உள் நுழையும் விழிகளுக்கு

படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்..அது படைப்பாளிக்கு தாய்பால் மாதிரி.

Followers

About Me

My photo
வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது. உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்..நம் உயிராம் தமிழோடு பிணைத்துக்கொள்ளுங்கள்.

Thursday, March 19, 2009

பல்லாங்குழி ஆடலையோ..பல்லாங்குழி.


இந்த கட்டுரை எழுதப்படுவதற்கு முழுமுதல் காரணாமாய் பின்புலத்தில் இருந்து என்னை இயக்கியது இணையக் குழும எழுத்தாளர்களில் மகாப்பெரியவர் ஐயா நடராசன் கல்பட்டு நரசிம்மன் அவர்களும், அவர்களுடைய "பல்லாங்குழியும் பல்போன பாட்டியும்" என்கிற நாடகமும்தான். அதை நீங்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டுமென்பது எனது பேரவா. இதோ இணைப்பையும் தந்திருக்கிறேன்.http://groups.google.com/group/palsuvai/browse_frm/thread/3e7015198b6e4d15?hl=en கொஞ்சம் பெரிதாக இருக்கிறதே என்று நீங்கள் உங்கள் அவசர உலகை காரணம் காட்டி நழுவிச்சென்றால் ஒரு பெரிய நல் இலக்கியத்தை இழந்த நட்டத்தை அடைவீர்கள்.

சரி நாம் ஏற்கனவே பல விளையாட்டுகளுக்கு பின்னால் இருக்கும் தாத்பர்யங்களையும், தத்துவங்களையும் பற்றி மிக விரிவாக பேசிவருகிறோம். அதில் இன்றைய சுற்று ஆட்டம். பல்லாங்குழி.பொதுவாக ஆங்கில வழக்கப்படி ஆட்டங்களை..உள்ளரங்க ஆட்டம், வெளியரங்க ஆட்டம் என பிரிப்பதுண்டு. அவ்வகையில் இந்த ஆட்டம் உள்ளரங்க ஆட்டம் . இருவராக ஆடக்கூடிய ஆட்டங்கள் நிறைய உண்டு. நம் விஸ்வனாதன் ஆடும் சதுரங்கம் முதல், நம்ம ஊரு பொண்ணு உலகையே கலக்குதே அந்த கேரம் வரைக்கும் நிறைய ஆட்டம் இருந்தாலும்.. அவற்றிற்கெல்லாம் இல்லாத தனிபெரும் பழமையும், தத்துவ தன்மையும் பல்லாங்குழிக்கு உண்டு.

இருவராக ஆடும் எல்லா ஆட்டங்களுமே எதிரில் விளயாடுபவர்களை வீழ்த்தும் ஆட்டம். பல்லாங்குழி மட்டுமே வெற்றிக்கும் தோல்விக்கும் பின்னால் ஒரு சத்தியத்தையே சொல்லக்கூடிய ஆட்டமாகும்.பல்லாங்குழி மனையின் அமைப்பை கவனித்தால் பெரும் வியப்பு தோணும் எனக்கு. ஆம்..ஒரு மீனின் வயிற்றை ஒரு பகுதியில் மட்டும் கிழித்து அப்படியே திறந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு அமைப்பு. ஒரே மனையாய் மூடியிருந்தது இப்போது பாதி பாதியாய் பிரிந்து, இந்த பக்க ஆட்டக்காரரக்கு பாதி அந்த பக்க ஆட்டக்காரருக்கு பாதி. அவர்களுக்கான பாதியில் இருப்பது ஏழு குழிகள். ஒன்று கூடாது..ஒன்று குறையாது. ஏழு குழிகள். மூடிய போது ஏழு முழுக்குழிகளாய் இருந்தவை ஆட்டம் துவங்கியதும்..ஏழு அரைக்குழிகளாக பிரிந்துவிட்டது.
இந்த ஏழு என்றதும் பலருக்கும் பல உண்மைகள் தோணலாம்..அதென்ன மிக சரியாய் ஏழு என்று..?ஆம் நம் கலாச்சரத்தில் ஏழுக்கு இருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை யாராலும் மாற்றமுடியாது. நாம்தான் இன்னும் உணராமல் இருக்கிறோம்.

இந்த பல்லாங்குழிமனையே ஒரு மனித உடல்தான். மனித உடல்தான் என்ற பிறகு அதைபோய் பிரிப்பானேன்..? பிரிக்கத்தான் வேண்டும். காரணம்..ஒவ்வொரு மனிதனும் இரண்டாகத்தான் இருக்கிறோம். ஆம்..இவ்வுலகின் ஒவ்வொரு ஆணும் பெண்ணுமே அர்த்தனாரிகள்தான்.நம் உடலில் உச்சந்தலை சகஸ்ரம் உட்பட இருக்கும் ஆறு ஆதாரசக்கரங்களே இந்த ஏழு குழிகள்.சிவபெருமான் தன் உடலில் பாதியை சக்திக்கு கொடுத்துவிட்ட கதை நமக்கு தெரியும். இதை நம் ஒவ்வொருவரின் வாழ்கையோடு பொருத்திபார்க்க முடியுமா..? 
நிச்சயமாக முடியும். இந்த உலகமே ஈர்ப்பு தத்துவத்தின் அடிப்படையில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்மைக்குள்ளும் சரிபாதி பெண்மை இருக்கிறது. அதுபோலவே ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சரி பாதி ஆண்மை இருக்கிறது. அது மறைத்துவைக்கப்பட்டிருக்கிறது. இதை காலம் உணர்த்தும்போது ஒரு ஆண் தனக்குள் இல்லாததான பெண்மையை ஒரு பெண்ணிடம் தேடுவதும், ஒரு பெண் தன்னிடம் இல்லையென கருதும் ஆண்மையை ஒரு ஆணிடம் தேடும் தன்மைதான் உடல் ஈர்ப்புக்கான அடிப்படை.

அந்த ஈர்ப்பு ஒரு முடிவுக்கு வந்து பந்தத்தில் நிறைவுறும்போது - இணைகளாய் மாறிய அவர்கள் அர்த்தநாரிகள் ஆகிறார்கள்.தம் நேசங்களை நிறைவு செய்துகொள்ளும் பொருட்டு அன்பு காட்டுபவர்களாகவும், விட்டுதருபவர்களாகவும் மாறுகிறார்கள்.தனி தனி உடல் ஆனாலும் வாழ்வின் வெவ்வேறு தளங்களில் மனதால் இணைந்தே அவர்கள் முடிவெடுத்து வாழவேண்டியிருக்கிறது.

சரி பல்லாங்குழி ஆட்டத்திற்கும் இந்த தன்மைகளுக்கு என்ன தொடர்பு...? 
நம் வாழ்வின் ஆதாரமாய் விளங்கும் நம் ஆதாரசக்கரங்கள் ஆண் - பெண்ணாய் பிரிந்து அதே நேரத்தில் ஒத்த முடிவில் இணைந்து செயல்படும் தன்மையதாய் உள்ளதன் குறியீடே பல்லாங்குழியாட்டம்.
இன்னொரு விதத்தில் சொல்வதானால் - கோவில் அரசமரத்தடியில் இருக்கும் 'நாகல்'பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, நம் உடலின் ஆறு ஆதார மையங்களை உச்சி சகஸ்ராரத்தில் இணைப்பதான குண்டலினி பாம்பின் மடித்துவைத்த தோற்றமே பல்லாங்குழி மனை. மிக பழமையான பல்லாங்குழி மனைகளில் பாம்புகள் செதுக்கப்பட்டிருப்பதை நீங்களே பார்க்கமுடியும்.

ஆணின் குண்டலியினில் பெண்ணின் ஆளுமை, பெண்ணின் குண்டலியினில் ஆணின் ஆளுமை , மற்றும் அத்தியாவசியமே.. பல்லாங்குழி ஆட்டத்துக்கான அடிப்படை. ஒரு ஆண் தனியாக முடிவெடுப்பதும், ஒரு பெண் தனியாக முடிவெடுப்பதும்..வாழ்வில் என்ன வகையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு பெரிய உதாரணங்கள் தேவை இல்லை . மகாபாரதத்தில் சூதாடியபோது ஆண்கள் முடிவெடுத்தார்கள். இராமயணத்தில் மானுக்கு ஆசைப்பட்டு கணவன் ராமனையும், இலக்குவனையும் இயக்கியபோது சீதை முடிவெடுத்தாள்.
அரிச்சந்திரபுரானத்தில்- தன் உண்மை பேசும் கொள்கையிலிருந்து தவறக்கூடாது என்பதற்காக மன்னன் அரிச்சந்திரனும் - அவனது மனைவியும் சேர்ந்து முடிவெடுத்தார்கள்.

இருவர் ஒத்திசைந்து முடிவெடுத்து காலவோட்டத்தில் துன்பம் வந்தாலும் நிலையான இறுதி இன்பத்தை அடைய இப்படி எடுக்கப்படும் முடிவுக்கு பல்லாங்குழியாட்டத்தில் நிருபணம் உள்ளதா..?
உள்ளது. அந்த ஏழு குழிகள் சொன்னோமல்லவா..? அவை வேறெதுவுமில்லை..
1.சகஸ்ராரம்
2.ஆக்ஞா
3.விசுக்தி
4.அனாகதம்
5.மணிபூரகம்
6.சுவாதிஷ்டானம்
7.மூலாதாரம்.

இந்த ஏழின் முழுமையும் இந்த ஆட்டத்தில் சரி பங்காய் பிரிக்கப் பட்டிருக்கிறது.
நம் ஞானியரின் பார்வையில் இந்த ஏழு சக்கரங்களும் இன்னொரு பார்வையில் சுட்டிக்காட்டபட்டுள்ளன.
சகஸ்ராரம் துவங்கி விசுக்திவரை - ஆகாயம் அல்லது மேலோகம் அல்லது சொர்க்கம் எனவும், அனாகதம் துவங்கி சுவாதிஷ்டானம்வரை பூலோகம் எனவும், கடைசி மூலாதாரம் அதற்கு கீழ் நரகம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இப்போது பல்லாங்குழி மனையை விரித்துவைத்துக்கொள்ளுங்கள். சோழிகளை எடுங்கள். எவ்வளவு சோழிகள் தெரியுமா ஒவ்வொரு குழிக்கும் எட்டு எட்டு. இது எண்குணத்தின் குறியீடு. இந்த எட்டு குணங்களைக்கொண்டுதான் நாம் நம் ஒவ்வொரு உணர்வுகளையும் இந்த உலகை நோக்கி பிரதிபலிக்கிறோம்.
விளையாட இருவர் அமர்ந்தாயிற்று. அவர்தம் முறையே இடது பக்கம் ஒருவருக்கும் வலது பக்கம் ஒருவருக்குமாக இருக்கும் முதல் குழியே சகஸ்ராரம். ஆட்டத்தை துவங்குபவர் எந்த குழியில் இருந்தானாலும் விளயாட்டை துவங்கலாம்.

permutation and combination தத்துவப்படி- முடிவுகள் வெவ்வேறாக இருந்தாலும் - மேலோகம் என்று சொல்லக்கூடிய 
முதல் மூன்று குழிகளிலிருந்து துவங்கப்படும் ஆட்டம் மிகுந்த லாபம் தரக்கூடியதாகவும், பூமி, நரகம் என்று சொல்லக்கூடிய பகுதியில் துவங்கும் ஆட்டத்தின் போக்குகள் வேறு மாதிரி இருப்பதையும் நீங்கள் விளையாடி பார்த்தால் கண்கூடாக அனுபவிக்கலாம்.

இந்த வாழ்வு எதிர்மறைகளுக்கு இடையில் ஒத்திசைந்து நேர்மறையாய் வாழவேண்டியதன் தேவையை பல்லாங்குழி ஆட்டம் உணர்த்துவதை நீங்களே உணரமுடியும்.
சிறு வயதில் என் காது கேட்காத பாட்டி - என்னோடு விளையாடும்போது ஜெயித்துக்கொண்டே இருப்பாள். நான் அழுவேன். ஒரு முறை சொன்னாள்.."இந்த குழியிலேர்ந்து எடுத்து ஆடு..நீயும் ஜெயிப்பே.."என்று.
ரகசியம் அதுதான். நம் முன்னோர்களின் அத்தனை உருவாக்கங்களும் ஞானமேயன்றி வேறில்லை. 

3 comments:

  1. அருமை.

    எஸ்.ராவின் இந்த பதிவையும் படியுங்கள்.

    http://www.sramakrishnan.com/deep_story.asp?id=183&page=

    ReplyDelete
  2. அரும் பெரும் வித்தகர் ஐயா நீர்!
    நின் அரும் பெரும் பணி என்றும் தொடரட்டும்.


    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  3. பல்லாங்குழி விளையாட்டுல தூள் கிளப்புவேன்! அதுல இவ்வளவு சேதி இருக்கா!!எவ்வளவு விஷயங்கள் சொல்கிறீர்கள்!

    எங்களுக்கும் அறியத்தந்தது மிக மகிழ்ச்சி!

    ’ஊட்டம்’என்ற அந்த சொல்லுக்கு மிக பொருத்தம் தங்களின் பின்னூட்டம்!

    மேலும் மேலும் ஆர்வத்துடன் தாலாட்டுக்களை எழுத வைக்கும் தங்களின் பின்னூட்டம் கண்டு மிக மகிழ்ச்சி. அங்கு வந்து சென்றதற்கு நன்றி.

    ReplyDelete