உள் நுழையும் விழிகளுக்கு

படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்..அது படைப்பாளிக்கு தாய்பால் மாதிரி.

Followers

About Me

My photo
வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது. உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்..நம் உயிராம் தமிழோடு பிணைத்துக்கொள்ளுங்கள்.

Friday, February 27, 2009

அடங்குவோம் - அடக்குவோம்


இறைவா..,
என்னையொரு 
பானையாய் வனைந்து 
பொன் பொருள் என 
நீ இட்டு நிரப்பியும் 
போதாமல் 
இன்னும் உன்னிடம் 
குறையிரந்துகொண்டே இருக்கிறேன் 
நான்.

கீதாஞ்சலியில் ரவீந்திரனாத் தாகூர் எழுதிய கவிதையின் ஒரு பகுதியின் மொழிபெய்ர்ப்பு இது. நம்மை காலக்குயவன் வனைந்த பானையாய் பார்க்கும் பார்வை நிறைய பேரிடத்தில் வெளிப்பட்டிருகிறது.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டுவந்தான் ஒரு தோண்டி-அதை
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி.

இந்த வரிகளும் நமக்கு மிகவும் பரிச்சயமானதே.
பரம்பொருளிடம் குறையிரந்து நிற்றலும்- குயவன் தந்த பானையை வாழும் முறை தவறி போட்டுடைத்தலும் நம்மில் மிக இயல்பாகவே நிகழ்ந்து வருகிறது.
ஆங்கிலத்தில் ஒருவர் இறந்து போனதை நாசூக்காய் தெரிவிக்க- " kicked the bucket.."- என்றொரு பதத்தை பயன்படுத்துவார்கள்.
நாம் ஒருவர் மரணித்ததை எப்படி தெரியப்படுத்துகிறோம்..?
'இறந்துட்டார்' 'காலமாயிட்டார்' 'செத்துட்டார்' 'மறைஞ்சிட்டார்' 'சிவலோக பதவி அடைஞ்சிட்டார்' 'வைகுந்த பதவி அடைஞ்சிட்டார்' 'இயற்கை எய்திட்டார்' 'இறைவனடி சேர்ந்துட்டார்'
இப்படி நிறைய இருந்தாலும்- வழக்கத்தில் இருக்கும் இன்னொரு பதம் 'தவறிட்டார்'

இந்த சொல்தான் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. என்ன தவறிட்டார்..? எதுல தவறிட்டார்..? ஏன் தவறிட்டார்..? என பல கேள்விகளை எழுப்பி பார்த்தபோது- கிடைத்த விடை வியப்பாய் இருந்தது.
அவர் அடங்க தவறிட்டாராம்.

அடக்கம் அமரருள் உய்க்கும்-அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும்.

அமரருள் நம்மை சேர்க்கும் அடக்கம் வெறுமனே அவை அடக்கம் அன்று. புலனடக்கம், மன அடக்கம், ஆன்ம அடக்கம். ஆம் இவற்றை அடக்காவிட்டால் கிடைக்கும் வெகுமதி ஆரிருள். சாதாரண இருள் அல்ல ஆர் இருள்.
ஆரிருள் என்பது மீண்டும் பிறத்தலாய் இருக்கலாம் என்பது என் ஊகம்.

தன் உயிர் தான் அறப் பெற்றானை-ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.

தன் உயிர் தான் அறப்பெறுதல் என்பது தற்கொலையா..? இல்லை. நம் உயிரை எமன் வந்து எடுத்து செல்லகூடாது. நாம் அவனை அழைக்க வேண்டும். "வாப்பா வந்து எடுத்துக்கோ.."என நிறைவாய் அவனிடம் சேரவேண்டும். விளக்கொளி வேண்டும், வேண்டாம் என நினைக்கும்போது அணைத்துப்போட்டுக்கொள்வது மாதிரி நம் மரணம்..நம் தெளிவில் இருக்க வேண்டும். 

இந்த நிலை சாத்தியமா..? சாத்தியப்பட்டிருக்கிறது..! வாழ்வை தவமாய் எண்ணி வாழ்ந்தவருக்கு. வாழ்வை நிறைவாய்..பற்றற்று வாழ்ந்தவருக்கு.இறையின் முகவரி தேடுதலே வாழ்வின் பயனாய் எண்ணி வாழ்ந்து தேடிக் கண்டவர்களுக்கு.

நிறைவுறா வாழ்வின் முடிவு- நிறைவுறா வாழ்வின் துவக்கமேயன்றி வேறில்லை. புலனட்ங்கி. மெய்யுணர்ந்து, இறையிடம் ஐக்கியப்படாத வாழ்வுமுறை தவறானதே. அதை அறிவிக்கவே..,அப்படி இறந்தவரின் வீட்டு முன் தப்படித்தல்.

கோவில்களுக்கு சென்றால் உள் நுழைந்ததும்-துவஜஸ் கம்பம் என ஒன்றை நாம் பார்க்க முடியும். கருடகம்பம் என்றும் சொல்வதுண்டு. ஏழு அடுக்குகளாக உயர்ந்து- உச்சியில்- குறுக்கான மூன்று செவ்வக சட்டத்தில் வெண்கல மணியை தொங்கவிட்டிருப்பார்கள். அதே கம்பத்தின் கீழ்- இரு திருவடிகளை செதுக்கி வைத்து பலிபீடம் என ஒன்றை வைத்திருப்பார்கள். அங்கு ஆடு, மாடுகளையெல்லாம் பலியிட முடியாது. மனதையும் அதன் மும்மலங்களையும், அந்த பாதாரவிந்தங்களில் சரணாகதியோடு பலியிட்டால்-மனித வாழ்வின் ஆறு ஆதார சக்கரங்களை கடந்து-உச்சியில் பொன்னம்பலத்தில் ஞானமணியோசையை கேட்கலாம்.வாழும்போதே அந்த ஓங்காரத்தின் உட்பொருளை உணரவேண்டும்.உணராமல் மூச்சை நிறுத்தியவர்கள் தவறியவர் பட்டியலில் சேர்க்கப்பட்டு-" வாழும்போதுதான் ஓங்காரத்தை கேட்க தவறினாய்..இப்போதாவது கேள்.." என்பதற்காக, சங்கு,சேகண்டி இதெல்லாம்.
எல்லா சடங்கிற்கும் பின் இறுதி பயணத்திற்கு- வாகனம் நாங்கு பேர் தோளில் ஏறியதும் "கோவிந்தா" என்றோ
"ஒம் நமச்சிவாய" என்றோ விண் முட்ட முழக்கமிடுவது- ஐந்தெழுத்து மந்திரத்தையும், எட்டெழுத்து மந்திரத்தையும் ,அதன் செம்பொருளையும் வாழும் காலத்தில் உணர்ந்தாயா என தெரிய வில்லை. இப்போதாவது கேள் என்பதாக வழினெடுக கோஷமிடப்பட்டு..இறுதியில் அடங்க தவறியவருக்கு நடப்பதன் பெயரே"நல்லடக்கம்"

அடக்கி,அடங்கி, நம் இறுதி நாளை இதுவென அறிவிக்கும் கம்பீரமத்தை இறைவன் அருளால் பெறுவது ஒரு கலை. அதற்கும் அவன் அருள் வேண்டும். முயற்சிப்போமா..?
சொர்க்கமும்,வைகுந்தமும் வாழும்போதே பார்க்கவேண்டியவை என்பது என் கருத்து.

1 comment:

  1. அடக்கம் என்ற ஒற்றை வார்த்தையிலிருந்து இத்தனை வாசகங்களா!!!! அபாரம்.. நல்வாழ்த்துக்கள். இனி என்னால் அடக்கமாக இருக்க இயலுமா என்று தெரியவில்லை:-)

    அன்புடன் என் சுரேஷ்

    ReplyDelete