரணப் பறவை.பஞ்சபூதங்களின் உள்ளுணர்வை தெள்ளென உணரக்கூடியது.ஆலாலகண்டனும் ஆடலுக்கு தகப்பனுமான நடராஜனின் பொன்னம்பலத்தை தன் தோகையில் காட்டி நிற்பது.மனமும் அப்படித்தான். போற்றும் விதத்தில் போற்றினால் நம் மனமும் பொன்னம்பலத்தைக் காட்டும். பஞ்சபூதங்களின் மேல் ஏறி நிற்கும். தோகை விரித்தாடும்.பல அதிசயங்களை நிகழ்த்தும்.மனம் பற்றிய அறிவு இல்லா நிலை மனமில்லா விலங்கு நிலைக்கு ஒப்பானது.

மனம் என்பது என்ன..?
மனம் ஒரு பொருளா..? பொருள் எனில் சடநிலையில் அதை உருவாக்கவும், வடிவம தரவும், தோற்றப்பொலிவை மேம்படுத்தவும் மனிதனால் இயலக்கூடும். கடைகளில்கூட ஐ.எஸ்.ஐ முத்திரை குத்திய மனதை ஒரு அரை கிலோ கட்டி தர சொல்லி வாங்கிவிடலாம்.சந்தைக் கடையில் வாங்கும் பொருளல்ல மனம்.

அப்படியெனில் மனம் ஒரு புலனா..?
மனிதனுக்கு உடலும், உடல் சார்ந்த இயக்கத்திற்கு கட்டுப்படும் ஐம்புலன்கள் உண்டு. மெய்,வாய்,கண்,காது,மூக்கு,என்பவையே அவைகள். பஞ்சபூதங்களின் வார்ப்பாக மனிதன் ஐந்து புலன்களை மட்டுமே பெற்றிருக்கிறான்.அவ்விந்தையும் எழுச்சியோடு அழுத்தி எழுந்ததே மனமாகும்.தொண்டர்களை தண்டரை வைத்தே வழி நடத்துவதில் ஞாயம் இல்லை என்பதால் இயற்கை மனதை புலனாகவும் படைக்கவில்லை.

மனம் மனித் உடலின் உள்ளுறுப்பா..?
உடல் பெட்டிக்குள் பூட்டி வைத்த உள் உறுப்புகள் அமைய பெற்றவன் மனிதன். விலா எலும்பு சிறைக்குள்ளும், வயிற்று பானைக்குள்ளூம், இருதயம்,நுரையீரல்,மண்ணீரல்,கணையம், சிறுநீரகம், சிறுகுடல், பெருகுடல், உணவுப்பை என தானியங்கி சாதங்களாய் பல உறுப்புகளை கூட்டாக கட்டமைத்து உள்ளது.இது நாள்வரை எந்த மருத்துவரும் மனம் என்கிற உள்ளுறுப்பைக் கண்டதாய் சொன்னதில்லை.சொல்லவும் முடியாது.மனிதர்கள் பழக்கம் காரணமாக "என் மனசுக்குள் எதுவும் இல்லை"என்று நெஞ்சு பகுதியை காட்டி இதயம்தான் மனம் என்பார்கள்.

மனிதனை வடிவம் தந்து வார்க்கும் மனம் பொருளாக,புலனாக, உள் உறுப்பாக இல்லாத நிலையில் அதன் மூலம்தான் என்ன.?
ஒருவேளை மூளைதான் மனமோ..?வலது கைஅயி உயர்த்த வேண்டுமெனில் அதற்கான உத்தரவை இடது மூளையிடமிருந்து பெறப்படவேண்டும்.தராசு தட்டு போல் வலது இடதாய் பிரிந்து நிற்கும் மனித உடலை எதிரெதிராய் வலது மூளையும், இடது மூளையும் இயக்கிநிற்கிறது. உடல் இயங்க மூளை உத்தரவிட வேண்டும்.சரி. மூளைக்கு உத்தரவிடும் முதலாளி யார்..? பின் எதுதான் மனம்..?

ஒரு எளிமையான கதையை பார்ப்போம்..
காசு திருட ஒருவன் சிறிய உண்டியலில் கையை விட்டான். திரும்ப எடுக்க முடியவில்லை. மருத்துவர்கள் கையை வெட்டவேண்டியதுதான் என்றார்கள். திருடியவன் மிகவும் பயந்துபோனான். கையில் அந்த உண்டியல் செம்போடே போய் வரவேண்டியதாயிற்று. ஒரு நாள் அவனது மனைவி பக்கத்து கோவிலில் யாரோ ஒரு ஆன்ம ஞானி வந்திருப்பதை கேள்விப்பட்டு அவரிடம் தன் கணவனை அழைத்துப்போனாள். ஞானி முழுக் கதையையும் கேட்டு பின்.."இதோ பாரப்பா கைக்கும், செம்பிற்கும் சேதாரமில்லாமல் காப்பாற்ற ஒரு வழி உள்ளது. அந்த உபாயத்தை என்னால் சொல்ல மட்டுமே முடியும்..செய்ய வேண்டியது நீதான்" என்றார். திருடன் சம்மதித்தான்.
"காசுக்கு ஆசைப்பட்டுதானே கையை உள்ளே விட்டாய்..இப்போது அந்த காசு வேண்டாம்..காசு வேண்டாம்..வேண்டவே வேண்டாம்..என நினைத்து கையை வேகமாக உதறு..உன் கை வெளியே வந்துவிடும்" என்றார். அவனும் உதறினான். கை விடுபட்டது. 

இந்த கதையிலிருந்து மனம் என்பது என்ன என்பதை பற்றிய ஓரளவு முடிவுக்கு நம்மால் வரமுடியும். கையை விடுவிக்க ஞானி எந்தப் பொருளையும் பயன்படுத்தவில்லை. வார்த்தைகளை ஒரு கருத்தில் அமைத்துப் பேசினார். பேச்சு என்பது மொழி. மொழி என்பது ஓசை. ஓசை என்பது அதிர்வு. அதிர்வு என்பது காந்தம். காந்தம் என்பது ஆற்றல். ஆம் க்ண்ணுக்கு புலனாகாத ஆற்றல்தான் மனம். mind is nothing but an enrgy.  மனம் என்கிற ஆற்றல் மனித மூளையை ஊடகமாகக்கொண்டு செயல்படும் வான்காந்த ஆற்றல். மனித மூளையிமன் மேலாளர் மனமே. ஒட்டுமொத்த மனித கூட்டத்தின் எசமானன் மனமே.

மனம் என்கிற ஆற்றலுக்கும் மனிதனுக்கும் என்ன தொடர்பு..?
ஒவ்வொரு மனிதனின் உடல் மற்றும் புலன்களின் உள்முக குவிப்பாக அதிர்வோடு இயங்குவதே மனம். மனதின் வெளிமுக தொகுப்பாக இயங்குவதே உடல்.மனமும்,உடலும் இயங்க பாலமாக, சாட்சியாக., சக்தியாக இருப்பதே உயிர். மனம் சொல்வதை உயிர் மொழிபெயர்க்கும், உடல் செயல்பெயர்க்கும்.

சில சமயங்களில் உடலும், புலனும் சொல்வதை மனம் உள்ளுணரும். உடல்,கண்,காது, மூக்கு,வாய் இவைகளில் மனம் இறங்கி வேலை செய்யும். சிவந்து கோபம் கொப்புளிக்கும் கண்களில் உண்மையில் நாம் பார்ப்பது அனல் வீசும் மனத்தையே.தூங்கும் குழந்தையை தட்டிகொடுத்து மென்மையாய் வருடிவிடுவது உண்மையில் கைகளல்ல..தாயின் மனமே. உணர்வோடு புலன் வழி இற்ங்குபோது, புலன்களும், உறுப்புகளும் மன் மயமாகவே மாறிவிடுகிறது. சில தாயரோ..பிள்ளையை "ச்சீ போ சனியனே 'என விரட்டுவர். விரட்டிய கைகளில் வேலை செய்ததும் மனமே.

தாய் தன் பிள்ளையை வருடிகொடுத்தாளா..? விரட்டி அடித்தாளா..?என்பது பற்றி உயிருக்கு கவலை இல்லை. அது வெறும் சாட்சி.மனம் அழுத்தும் சுவிட்சுக்கு மின்சாரத்தை பாய்ச்சுவது மட்டுமே அதன் வேலை.

இது புலன்களில் மனம் இயங்கும்விதம்.சமயங்களில் மனதுக்குள் புலன்கள் இயங்குவதுண்டு.வெளி உடலை நகல் எடுத்தாற்போல் மனதிற்ககும் ஒரு உடல் உண்டு.அவ்வுடலில் உணர்வும் உண்டு.முதுகுக்கு பின்னால் நம்மைப் பற்றி பேசும் சிலரை சட்டென்று திரும்பி பார்க்கிறோமே மனதின் உள்ளுணர்வு தூண்டலே அது.மனதிற்கும் கண்கள் உண்டு. வெளிக்கண் காணா நிலையிலும் அகக்கண் தெளிவுறக் காணும் சக்தி படைத்தது.விசுவரூபம் எனும் இறைப்பேராற்றலை ஞானிகள் இந்த அகக்கண்ணால்தான் காண்கிறார்கள்.முக்காலத்தையும் தரிசிக்கிறார்கள். நம் மனக்கண்களோ ஐஸ்வர்யாராயையும், அஸினையும் பார்ப்பதில்தான் ஆளாய் பறக்கிறது. இது மனதின் குற்றமல்ல. மனக்குதிரையை இயக்க தெரியாதவர்களின் குற்றம்.

மனதிற்கு செவியும் உண்டு. அது மனச்செவி. எங்கும் ஆனந்த பேரொளியாய் இசைக்கும் விசுவநாதத்தை இச்செவியால்மட்டுமே கேட்க முடியும். மனதிற்கு வாய் உண்டு. அது மன வாய்.யாருக்கும் கேட்காமல் பேசும்.
ஔவை அழகாக சொல்லுவாள்.
"கற்கலாம் கேட்கலாம் கண்ணாரக் காணலாம் 
உற்றுடம்பால் ஆய உணர்வு.."-ஔவை குறள் (உள்ளுடம்பின் நிலைமை-1)

மனம் எனும் மந்திர ஆற்றலை மத்தாகக்கொண்டு வாழ்வெனும் பாற்கடலை கடைந்து அமிர்தம் பருகுவதில் மனிதனுக்கு தடை என்ன..?

எல்லாம் சரி...மனதின் முகவரி எது..? அதன் விஸிட்டிங் கார்டு இருந்தால்தானே அதைக் கண்டுபிடித்து அழைத்து வேலை வாங்க முடியும்.

மனமெனும் ஆற்றலின் இருப்பிடம் எது..?அதன் ரிஷிமூல ஊற்று எங்கிருந்து..?தங்கப்புதயலைத் தேடி மனிதர்கள் பய்ணித்த கதை நமக்கு தெரியும்.

வாருங்கள் நாம் மனதின் இருப்பிடத்தைத் தேடி செல்வோம்.....




3 comments:

  1. நன்றாக இருந்தது, வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நன்றாக இருந்தது, வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. தொடர்ந்து எனெழுத்த்துகளைப் படித்தும், வாழ்த்தியும் வரும் தங்களுக்கு என் நன்றி.

    ReplyDelete